306. “மறுவில் சிந்தைவன் றொண்டர் வருந்தினால்  
  இறும ருங்குலார்க் கியார்பிழைப் பா“ரென்று
நறும லர்க்கங்கு னங்கைமுன் கொண்டபுன்
முறுவ லென்ன முகிழ்த்தது வெண்ணிலா.
160

     (இ-ள்.) மறுவில்.......என்று - “குற்றமற்ற
சிந்தையையுடையாராகிய வன்றொண்டரும் இவ்வாறு
வருத்தமுறுவாரானால், இற்றுவிடுமோ என்று கூறுந்தன்மையை
தாய்த் துவள்கின்ற சிற்றிடையுடைய பெண்களுக்குத் தப்பி யாவர்
பிழைக்கவல்லவருளர்?“ என்ற கருத்துடன்; நறுமலர்......நிலா -
வாசனையுடைய பூக்களை அணிந்த இரவு என்னும்பெண் முன்னே
கொண்டதாகிய புன்சிரிப்புத் தானோ இது என்று காணும்படி
வெள்ளிய இளஞ்சந்திரன் ஒளி வீசிற்று.

     (வி-ரை.) முகிழ்த்தது - இரவியொளி போமளவும்
விளங்காதிருந்த சந்திரன் அவ்வொளிபோய் மாலைவந்து
இருண்டதும், இரவில் முன்பகுதி யிலே ஒளிவீசிவிளங்கிற்று.
முகிழ்த்தல் - அலர்தல். அரும்பாயிருந்தது விரிதல் போன்றதாதலின்
முகிழ்த்தது என்றார். இரவின் முற்பகுதியில் நிலவு இளவொளி
வீசிற்று என்பது கருத்து. பின்னர் முதிர் ஒளி வீசுதலை “நீற்றின்
பேரொளிபோன்றது நீள் நிலா“ என் 308-ம் திருப்பாட்டிற் கூறுதல்
காண்க.

      முன் கொண்ட - முன்பகுதியிலே இத்தோற்ற முறுதலால்
முன் கொண்ட முறுவல் என்றார். இவ்வாறு பிறரை எள்ளும்
நங்கையர் ஒரு புறமாய் மறைந்து சிரிப்பதுபோலன்றி வெளிப்பட
முன்னே முறுவல் பூத்தனள் என்பதும் ஓர்குறிப்பு. ஆயின் அது
முழுச்சிரிப்பாய் நிகழின், பெரியார்பால் அபசாரப்படுவோ
மென்றஞ்சினன் போலக் கொண்ட புன்முறுவல் என்றார்.

      வன்றொண்டர் - இறைவன் விரும்பி வலிய ஆட்கொள்ளும்
பெருமைபெற்ற இவரே இவ்வாறு வருந்துவாரானால் என்க. உயர்வு
சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது.

      இரவிலே முற்பகுதியில் நிலாமுகிழ்த்தல் இவ் வுட்கருத்துடன்
கொண்ட புன்முறுவல்போன் றிருந்தது எனத் தற்குறிப்பேற்ற அணி.

      மறுவில் - உலகத்தில் இவ்வாறு வருந்தும் பிறருடன்
ஒருங்கே வைத்து எண்ணத்தகாது என்பார் மறுவில் சிந்தை என்றார்.
ஈசனருளாலே முன்னை நியதியின்படி நிகழ்வதாதலின்
குற்றமற்றவராயினார் என்பது குறிப்பு.

      இறும் மருங்குல - இடை சிறுத்திருத்தல் பெண்களின்
அழகிலக் கணங்களிலொன்று.

      நறுமலர்க் கங்குல் நங்கை - கங்குல் நங்கையாயின் மலர்
சூடுமோ என்பாரை நோக்கி நறியமலர் பலவுஞ் சூடுவள் என்றார்.
மாலையிலே மலர்கள் அலர்வன என்னும் இயல்பு குறித்த
தன்மையணி. 160