315. கனங்கொண்ட மணிகண்டர் கழல்வணங்கிக்
     கணவனைமுன் பெறுவாள் போல
 
  இனங்கொண்ட சேடியர்கள் புடைசூழ
     வெய்துபெருங் காத லோடுந்
தனங்கொண்டு தளர்மருங்குற் பரவையும்வன்      றொண்டர்பாற் றனித்துச் சென்ற
மனங்கொண்டு வரும்பெரிய மயல்கொண்டு
     தன்மணிமா ளிகையைச் சார்ந்தாள்.
169

     (இ-ள்.) கனங்கொண்ட..........பெறுவாள்போள - மேகத்தின்
தன்மை கொண்ட அழகிய திருநீலகண்டமுடைய தியாகேசரது
திருவடிகளை வணங்கி (அவ்வணக்கத்தின்
பயனாகப் பெற்ற அவரது
திருவருளின் மூமம்) கணவனை மேலே பெறுபவள் போல; இனம்
கொண்ட.......பரவையாரும் - தம்மோடு ஒத்து வாழும் தன்மையுடைய
தோழியர்கள் தம்மைச் சுற்றி வரவும், தம்மிடம் புதிதாய் வந்தடைந்த
காதலுடனே தனபாரங் கொண்டு தளர்வுற்ற இடையையுடைய
பரவையாரும்; வன்றொண்டர்பால்........சார்ந்தாள் - வன்றொண்டராகிய
நம்பிகளிடத்தே தம்மையும் சேடியரையும் விட்டுத் தனியாகப்
போய்த் திரும்பும்போது தமது மனமானது சேர்த்துக்கொண்டு வந்த
பெரிதாகிய மயலையும் மேற்கொண்டவராய்த் தமது அழகிய
திருாமளிமையைச் சார்ந்தார்.

     (வி-ரை.) கனம் கொண்ட மணிகண்டர் - கனம் - மேகம்.
இங்கு அதன் தன்மையைக் குறித்தது. கனம் கொண்ட கண்டர் -
மேகத்தின் கருமை, கொடை, உலகம் காத்தல் முதலிய எல்லாத்
தன்மைகளுக்கும் இருப்பிடமாதல். 297 திருப்பாட்டின்கீழ் “மைவாழுந்
திருமிடற்று வானவன்“ என்றதன் உரைக்குறிப்பைப் பார்க்க. கனம் -
பெருமையுமாம்.

     வணங்கிக் கணவனைப் பெறுவாள்போலப் - பரவையும் -
சூழக் - காதலோடு - மயலும்கொண்டு மாளிகையைச் சார்ந்தாள்
என்று கூட்டிக் முடிக்க.

     கழல் வணங்கிக் கணவனை முன் பெறுவாள்போல - முன்
பெறுவாள் - முன் - காலமுன். வருங்காலத்திலே என்க. போலச்
சார்ந்தாள் என்க.

“அன்னவரே யெங்கணவ ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்“

என்னும் திருவெம்பாவைக் கருத்துங் காண்க.

     முன்னே சென்று வணங்குதற்கும் பின்னே கணவனைப்
பெறுதற்கும் இடையில் மாளிகை சார்தல் நிகழ்ந்ததாதலின்
வணங்கினதாகிய காரணத்தையும் பெறுவதாகிய காரியத்தையும்
கூட்டுவிக்கும் தொழில்போல் மாளிகை சார்தல் நிகழ்ந்ததாம் என்பார்
போல - என்றார்.

     இனங்கொண்ட - தம்மைப்போலவே தம்மிடத்து இனியராய்
ஒன்றாய்க் கூடிய தன்மை கொண்ட.

     எய்து பெருங்காதல் - (எண் கொள்ளாக் காதலினால், முன்பு
எய்தாமல் - 289) இன்று புதிதாய் எய்திய ஒரு பெரிய விருப்பம்.

     தனங்கொண்டு தளர் மருங்குல் - முன்னரே பணைத்ததோடு,
தனங்கள், காதலினாற் பின்னரும் பணைத்த காரணத்தால் மேலும்
தளர்ந்த இடை. “அனங்கன்மெய்த் தனங்க ளீட்டங் கொள்ள
மிக்குயர்வ போன்று“ (282) என்று முன்னர்க் கூறியதற்கேற்பக்
காதலோடுந் தனங் கொண்டு என்றார்.

     தனித்துச் சென்ற மனம் - இனமான சேடியர் புடைசூழத்
தாம் செல்லினும், தமது மனம் தனித்து அவர்பாற் போயிற்று என்பது
குறிப்பு.

     மனம் கொண்டு வரும் பெரிய மயல - தனித்துச்
சென்றதாயினும் தாங்கலாகாப் பெருஞ் சுமையைக் கொண்டுவந்தது
என்பதாம். கொண்டு வரும் - ஒரு சொன்னீர்மைத்தாய்ப் பெற்றுச்
சுமந்து வரும் என்ற பொருளில் வந்தது. மனம் - கொண்டு -
தயங்கப் போன நெஞ்சை மீள அழைத்துக் கொண்டு. போயினது
மனம் ஒன்றேயாயினும் வரும்போது மயலும் மனமுமாக
இரண்டாயிற்று என்க.

     பரவையும் - நம்பிகள் தேவாசிரியனைச் சார்ந்ததுபோலப்
பரவையும் மாளிகை சார்ந்தாள் - என எச்சவும்மை. 169