317.
|
அவ்வளவி
லருகிருந்து சேடிதனை முகநோக்கி
யாரூ ராண்ட
|
|
|
மைவிரவு
கண்டரைநாம் வணங்கப்போ
மறுகெதிர்வந் தவரா? ரென்ன,
இவ்வுலகி லந்தணரா யிருவர்தே டொருவர்தா
மெதிர்நின் றாண்ட
சைவமுதற் றிருத்தொண்டர்; தம்பிரான் றோழனார்; நம்பி
யென்றாள். |
171 |
(இ-ள்.)
அவ்வளவில்.......என்ன - அப்போது பக்கத்தில்
இருந்த தோழியைப் பார்த்துத் திருவாரூரை ஆளும் நீலகண்டராகிய
தியாகராசப் பெருமானை நாம் தொழச் செல்லும்போது வழியிலே
எதிரில் வந்தவர் யாவர்? என்று (பரவையார்) கேட்க;
இவ்வுலகில்......என்றாள் - அவரே பிரமன் மால் முதலிய பெருந்
தேவர்களுக்கும் காணுதற்கரியவராகிய ஒருவர் (சிவபெருமான்)
இவ்வுலகிலே அந்தணராய் உருக்கொண்டு வந்து மாறுபட்டார்
போலக் காட்டி நின்று வழக்கிட்டு ஆட்கொள்ளப் பெற்ற சைவ
முதலாந் திருத்தொண்டராயும், தம்பிரான் றோழராயும், உள்ள
ஆளுடைய நம்பிகள் ஆவார் என்று சொன்னாள்.
(வி-ரை.)
அருகிருந்த சேடி - சேடியார் பலருள்ளும்,
தனித்தபோதும் உடனிருக்கும் உரிமைபெற்றுக் கூட இருந்த பாங்கி
என்க. அதுவரையும் மேறொருவருடனும் பேசாமலிருந்த பரவையார்,
மேலும் மனம் ஆற்றாமையாலும், அப்போது தனித்து அருகு இருந்த
பாங்கியின் உரிமையாலும், சேடியை நோக்கித் தமது மனத்தை
வெளிப்படுத்தும் முறையிலே பேசி, ‘எதிர் வந்தவர் யாவர்?' எனக்
கேட்டார் என்க.
ஆரூர் ஆண்ட
- தியாகராசர் ஆனதால் ஆட்சி
அரசுரிமையாயிற்று என்பார் ஆண்ட என்றார். எக்காலத்தும்
ஆளுகின்ற என நிகழ்காலப் பொருளில் வந்தது.
மைவிரவு கண்டர்
- விடம்போல் மேல் ஏறிச் சாகுந் தன்மை
செய்கின்ற இவ்வேதனையைக் காக்க வல்லவர் என்பது குறிப்பு.
போமறுகு எதிர் வந்தவர்
- போகின்ற வழியிலே அதனிற்
குறுக்கிட்டு அதிலிருந்து மனமாற்றத்தைத் தரத் தக்கவாறு எதிரிலே
போந்தவர்.
இருவர் தேடு ஒருவர்
- சொல்லணி. பெருந் தேவரும் தேடித்
தம்மை எதிர் நின்று காணமுடியாதார், அவர்தாமே எதிராய் வந்து
நின்று. அவ்விருவராலும் காண்டற்கரியாராகியும் இவர் காணும்படி
எளிமை காட்டித் தாமே வந்த எனவும், எதிர் வந்து இவர் மறுப்பவும்
ஆளாக் கொண்ட எனவும் நம்பிகளது பெருமை குறிப்பித்தபடி.
எதிர் நின்று
- எதிராவார் - மாறுபட்டார் - போல்
வழக்கிட்டு நின்று. எதிரிலே நின்று என்றலுமாம்.
ஆண்ட
- ஆளாக வலிந்து கொண்ட தேவரையும் மாலயன்
முதற்றிருவின் மிக்கார், யாவரையும் வேறடிமை யாவுடைய எம்மான்
என் அடியான் (83) என்று வழக்கிட்டு ஆண்டு கொண்ட வரலாறு
மேலே காண்க.
சைவ முதல் திருத்தொண்டர்
- சைவத் திறத்திற்கே
அடிப்படையான பெருந்தொண்டர். பூதபரம்பரையை விளக்கும்
பெருமையுடையார் என்னை? ஏனைத் தொண்டர்கள் இறைவனைத்
தாம் பற்றி யிருப்பாராக, இவர் மறுக்கவும் இறைவனால் விடாது
வலிந்து பற்றப்பெற்றுத் தொண்டு செய்யுந் தன்மையாலும்,
திருத்தொண்டத் தொகையை அருளி, அடியார் பெருமை விளக்கிய
முதல்வராயினமையாலும் முதற்றிருத்தொண்டர் என்றார் என்பது.
சைவ முதல் - ஆதி சைவர் எனக் கூறுவாருமுண்டு. அது பின்னர்
நம்பி என்று கூறுவதாற் பெறப்படுதலின் உரையன்றென்க.
தம்பிரான் தோழனார்
- திருத்தொண்டரேயன்றித் தோழரும்
ஆகியுள்ளார் என்க. தம்பிரான் - உமக்கு நாயகராகிய ஆரூர்ப்
பெருமான் தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம் என்று
அருள் செய்ததுமன்றி, மணக்கோலத்துடன் மண்மேல்
விளையாடுவாய் என்றும் அருளப்பெற்ற பெருமையுடையார் என
அவர்க்கும் பரவையார்க்கும் உள்ள இடையீட்டையும், உரிமையையும்,
தகுதியையும் குறிப்பித்தவாறு.
நம்பி
- அவரது மரபைக் குறித்தபடி. எனவே, பாங்கி தன்
தலைவியின் உட்குறிப்பினையும் மன நெகிழ்ச்சியையும்
அறிந்தாளாதலின் அதற்குத் தக்கபடி யார் என்ற கேள்விக்கு அவரது
பேரடியாராம் பெருமையும், அவர்க்குந் தமக்குமுள்ள உரிமையும்,
மரபினால் மணக்க உரிமை உடைமையும் குறித்த அமைதியும்
அழகும் காண்க. உருத்திர கணிகையர் ஆசாரிய பரம்பரைக்கு
உரிமையாதல் ஆகமங்களுட் காண்க. விரிவு முன்னர் 278 பாட்டின்
உரையிற் காண்க. 171
|