32. அன்ன வன்பெய ராலால சுந்தரன்
 
  முன்ன மாங்கொரு நாண்முதல் வன்றனக்
கின்ன வாமெனு நாண்மலர் கொய்திடத்
துன்னி னானந் தனவனச் சூழலில்.
22

     (இ-ள்.) அன்னவன் ... சுந்தரன - அவர் பெயர்
ஆலாலசுந்தரர் என்பதாம்; முன்னம் ... சூழலில் - முன் ஒரு நாள்
கயிலையில் இறைவனுக்குச் சாத்துவதற்காக விதிப்படியுள்ள புதுப்
பூக்களைக்கொய்து எடுக்கும் பொருட்டுத் திருநந்தன வனத்திலே
அவர் சேர்ந்தனர்.

     (வி-ரை.) ஆலால சுந்தரன் - ஆலகால விடத்தைச் சிறிதளவாகச் செய்து கையிலே ஏந்திச் சென்று சிவபெருமானிடத்துக்
கொடுத்தமையால் இப்பெயர் வந்தது.

“அன்ன சுந்தரற் காலால மாழியின்
முன்னம் முன்னவ னுண்ணமற் றன்னதைத்
தன்ன கங்கைத் தழீஇக்கொடு நல்கலாற்
றுன்னு மாலால சுந்தர நாமமே”

என்பது பேரூர்ப் புராணம்.

     தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறும்பொருட்டுத்
திருப்பாற்கடல் கடைந்ததுவும், அதுகாலை ஆலகால விடம்
எழுந்ததுவும், அப்போது தேவர்களைக் காக்கவேண்டி அதனைச்
சிவபெருமான் உண்டருளியதோடு சாட்சியாக யாவரும் கண்டு
தொழுது உய்யவேண்டிக் கழுத்தின் அளவிலே விளக்கமாக
நிறுத்தியதுவும், பிறவும் சிவ - விஷ்ணு - பிரம - முதலிய
மாபுராணங்கள் எனும் பதினெண் புராணங்களும் பேசும். ஆதலின்
அது எம்மதத்தரும் சம்மதிக்கும் விளக்கமான உண்மையாம்.

     நாண்மலர் - அன்றலர்ந்த புதுமலர்.

     இன்ன ஆம் எனும் - இவை இவை பெருமானுடைய பூசைக்கு ஆகும் என்று விதிக்கப்பெற்ற. இவ்விதிகள் புட்பவிதி முதலியவற்றுட்
காண்க. (வரும் பாட்டிலும் இவ்வாறே கொள்க.)

     அன்னவன் பெயர் ஆலால சுந்தரன; முதல்வன் தனக்குஆம் மலர் கொய்திட நந்தனவனச் சூழலில் (அவன்) துன்னினான் - எனக்
கூட்டி முடிக்க.

     கொய்திட - கொய்து வந்து இட. (வரும் பாட்டிலும் இவ்வாறே
கொள்க.) நந்தனவனச்சூழல் - சூழல் (காவல்) பெற்ற நந்தனவனம்
என்க.        22