310. “தந்தி ருக்கண் ணெரிதழ லிற்பட்டு
 
  வெந்த காமன் வெளியே உருச்செய்து
வந்தென் முன்னின்று வாளி தொடுப்பதே!
எந்தை யாரரு ளிவ்வண்ண மோ?“ வென்பார்.
 164

      இதுமுதல் 4 பாட்டுக்களில் முன் யாவரோடும் உரை
இயம்பாதிருந்த நம்பிகள், தனிமையாகக் காதல் மேன்மேற் படர்ந்து
பெருகியபோது அக்காதலைத் துன்பமயமாக்கும் பொருள்களை
நோக்கி, இயம்பும் உரைகளைக் கூறுகின்றார். காதற்றுன்பமிகுதியால்
இவ்வாறு தனிமையில் இயம்புவது இயல்பு. அது அத்துன்ப மிகுதிப்
பாட்டைக் காட்டும். அதனைக் குறிக்க மேற்பாட்டில் படர்பெருங்
காதல் என்று கூறியதென்க.

      இது மன்மதனைக் குறித்துக் கூறியது. மன்தோபாலம்பனம்
என்பர்.

     (இ-ள்.) எந்தையார் தம் திருக்கண்........தொடுப்பதே -
எந்தையார்தமது நெற்றித் திருக்கண்ணின் தீயிலே பட்டு
வெந்துபோன மன்மதன் வெளிப்பட உருக்கொண்டு இங்கு என்
முன்னே வந்து நின்று அம்பு எய்வதா? (தொடுக்க வன்மையு முடைய
வனாவதா?); அருள் இவ்வண்ணமோ? - அவரது திருவருளும்
இத்தன்மை யுடையதாமோ?; என்பார் - என்று உட்கொண்டு இயம்பி,
மேலும் மொழிவாராயினார்.

     (வி-ரை.) திருக்கண - கண்டாரால் விரும்பப்படும் தன்மை
நோக்க முடைமையால் திருக்கண் என்றார். “நெற்றியிற் கண்கண்ட
கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே“ என்பது அப்பர்
பெருமான் திருவாக்கு. (கோயிற்றிருவித்தம் - 8) “நெற்றியிற் றிகழ்ந்த
ஒற்றை நாட்டமும்“ என அருளினார் பட்டினத்தடிகள். இது
சிவபெருமானுக்கே உரியதாதலின் வேறு அடைமொழியின்றித்
திருக்கண் என்றார்.

     எரிதழல - பிறிதின் இயையு நீக்கிய விசேடணம். “இருநோக்
கிவளுண்கண் உள்ள“ என்றபடி இக்கண்ணின் தழலுக்கு எரிக்காது
குளிர்ச்சி செய்து காக்கும் குணமுமிருத்தலின் அதனின்றும் பிரித்து
வேறு தன்மையைக் கொண்ட தழல் என்றார். அடுக்களையின்கீழ்
வைத்த தழல் பாகம் செய்தும், கூரையில் வைத்த தழல் வீட்டை
எரித்தும் தொழில் செய்தல்போலக் காண்க. ஆதலின் தீ சுடும் என்று
கூறும் பொருளியல்புக்கும் மாறுபாடிலாமையுங் காண்க.

     வெளியே உருச்செய்து - வெந்த காமன் பின்னர் உயிர்
பெற்றானாயினும் உருவிலனேயாவன். ஆனால் இவன் அவ்வாறன்றி
உருவத்துடன் கூடினன் என்க. உருவத்துடன் கூடுதலாவது, செயல்
மிகுதியால் உருத் தோன்றுதல். என்முன் - என் முன்னால்
வரவுங்கூடாத இவன் என் முன்னரும் வர வல்லனாய். சிறப்பும்மை
விகாரத்தாற் றொக்கது.

     வாளி தொடுப்பதே - முன் வருதலே பெருங் காரியம்; அதன்
மேலும் வாளியும் தொடுக்க வல்லனாவதா? என்க. வருதலேயன்றி
என இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது.

     எந்தையார் அருள் இவ்வண்ணமோ - எமது
தலைவனாருடைய திருவருளும் இவ்வாறாவதொன்றோ? திருவருளின்
முன் வரவும், நிற்கவும், வாளிதொடவும் மாட்டாதவன் மதனன்.
தம்பிரான் தம்மையே தோழனாகத் தந்த திருவருள் நிரம்பிய
என்முன் வந்து நின்று வாளி தொடுப்பதாயினன். அவனன்றி ஓர்
அணுவு மசையாதாதலின் இதுவும் அவர் திருவருளின் ஒரு
வண்ணமோ? என்பது. எந்தையுடைய ஆர் (நிரம்பிய) அருள்
என்றலுமாம். 164