326. காமத் துயரிற் கவல்வார் நெஞ்சிற்
     கரையில் லிருளுங் கங்குற் கழிபோம்

 
  யாமத் திருளும் புலரக் கதிரோ
     னெழுகா லையில்வந் தடியார் கூடிச்

சேமத் துணையா மவர்பே ரருளைத்
     தொழுதே திருநா வலர்கோன் மகிழத்
தாமக் குழலாள் பரவை வதுவை
     தகுநீர் மையினா னிகழச் செய்தார்.

180

     (இ-ள்.) காமத்துயரில் ...... புலர - ஒருவரை யொருவர்
காதலித்து அது கை கூடி முற்றுப்பெறாத துன்பத்தால் தனித்தனி
வருந்திய நம்பிகள், பரவையார் எனும் இருவருடைய நெஞ்சில்
நிறைந்து முடிவின்றி யிருந்த ஆற்றாமையாகிய இருளும், அவ்விரவு
மெல்லக் கழிந்து செல்லும் யாமங்களாகிய இருளும் நீங்க;
கதிரோன்......தொழுதே - சூரியன் உதிக்கும் காலமாகிய
அதிகாலையில் கனவில் உணர்த்தியருளப் பெற்ற திருவாரூர்
அடியார்கள் எல்லாரும் கூடித், தம் அடியார்களுக்கு உற்றவிடத்
துதவும் வைப்பாகிய - துணையாகிய தம்பெருமானது பேரருளைத்
தொழுது வாழ்த்தி; திருநாவலர்கோன்........நிகழச் செய்தார் -
திருநாவலூர் நம்பிகள் மகிழுமாறு மாலையணிந்த கூந்தலுடைய
பரவையாரது கல்யாணத்தை அதற்குத் தக்க சிறப்பினாலே
நிகழ்வித்தார்கள்.

     (வி-ரை.) காமத் துயரிற் கவல்வார் - உலகில் பிறர்
கவன்றுழலும் காமத் துயர்போல அவற்றுடன் ஒன்றாக வைத்து இது
மயங்கி யுரைத்தற்பாலதன்று. முன் தொடர்புபற்றி இது அருள்
வகையால் தொடர்ந்து வருதலால் என்பது.

      கரையில் இருளும - இது கைக்கிளைக் காதற் பெருக்கு.
இருள் என உருவகப்படுத்தப் பெற்றது. இவர்களது மனத்திலே
பெருமானது நினைவு நின்றிருந்தபடியால் இது அகவிருள் அன்று.
திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலே,

“நீறணிந்தார் அகத்திருளும் நிறைகங்குற் புறத்திருளும்
மாறவரும் திருப்பள்ளி யெழுச்சி“

என்றதனோடு இதனை ஒத்துப் பார்க்க. “மாக்கள் சிந்தையுட் சார்ந்து
நின்ற, பொங்கிய இருள்“ என்று கூறியதும் (10) காண்க.

      கங்குல் கழிபோம் யாமத்து இருளும் புலர - “புலரும்
படியன்று இரவு“ என்று பரவையார் கூறி வருந்தியதாகிய
அவ்விருளும் புலர என்க. இரவு ஒவ்வோர் யாமமாகக் கழிய இருள்
புலர.

      கதிரோன் எழுகாலை - கங்குல் இருள் புலரவும், கதிரவன்
எழவும் உள்ளதாகிய அதிகாலை என்க. எனவே அடியார்கள்
தாந்தாங் கண்ட கனாக்களை எண்ணி, அது கண்டபின், தமது முதற்
கடமையாக, அதிகாலையிலேயே கூடித் தொழுதனர். எழுகாலை -
எழுந்து வரும் என எதிர் காலமானதால் இன்னும் சூரியன்
உதயமாகவில்லை; அவன் எழும் செயல் இருள் போதலால்
விளங்கிற்று என்னும் செயல் குறித்தது.

      சேமந் துணையாம் அவர் - “அடியவர்க் கெய்ப்பினில்
வைப்பு“, “அடியவரெய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த, நிதியே“ (பதினொராந் திருமுறை) என்பன வாதி திருவாக்குகள்
காண்க. சேமம் - சேர்த்து வைத்த உலவாக்கிழி - சேமம் செய்யும்
துணை என்றலுமாம். அடியார் நெஞ்சிற்சேமித்து (புதைத்து) வைத்து,
வேண்டும்போது உதவும்படி எடுக்க அருள்பவர்.

      தகுதீர்மை - அருளுக்கும், அவருக்கும், தமக்கும் தகுந்த
தன்மை. திருநாவலூர் கோன் - தாமக்குழலாள் - இவற்றில் திரு,
தாமம் என்ற அடைமொழியின் மங்கலக் மணக்கோலத்தின்
நிலையைக் குறித்தன. 180