305. |
பஞ்சின்
மெல்லடிப் பாவைய ருள்ளமும்
|
|
|
வஞ்ச
மாக்கடம் வல்வினை யும்மரன்
அஞ்செழுத்து முணரா வறிவிலோர்
நெஞ்சு மென்ன விருண்டது நீண்டவான்.
|
159 |
(இ-ள்.)
வெளிப்படை. பஞ்சினும் மெல்லிய பாதங்களையுடைய
பாவைபோன்றாரது உள்ளமும், வஞ்சனை செய்யும் மாக்களுடைய
வலிய வினையும், அரனுடைய திருவைந்தெழுத்தையுமெண்ணாத
மடவோர்களது நெஞ்சும், போல நீண்ட பெரிய வானம்
இருளடைந்தது.
(வி-ரை.)
பரவையர் உள்ளம் - பாவையர் - பரவைபோன்ற
விலைமாதரை என்பர். பஞ்சின் மெல்லடி. மைவிழியார் மனையகல்
என்புழிப்போல விலைமாதர்களின் வஞ்சனைக் கோலத்தைச்
சுட்டியது. பின்னர் (307) தம் ஆருயிர், வரன்கை தீண்ட மலர்குல
மாதர்போல் எனக் குலமகளிர் இயல்பை வேறுவைத்துக் காட்டியதும்
காண்க. இனி, இவ்வாறன்றிப் பேதைமை என்பது மாதர்க்
கணிகலம் என்றபடி பொது இலக்கணத்தாற் பேதைமை
யுடைமையினாலும், பெண்மைக்குரிய நாற்குணங்களில் ஒன்றாகிய
மடமையினை யுடைமையினாலும், எவ்வகையானும் இழிவு
குறிக்காமலே பெண்மைப் பொதுப்பெயராக இதனைக்
கூறுவாருமுண்டு.
வஞ்ச மாக்கள்தம்
வல்வினையும் - வல்வினைமாக்கள்
வஞ்சமும் என்று உம்மையைப் பிரித்துக் கூட்டி உரைத்தலுமாம்.
முன் வினையின் பயனாகி வரும் வஞ்சம் மேன்மேலும் வினையை
விளைத்தலால் வஞ்ச மாக்கள் வல்வினை என்றார். வினையின்
வந்தது வினைக்கு விளையாது என்றதும் காண்க. வஞ்ச
வல்வினைக் கறுப்பறு மனத்தடியார்கள் என்று பின்னர்க் கூறுவதுங்
காண்க. வஞ்சமுடைமையால் மக்கள் மாக்கள் எனப்பெற்றனர்.
ஐயறிவுடைய மிருகங்கள் போன்றார் என்பது குறிப்பு.
விலக்கலாகாமையின் வல்வினை என்றார்.
அரன் அஞ்செழுத்தும்
உணரா அறிலோர் - அரன் -
ஆன்மாக்களுடைய பாசங்களை அரிப்பவன். அஞ்செழுத்தும் உணரா
அறிவிலோர் - அஞ்செழுத்தை உணரப் பெறாத மடவோர் என்க.
மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம் தன்னி லொன்று வல் லாரையுஞ்
சாரலே என்று இமயன்றூதர்க்கு அப்பர் பெருமான் இட்ட
ஆணையும் காண்க. விதி எண்ணு மஞ்செழுத்தே என்றபடி
எழுத்து அறிவினுள்ளே உணரப் பெறுவ தொன்றாதலின் உணரா
அறிவிலோர் என்றார். இத்திருவைந்தெழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும்
- பொருளும் - உள்ளீடும் - நிற்குமுறை - ஓதுமுறை முதலியனவும்
உண்டு. இதனை எவ்வெவ்கோட் படுபொருளும் என்ற குரு
தோத்திரத்திலே குறித்தருளினர் எமது மாதவச் சிவஞான முனிவர்
அஞ்செழுத்தின் வகையும் பெருமைகளும் நூல்களிற் பேசப்பெறுவன.
