316.
|
சீறடிமே
னூபுரங்க ளறிந்தனபோற் சிறிதளவே
யொலிப்ப முன்னர்
|
|
|
வேறொருவ
ருடன்பேசாண் மெல்லவடி
யொதுங்கிமா ளிகையின் மேலால்
ஏறிமர கதத்தூணத் திலங்குமணி வேதிகையி
னலங்கொள் பொற்கான்
மாறின்மலர்ச் சேக்கைமிசை மணிநிலா
முன்றின்மருங் கிருந்தாள் வந்து. |
170 |
(இ-ள்.)
சீறடிமேல் ......... ஒலிப்ப - (மாளிகை
சார்ந்த
பரவையார்) தமது சிறிய பாதங்களில் மேலே அணிந்த சிலம்புகள்
அவரது மனத்தினுள்ளே நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அறிந்து
கொண்டனபோல் அதற்குத் தக்கவாறு மெல்லச் சத்திக்க; முன்னர்
வேறொருவருடன்........மேலால் ஏறி - தம்முன் நிற்கும் வேறு
ஒருவருடனும் பேசாதவராய் மெதுவாய் அடிமே லடிவைத்துச் சென்று
மாளிகையின் உப்பரிகையின் மேல் ஏறிப்போய்; மரகதத் தூண் ......
இருந்தாள் வந்து - மரகதத்தால் அமைந்த தூண்களுடன் விளங்கிய
அழகிய திண்ணையின்மேல் ஒப்பற்ற பூம்படுக்கை மீது அழகிய
நிலாமுற்றத்தினருகிலே வந்து வீற்றிருந்தார்.
(வி-ரை.)
ஏறி - மணிநிலா முன்றின் மருங்கு வேதிகையின்
-
சேக்கைமிசை - வந்து - இருந்தாள் - எனக்கூட்டி முடிக்க.
சீறடி
- சிறிய அடி; சிறுமைஅடி - சீறடி என நின்றது. சிறுமை
என்றதில் மை விகுதிகெட்டு முதல் நீண்டு புணர்ந்து முடிந்தது.
நூபுரங்கள் அறிந்தனபோற் சிறிதளவே ஒலிப்ப -
இது
தற்குறிப்பேற்ற அணி. பரவையாரின் மனநிலையை அறிந்தனபோல
என்று செயப்படு பொருளை வருவித்துரைக்க. சிறிதளவே
ஒலித்தலாவது அவற்றின் இயல்பான ஒலி எழாமல் சிறு ஒலியின்
அளவில் ஒலித்து நிற்றல். பரவையாரது மயல் அவரை விரைந்து
நடக்க இயலாமற் செய்ததனாலே அவர் மெல்ல அடிபெயர்த்து
நடந்தனர்; அதனால் சிலம்புகள் மெல்லச் சத்தித்தன. அதனைச்
சிலம்புகளின்மேல் ஏற்றி அவை அறிந்தனபோல் சிறிதளவு ஒலித்தன
என்றார். இச்சிறிய ஒலியின் காரணத்தைக் கூறுவார் பின்னர் மெல்ல
அடியொதுங்கி என்றனர். தமது தலைவருடைய உளவை அறிந்த
பணியாளர் அதனை எவ்வாறு பாதுகாத்து நடந்துகொள்வார்களோ,
அதுபோற் சிலம்புகளும் பரவையாரது மனநிலையை உணர்ந்தபோது
இச்சமயம் நாம் போரொலி செய்து பிறர் கவனத்தை அழைக்காமலும்,
வருந்திய இறைவிக்கு, மேலும் வருந்தந் தராமலும் அடங்கி
ஒழுகவேண்டு மென்பனபோலத் தமக்கியல்பான ஒலியை
அடக்கிக்கொள்வன போலச் சிறிதளவாய் மெல்ல ஒலித்தன என்பது
குறிப்பு.
வேறொருவருடன் பேசாள்
- மற்றுச் சூழ இருந்த தாதியர்
ஒருவருடனும் பேசாதவராகி. மெல்ல அடிபெயர்த்தலும், வாய்
பேசாமலிருத்தலும், ஒருசிறைத் தனித்திருத்தலும் மனநோயின்
மெய்ப்பாடுகளாம். இவ்வாறே நம்பிகளும் யாவரோடும் உரையியம்
பாதிருந்தார் என்றதும் (302) காண்க.
மேலால் ஏறி - மாளிகையின் மேலிடமாகிய உப்பரிகையின்
முற்றம். மாளிகை மீது இலேசாக ஏறிச் செல்லும் இயலுக்கு மாறாய்
அன்று மெல்ல அடிபெயர்த்து ஏற நின்றதால் நீட்டிப்பை
உணர்த்தற்கு ஆசிரியர்
ஏறி என்னாது மேலால் ஏறி என்று உருபு
விரித்து உணர்த்தினார்.
மரகதத் தூணத்து இலங்கும்
மணிவேதிகையில் - மரகதத்
தூண்களுடன் விளங்கும் மணிகளிழைத்த திண்ணையிலே.
நலங்கொள் பொற்கால்
மாறில் மலர்ச்சேக்கை - நன்றாய்
அமைக்கப்பெற்ற பொற்கால்களையுடைய ஒப்பற்ற புதுப் பூக்கள்
பரப்பிய படுக்கை. படுக்கையில் மெல்லிய நறுமணமுள்ள புது
மலர்களைப் பரப்புதல் உயர் வாழ்வுடையார் வழக்கு. இப்போதார்
அமளிக்கே நேசமும் வைத்தனையோ என்ற திருவாசகமும்
(திருவெம்பாவை - 2) காண்க.
மணி நிலா முன்றில்
- அழகிய நிலா முற்றம். மணி
என்பதை முன்றிலுடன் சேர்க்க. மனமகிழ்ந்து இன்பவாழ்வு
வாழ்தற்குத் தக்கவாறு அழகாய் (மாடத்தின் மேற்புறம்) அமைந்த
மேன்முற்றம். மரகதத் தூணும், மணிவேதிகையும், பொற்காலும்,
மலர்ச் சேக்கையும், மணிமுற்றமும் தாம் ஒவ்வொன்றும்
தத்தமக்கியன்ற குளிர்ச்சி தந்து நிலவின் தண்மைக்குத் துணைசெய்து
இன்பம் பெருக்கும் துணைக்கருவிகளாம்.
இருந்தாள் வந்து
- வந்து இருந்தாள். முன்றில் மருங்கு வந்து
வேதிகையிற் சேக்கைமிசை இருந்தாள் என மாற்றிக் கூட்டுக.
இச்செய்கையை இம்முறையிற் சொல்லாது மாறிச் சொன்னது
பரவையாரது மனத் தடுமாற்றத்தையும், மெல்லச் சென்றவர் எப்போது
ஓரிடத்திற் கிடப்போம் என்று செல்வார் போல விரைந்து
சேக்கையில் இருந்தார் எனச் செல்லலின் தாமதத்தையும், இருத்தலின்
விரைவையும் குறித்தது. வந்து என்ற செயலுக்கு முன் இருந்தாள்
என்று கூறியிருக்கும் அழகையும் நோக்குக. காதல் நோய்
உள்ளே வெப்பஞ் செய்தலின் அதனை ஆற்றக் குளிர்ந்த நிலாமணி
முற்றத்துச்சென்று மலர்ச்சேக்கையில் இருந்தார் என்க. 170
|