308.
|
தோற்று
மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே |
|
|
சாற்று
மின்பமுந் தண்மையுந் தந்துபோ
யாற்ற வண்டமெ லாம்பரந் தண்ணல்வெண்
ணீற்றின் பேரொளி போன்றது நீணிலா. |
162 |
(இ-ள்.)
தோற்றும்.........தந்து - இவ்வுலகில் பிறக்குமாறு
இறைவன் காட்டும் உயிர்களுக்கெல்லாம் தூய்மையையும், பலராலும்
எடுத்துச் சொல்லப் பெறும் இன்பத்தையும், குளிர்ச்சியையும்
கொடுத்துச் செல்வதே யன்றி; போய்.......பரந்து - பிற எல்லா
அண்டங்களிலும் சென்று பரவி நிலவுகின்ற; அண்ணல்........நீள்நிலா -
பெருமையுடைய இறைவனது திருநீற்றினது வெள்ளிய பெரிய
ஒளிபோன்று நீண்ட ஒளிவிடும் நிலவு விளங்கலாயிற்று.
(வி-ரை.)
நிலா - தூய்மையே சாற்றும் இன்பமும் தண்மையும்
தந்து - போய் - பரந்து - நீற்றின் பேரொளி போன்றது என்று
கூட்டுக. நிலாவுக்கும் நீற்றுக்கும் உவமம். நம்பிகளது சிவக்கண்ணிற்கு
நிலவின் ஒளி சிவவொளிவீசும் திருநீற்றை நினைவு கூர்விக்கு
மாதலின் இங்குத் திருநீற்றொளியினை உவமை செய்தார் என்க.
திருஞான சம்பந்தப் பெருந்தகையார் திருநெல்வாயில்
அரத்துறையில் முத்துச் சிவிகை பெற்றபோது அதன் ஒளி
வெண்ணீற்றின் ஒளியை ஒத்திருத்தலின் அதனைப் போற்றினார்
என்று பின்னர்க் காண்போம்.
சோதி
முத்தின் சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின்
றாதி யாரரு ளாதலின் அஞ்செழுத்
தோதி யேறினா ருய்ய வுலகெலாம் -
திருஞா - புரா - 216
|
திருப்புகலூரிலிருந்து திருஞானசம்பந்த நாயனார்
திருநாவுக்கரசு நாயனாரது வரவுகேட்டு அடியார்களுடன்
எதிர்கொண்டபோது இருதிறத்துத் திருநீற்றுத் தொண்டர் குழாமும்
ஒன்று கூடிய செயல் இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி
அணைந்தன போல்
இசைந்த வன்றே என்று எடுத்துக் கூறுவர்
ஆசிரியர். இங்கு நிலவு நீற்றை நினைவு கூர்வித்தபடி, அங்கு நீறு
நிலவை நினைவு கூர்வித்தமையும் காண்க. பார்த்தவிட மெல்லாம்
பரவெளியாய்த் தோன்றும் பெரியாரது சிவக்கண்ணுக்கு எல்லாம்
சிவமயமாகவே காணுமாறும் உணர்க.
நிலா -
தோற்று மன் உயிர்கட்கெல்லாம் தூய்மையே சாற்றும்
இன்பமும் தண்மையும் தந்து - இந்நிலவுகத்தில் சிருட்டிக்கப்படும்
எல்லா உயிர்த் தோற்றங்களுக்கும், தூய்மை - இன்பம் - தண்மை
என்ற இவற்றையெல்லாங் கொடுத்தல் நிலவின் இயல்பு.