சைவாசாரியார்பாற் கேட்கத்தக்கன. நாயோட்டு மந்திரம் என்று
அதன் பெயர்தானும் சொல்லலாகாது என அறிவிப்பர் திருமூலதேவர்.
மூவர் முதலிகள் கருணையினாற் பஞ்சாக்கரப் பதிகங்களை
அருளினர். மணி வாசகப் பெருமானார் நமச்சிவாய வாழ்க,
நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன் முதலிய
திருவாசகங்களில் பஞ்சாக்கரங்களை அருளினர் என்பர்.
உணரா நெஞ்சும்
- அகவிளக்காகி இருள் கெடுப்பது
ஐந்தெழுத்தாதலின் அது ஏற்றப்பெறாத நெஞ்சு இருண்டிருக்கும்
என்பது குறிப்பு.
இருண்டது நீண்ட வாள்
- தேரோன் கடல்புக மாலை
வந்தது; காலம் செல்ல நீண்ட வான் இருண்டது என்க. பின்வரும்
நான்கு திருப்பாசுரங்களில் அதன் மேல் நிலா முளைத்தலும், அதன்
செயலும், தன்மையும், ஆரூரர் நிலையும், கூறுகின்றார். அதன்மேல்
நான்கு திருப்பாசுரங்களில் காமனையும் அவனது படைகளாகக்
கருதப்பெறும் மதி, கடல், தென்றல் இவைகளையும் நோக்கி நம்பிகள்
கூறும் கைக்கிளைக் கூற்றுக்களாக உள்ள அகப்பெருள்
நிகழ்ச்சிகளைக் கூறியுள்ளார். இரவு காமனது படையாட்சிக்குரிய
காலமாம். இவ்வாறே பரவையார்பால் நிகழும் அகப்பொருட்
செயல்களை 315 முதல் 323 வரையுள்ள திருப்பாட்டுக்களில்
அறிவித்துள்ளார் ஆசிரியர்.
பெரிய புராணமாகிய பெருங்காவியத்திற்கு நம்பிகள்
தலைவராகவும், பரவையாரும் சங்கிலியாரும் தலைவியர்களாகவும்
உள்ளார்கள். அவர் களிடையே நிகழும் அகப்பொருள்
நிகழ்ச்சிகளையும், திருமணங்களையும் காவிய அங்கங்களாகிய
இலக்கணம் பற்றி ஆசிரியர் இவ்விரண்டு இடங்களிலும் எடுத்து
விரித்துரைத்தனர்.1
சேக்கிழார் பெருமானது புராணத்திலே உமாபதி சிவாசாரியர்
பெருமான் அறிவித்துள்ளபடி சிந்தாமணியின் சிற்றின்பச் சுவையிலே
சிக்குண்ட அநபாயருக்கு அடியார் சரிதங்களின் பெருமையை
எடுத்துக்கூறியபின், அவர் விருப்பின்படி இப்புராணம் பாடியருளிய
ஆசிரியர் தாமே அகப் பொருட் சுவைகளை இதில் விரவ வைத்தது
என்னை? என்று ஆசங்கிப்பார்க்குப் பெருங்காவிய அங்கங்களாகிய
இலக்கணம்பற்றித் தலைவன் தலைவியரிடத்து இந்நிகழ்ச்சிகளை
ஓரோர் இடத்துக் குறித்ததே யன்றி மற்றில்லை என்று அமைவுகூறி
விடுக்க. சிவமேமணக்குஞ் செய்யுளெல்லாம் என்று பின்னாட்
புலவர் பாராட்டியமைக்கு இங்குக் குறித்த அகப்பொருட்சுவைப்
பாட்டுக்கள் சிறந்த உதாரணங்களாதலும் கவனிக்க. 159
1 இதன்விரிவை
எனது சேக்கிழார் என்ற நூலில் 3-ம் பகுதியிற்
காண்க.
|