324. என்றின் னனவே பலவும் புகலு
     மிருளா ரளகச் சுருளோ தியையும்
 
  வன்றொண் டரையும் படிமேல் வரமுன்
     பருள்வா னருளும் வகையார் நினைவார்?
சென்றும் பர்களும் பணியுஞ் செல்வத்
     திருவா ரூர்வாழ் பெருமா னடிகள்
“அன்றங் கவர்மன் றலைநீர் செயு“மென்
     றடியா ரறியும் படியா லருளி,
178

     (இ-ள்.) என்று......நினைவார் - என்று இவ்வாறாகிய
சொற்களையே மேலும் பலவாகச் சொல்கின்ற இருண்ட
மேகம்போலக் கருமையுடைத்தாய் அளகமாய் உருவமைந்த சுருண்ட
கூந்தலையுடைய பரவையாரையும் நம்பிகளையும் இவ்வுலகில்
வருமாறு அருளிச்செய்த சிவபெருமான் இப்போது அருள் செய்யும்
வகையை யாவரே நினைக்க வல்லவராவர்?; சென்று.....அடிகள் -
தேவர்களும் வந்து தொழுகின்ற செல்வம் நிறைந்த திருவாரூரிலே
வாழ்கின்ற தியாகேசப் பெருமான்; அன்று......அருளி - “அன்றைக்கே
திருவாரூரிலே (தம்மாற் படிமேல் வர அருளிச் செய்யப்பெற்றாராகிய)
அவ்விருவருக்கும் திருமணத்தை நீங்கள் செய்யுங்கள்“ என்று
திருவாரூரின் அடியார்கள் தெரியும்படியாகக் கனவில்
அருளிச்செய்து,

     (வி-ரை.) என்று - 321, 322, 323 பாட்டுக்களிற் கூறியபடி.

     இன்னன - இவைபோல்வன.

     இருளார் அளகச் சுருள் ஓதி இருள் - நிறம் - அளகம்;
குழலை முடிக்கும் ஐந்து வகையில் ஒன்று. இதனாலே அதற்கு
ஐம்பால் என்று பெயர் கூறுவர். சுருள் - கருமணல் ஒழுக்குப்
போன்று சுருண்டு சுருண்டு செல்லும் இயல்பு. ஓதி - கூந்தல்; சுருள்
ஓதி வினைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.
இக்கூந்தலையே தேவருலகத்தை வென்றதென்று முன்னர்ச்
சிறப்பித்தமை காண்க. “மஞ்சு சுரிகுழற்கு அழிய விண்ணும்
பணியும்“ (284).

      படிமேல் வரமுன்பு அருள்வான் - முன்னர்த்
திருக்கயிலாயத்தில் நிகழ்ந்தது. திருமலைச்சிறப்பிற் காண்க.

      அருள்வான் அருளும் வகை (யை) யார் நினைவார் -
அருள்வான் அருளும் வகை - “வகுத்தான் வகுத்த வகை“ என்ற
குறளிற்போலக் கொள்க. இவ்வுலகில் இவ்விருவரையும் வரும்படியாக
அருளிய இறைவன் பின்னும் அருள் செய்யும் வகைகளை யாவர்
அறிய வல்லார்?. “காட்டுவித்தால் ஆரொருவந் காணாதாரே -
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே“ என்ற திருவாக்கின்படி
அவன் உணர்த்த உணர்தலே எல்லா உயிர்களுக்கும் இயல்பாதலின்
யார் நினைவார்? என்றார். இவர்கள் முன்னாளில் வந்த தன்மையும்,
இந்நாளில் வருந்தும் தன்மையும், பின் நாள் மணந்து வாழுந்
தன்மையும் அவர் அறிவிக்கவே யாவரும் அறிவாராயினர் என்க.
ஒருவரும் தாமே யறியும் ஆற்றலிலர்; ஆதலின் அறியும்படியால்
அருள்வாராயினர் என்க.

      உம்பர்களும் பணியும் செல்வம - தேவ உலகத்திலே
பலகாலம் இந்திரனது நாயகராய்த் தேவர்கள் வழிபட வீற்றிருந்த
தியாகேசர் அதனைவிட்டு இவ்வுலகிலே போந்து ஆரூரை ஆட்சி
புரிகின்றாராதலின் அவர்கள் பேறுபெற இங்கு வந்து தரிசித்துச்
செல்கின்றார் என்ற குறிப்பு.

      செல்வத் திருவாரூர் - “செல்வ நெடுமாடம்“ என்ற
தேவராத் திருப்பாட்டிலே திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய
செல்வம் நிறைந்த சிற்றம்பலம் போலவே திருவாரூரும் நிறைந்ததாம்.
    
“.................... அணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்
      பொன்றீ மணிவிளக்குப் பூதம் பற்றப் புலியூர்ச்சிற்
                                      றம்பலமே
      புக்கார் தாமே“

      எனும் கோயில் - புக்கதிருத்தாண்டகத்தின்படி இவரே
திருச்சிற்றம்பலத்தாராதலினாலும், தம்மை அடைந்தார் யாவர்க்கும்
வரையாது கொடுக்கும் காரணப்பேர் பூண்ட தியாகேசர்
வாழ்வாதலினாலும் செல்வத் திருவாரூர் என்றார். செல்வந்தரும்
இலக்குமி வரம்பெற்ற ஊர் என்பதும் குறிப்பு.

      அன்று அங்கு - விடியற் காலத்திலே நிகழும் கனாவின்
அருள் விரைவிற் பயன்றருவதாம். ஆதலின், அன்று - அந்நாளிலே,
அங்கு - அவ்வூரிலே, திருமணம் செய்க எனக் காலமும் இடமும்
வகுத்தவாறு.

      அவர் மன்றலை - அடியார் கனவிலே இறைவர் தாம்
ஆட்கொண்ட அவ்விருவரையும் சுட்டியருளியபடியால், அவர் -
ஆட்கொள்ளப்பெற்ற அவர் என்க. சேய்மைச் சுட்டு.

      நீர் செயும - நீங்கள் நிகழச் செய்யுங்கள். அவ்விருவரும்
அடியாராதலாலும், பரவையார் உருத்திர கணிகையாராதலாலும்,
உருத்திர கணத்தவராகிய அடியவர்களே அவரது திருணமத்தை
நிகழ்த்தும் உரிமை யுடையாராதலாலும் அடியார்க்கு அருளிய
தென்க. 178