அஃதன்றியும், மற்றும் மேலும் கீழும் உள்ள அண்டங்களினும் தன்
இயல்பைப் பரப்பி நிற்றலும் அதன் பண்பாம். இதனால் இது
திருநீற்றின் பேரொளியினைப் போன்றது. என்னை? நிலாப்போலவே
திருநீறும் தோற்றம் பெறும் உயிர்களுக்கெல்லாம் தூய்மையும்
இன்பமும் தண்மையும் தருவதாம்; எல்லா அண்டங்களிலும் தனது
ஆணை பரப்புவதுமாம். நிலாவானது தோற்றம் பெறும் உயிர்களின்
உடம்புக்கு அளிக்கும் இயல்பைத் திரு நீறானது உயிர்களுக்கு
அளிப்பதாம். நிலா, தோற்றம் பெறும் உடம்புகளுக்குத்தூய்மை -
இன்பம் - தண்மை தந்து வளர்க்குமென்ப. சூரியன் உயிர்
தங்குவதற்குரிய வெப்பம் கொடுப்பன். சந்திரன் உடம்பு வளர்ச்சிக்கு
உரிய தண்மையும் பிறவும் தருவன் என்பது உலகநூற் றுணிபு.
சைவர்க்கு விதித்த மணச் சடங்குகளில் முளைசாத்துத லாகிய
சடங்கிற் சந்திரனுக்குரிய பகுதிகளே சிவாகமங்களிற் கூறப்படுதலும்
காண்க.
தோற்றும் மன்னுயிர்
கட் கெலாம் - என்பதனை
நிலவுக்குக் கூட்டும்போது மன்னுயிர் தோற்றும் அவைக்கெல்லாம்
என்றும், நீற்றிற்கு ஆக்கும்போது தோற்றும் மன் உயிர்க்கு எல்லாம்
எனவும் கூட்டி உரைத்துக் கொள்க.
நீறு
- உயிர்க்குத் தூய்மை தருதல், கட்டிய பாசத்தினின்றும்
நீக்குதலாம். இன்பம் தருதலாவது பிறப்பிறப்புக்களால் வரும் துன்பம்
நீக்கிப் பேரின்பம் தருதல். தண்மைதருதலாவது சுழலார்
துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர் துன்னும் நிழலாவன
என்ற அப்பர் பெருமானின் திருவாக்கின்படி பாச வெப்பத்தினின்றும்
நீக்கிச் சிவனடித் தண்ணிழலிற் சேர்த்தல். சாற்றும் - இதுவேயின்பம்,
பிறவெல்லாம் துன்பம் என நூல்களிற் பேசப்பெறும். நீறு சத்தியின்
இயல்புடையதாதலின் உயிர்களுக்குத் தூய்மை முதலியன தரும்
என்பர். பராவணமாவது நீறு என்பது தமிழ்மறை.
அண்ணல் வெண்ணீறு
- அண்ணல் பூசும் திருவெண்ணீறு.
பூசுவதும் வெண்ணீறு - (திருவாசகம்) திருச்சாழல். வெந்த சாம்பல்
விரையெனப் பூசியே (திருஞான. திருப்பாசுரம் 3). திருவாளன்
திருநீறு திலகவதியார் அளிப்ப (திருநா - புரா - 67). திருவளர்
நீறுகொண்டு திருக்கை யாற்றடவி (திருஞான - புராணம் - 765)
என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.
நீற்றின் பேரொளி
- திருநீற்றினது இனிய பெரிய சிவவொளி
என்க.
வெந்த
சாம்பல் விரையென் பதுதம
தந்த மில்லொளி யல்லா வொளியெல்லாம்
வந்து வெந்தற மற்றப் பொடியணி
சந்தமாக் கொண்ட வண்ணம்...........-
திருஞான - புரா . 828 |
எல்லா ஒளிகளும் மங்கிய காலத்தும் நின்று.
ஒளியாயொளியதன் ஒளியாயொளியதன் ஒளியுந்தணிதரும் ஒளியா
கும் பேரொளிப்பிழம்பான இறைவனது திருமேனியினின்று
ஒளிசெய்தலானும் பிறவாற்றானும் நீற்றின் பேரொளி என்றார். 162
|