314. இன்ன தன்மைய பின்னுமி யம்புவான்
 
  மன்னு காதல னாகிய வள்ளல்பாற் றன்ன
ரும்பெற னெஞ்சு தயங்கப்போம் அன்ன
மன்னவள் செய்கை யறைகுவாம்.
168

     (இ-ள்.)இன்ன ... வள்ளல்பால - (மேலே
சொன்னவையேயன்றி) இவைபோன்ற தன்மையுடைய மொழிகளை
மேலும் சொல்வதற்குப் பொருந்திய காதலை யுடையாராகிய
அருட்கொடையாளராம் நம்பிகளிடத்தே; தன்னரும் ...... அறைகுவாம்
- தனது பெறற்கரிய மனம் பின்னின்று தயங்கிவர முன்சென்றவராகிய
அன்னம்போன்ற பரவை நாச்சியாரது செயலின் திறங்களை இனிச்
சொல்வோம்.

     (வி-ரை.) இப்பாட்டுக் கவிக்கூற்று.

     இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் மன்னுகாதலன் -
மேலே சொல்லியவை போன்றவற்றை மேலும் சொல்வதற்குப்
பொருந்திய காதலை யுடையவன். பின்னரும் இயம்புதல் - மதி -
கடல் - மாருதம் போலவே பிரிந்தார்க்குக் காதலைப் பெருக்கும்
குயில் முதலியவற்றைச் சொல்லுதல்.

      இயம்ப மன்னும் காதலன் செய்கையும், அவர்பால் நெஞ்சு
தயங்கப் போம் பரவையார் செய்கையும் நிகழ்ச்சியில் ஒன்றாகவே
கலந்து ஒருசேர நிகழ்தலின் நம்பிகள் செய்கை முற்றாது தொடரப்
பரவையார் செய்கையை எடுத்துக்கூறுதல் காண்க.

     பின்னர் இருவர் செய்கையும் 326-வது திருபாட்டில் ஒருசேர
வைத்துக் கூட்டித் திருவருளின் வழிச் செய்யப்பெறும் அவர்களது
திருமணத்துடன் முடிபு பெற வைத்த அழகும் நோக்கத் தக்கதாம்.

      காதலனாகிய வள்ளல் - ஏனையோர் காதல்போல் அவரது
காதல் தம்பொருட்டன்றி உலகிற்கு வரையாது கொடுக்கும்
வள்ளற்றன்மைக்காக நிகழ்ந்ததாதலின் காதலனாகிய வள்ளல் என்ற
பெயரோடு சேர்த்துக் கூறினார்.

“மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வாரவர் மேன்மனம் போக்கிட“
(35)

என்று கூறிய முன் தொடர்பைக் காண்க.

     “தேச முய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த
திருவாளன்“ (சண்டீசர் - 60) எனப் பின்னர் இப்புராணத்துக்
கூறுவதுங் காண்க. வள்ளல் - நம்பிகள். வள்ளல் பால் நெஞ்சு
தயங்க(த்தான்) போம் என்க.

      தயங்குதல - மனவேகம் என்னும்படி விரைந்து தொடர்ந்தே
வருந் தன்மையுடைய மனம் அவ்வாறு விரைந்து வராமல் பின்தங்கி
வருதல். வள்ளல்பாற் சென்ற நெஞ்சு திரும்பிவரப் பின்னடைந்தது
என்க. தான் முன்னர்ப் பூங்கோயில் போய்ப்புக்காராயினும் தமது
மனம் நம்பிகளிடத்தே சிறிது தயங்கிப் போந்தது என்பதாம்.

      போம் அன்னம் அன்னவள் - போம் - நெஞ்சு
திரும்பும்வரை நிற்க இயலாதவராயும், போக (நெஞ்சு)
மனமில்லாதவராயும் தடைப்பட்டுப்போகும் என்க. நெஞ்சு தயங்கவே
அதனாலே தடைப்பட்ட நடையாதலின் இயல்பான
அன்னநடையாயிற்று என்பார் அன்னமன்னவள் என்ற நடை குறித்த
உவமையாலே பரவையாரைக் குறித்தார்.

      அரும்பெறல் நெஞ்சு - பெறல் அரும் நெஞ்சு என மாற்றிக்
கொள்க. உமை அம்மையாருக்குப் பொதுக்கடிந்துரிமை (277)
செய்ததும், தங்கள் பனிமலை வல்லி பாதம் கூடும் அன்புருகப்
பாடும் கொள்கை (281) யுடையதும், அதன் பொருட்டுப்
பூங்கோயிலுள்ளாரை அன்பினோடும் பூங்கழல் வணங்க என்றும்
போதுவதாயும் (283) உள்ள நெஞ்சு. அரிய தவத்தாற் பெற்ற
நெஞ்சாதலின் அரும்பெறல் நெஞ்சு என்றார்.

      ‘பல்லூழி காலம் பயின்றரனை யர்ச்சிக்கின், நல்லறிவு சற்றே
நகும்' என்பதன் உன்மை நோக்குக. ‘அரும் பெறல்' என்பதற்குப்
‘பிறரிடம் புகாத' என்று உரைகொள்வாருமுண்டு. அது பொருந்தாமை
காண்க.

      செய்கை - செயலும் சொல்லும். இவை பின்னர், 324 வரை
உள்ள திருப்பாட்டுக்களிற் கூறப்பெற்றுள்ளன. 168