319.
|
ஆரநறுஞ்
சேறாட்டி யரும்பனிநீர் நறுந்திவலை
யருகு வீசி
|
|
|
ஈரவிளந்
தளிர்க்குளிரி படுத்துமட வார்செய்த
விவையு மெல்லாம்
பேரழலி னெய்சொரிந்தா லொத்தன;மற் றதன்மீது
சமிதை யென்ன
மாரனுந்தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி மலர்வாளி
சொரிந்தான் வந்து.
|
173 |
(இ-ள்.)
ஆரம் ........... படுத்து - மணமுடைய கலவைச்
சந்தனச் சேற்றைப் பூசியும், அரிய மணமுடைய பனிநீரை
மழைபோலச் சிறு துளிகளாகப் பக்கங்களிலெல்லாம் வீசித்தெளித்தும்,
குளிரியினது ஈரமுள்ள இளந்தளிர்களை இட்டும்; மடவார்.........ஒத்தன
- (இவ்வாறாகத்) தோழிப் பெண்கள்செய்த இவைகளும்
இவைபோன்றன பிறவுமாகிய எல்லா உபசாரங்களும் முன்னரே பெரு
நெருப்பாய் மூண்ட அதன்மேல் அதனை வளர்க்குமாறு நெய்யையும்
சொரிந்தது போலாயின; அதன்மீது ...... வந்து - அதன்மேலும்
அவ்வழலைப் பின்னும் வளர்க்க வுணவு தருவதுபோல மன்மதனும்
வந்து தனது ஒப்பற்ற வில்லின் வலிமையைக் காட்டிப் பூவாகிய
அம்புகளை மேன்மேலும் எய்தான்.
(வி-ரை.)
ஆரம் நறும் சேறு - ஆரம் - சந்தனம். அதன்
இயற்கைமணத்தை மிகச்செய்ய வாசனைக் கலவை கூட்டியதால் நறும்
சேறு என்றார். சேறு - குழம்பு.
பனிநீர் நறுந்திவலை
அருகுவீசி - பனிநீர் மணத்தாலும்
மென்மையாலும் மிக்கது. அதனையும் மிகுதியாய்ச் சொரிந்தால்
ஆற்றார் என்று சிறு துளிகளாய் அருகெல்லாம் தெளித்தார் என்க.
துளிகளின் சிற்றளவினால் உண்டாம் குணம்பற்றியும், தண்மையும்
மணமும் மிகப் பரப்பப்பெறுந்தன்மைபற்றியும் நறும் திவலை என்றார்.
ஈர இளந்தளிர்க்
குளிரி படுத்து - குளிரி - நீர்க்குளிரி
என்ற ஒரு கொடி. அதன் குளிர்ந்த இளர்தளிர் பரப்பி. குளிரச்
செய்யுங் காரணத்தால் குளிரி எனக் காரணப்பேர் பெற்றது. அதன்
தளிர்; அதுவும் இளந்தளிர்; அவையும் ஈரமுடையன; என
அடைமொழிகளாற் றண்மையைப் பெருக்கியவாறு காண்க. தளிர்
குளிர என்பது பாடமாயின் உரிய இளந்தளிர்களைக் குளிர்ச்சி
பெறுமாறு என்று பொருள் கொள்க.
படுத்து
- இட்டுப் பரப்பி. மீடவார் - பெண்கள். இவை
பயனின்மையோடமையாது மாறான பயன் தருவதை உணராத
மடமையோர் என்ற குறிப்புமாம்.
ஆரச்சேறும், பனிநீர்த் திவலையும், குளிரித்தளிரும்
புறவெப்பத்தை மாற்றும் உபசாரப் பொருள்களாம். இவை,
கூடினார்க்கு இன்பமும், கூடாதார்த்குத் துன்பமும் செய்வன.
இவையும் எல்லாம்
- (ஆட்டியும், வீசியும், படுத்தும்)
இவைகளே யன்றி அவர்கள் செய்த இவைபோல்வன பிறவும் ஆகிய
எல்லாம். அவை விசிறி வீசுதல் முதலியன. இவற்றை வடநூலார்
சைத்தியோபசாரம் என்பர்.
பேர் அழலின் நெய்
சொரிந்தால் ஒத்தன - பேர் அழல்
- பெருந்தழல். அதில் நெய் சொரிதல் அதனை வளர்க்குமேயன்றித்
தணிக்காததுபோல, இவையும் பரவையார்க்கு உள்ளே மிக எரிந்து
நின்ற ஆசைத் தீயை வளர்த்தன. காதலாகிய தீ கடுஞ் சுரம்போல்
மிகச் சுடுந்தன்மையுடைய தென்பார் பேரழலுக்கு ஒப்பிட்டார்.
சமிதை
- வேள்வித் தீயில் இடும் பல வளார்களுக்குப்
பரிபாடையாக வழங்கும் பெயர். பரவையார் மனத்துள் வளர்ந்து
எரியும் காதல் தீயும் வன்றொண்டரை வேட்டலாகிய (வேள்வி -
விரும்புதலால் விளைவது - தொழிற் பெயர்) வேள்வித் தீயாகலின்
அதற்கேற்ப நெய்யும் சமிதையும் உவமிக்கப்பெற்றன. நெய்
சொரிதலும் சமிதையிடலும் வேள்விக்கு உறுப்பாதலுங் காண்க.
மணத்தை வேள்வி என்றலும் காண்க.
சொரிந்தான் வந்து
- மேலே இருந்தாள் வந்து என்றதற்
குரைத்தபடி கொள்க. சொரிதல் - மிகுதியாகப் பெய்தல். மழை
சொரிந்தது - என்புழிப்போல.
பெருஞ்சிலையிள் வலிமை
காட்டிச் சொரிந்தான் -
மதனனது வில் சிவபெருமான் ஒருவரிடத்தேயன்றிப் பிறர்
எல்லாரிடமும் சென்று செயல் புரியும் வன்மை யுடைத்தாதலின்
பெருஞ்சிலையின் வலி என்றார். பெருமை - தோலாத தன்மை.
பரவையாரின் திருமணம் இறைவன் நியதியின் வழியே நிகழ்வ
தொன்றாதலின் மாரன் அம்புகளின் செயல் எல்லாம் அந்நியதிக்குத்
துணைசெய்த மட்டிலே அமைந்து நின்று, சிலைவலியாகிய வில்
வித்தை காட்டிய அளவே நின்றன என்பார் வலிகாட்டிச் சொரிந்தான்
என்றார். சொரிதலின் பயன் அவ்வளவே என்க. இத்திருமணம்
மதனன் செயலாகிய காமத்தின் காரணமாக நிகழ்ந்ததன்று என்பது
குறிக்கக் காட்டி என்றார்.
தளிர்குளிரப் - என்பது பாடம். 173
|