327. தென்னாவ லூர்மன்னன் றேவர்பிரான்
                           றிருவருளான்
 
  மின்னாருங் கொடிமருங்குற் பரவையெனும்
                           மெல்லியறன்
பொன்னாரு முலையோங்கற் புணர்குவடே
                             சார்வாகப்
பன்னாளும் பயில் யோகம் பரம்பரையின்
                           விரும்பினார்.
181

     (இ-ள்.) தென் நாவலூர் மன்னன் - அழகிய திருநாவலூரர்;
தேவர் பிரான் திருவருளால் - தியாகேசப் பெருமானது
திருவருளினாலே; மின்.....சார்வாக - மின்ன
லின் தன்மை வாய்ந்த
கொடிபோன்ற இடையையுடைய பரவையார் என்னும் மெல்லியலாரது
பொன்னணி பூண்ட இரண்டு தனங்களாகிய மலைகளின் நெருங்கிய
சிகரங்களையே அரணாகக் கொண்டு; பன்னாளும் பயில் யோகம்
- பல நாள்களும் பயில் யோகத்தை; பரம்பரையின விரும்பினார் -
அதற்குரிய வழிவழித் தருமத்திலே விரும்பிப் பயில்வாராயினார்.

     (வி-ரை.) தென்நாவலூர் மன்னன - வட நாவலூர் என
ஒன்றில்லாமையால் ஈண்டுத் தென் - தெற்கு - எனப்
பொருளுரைத்தல் சிறவாததாம்.

      முலை ஓங்கற் புணர்குவடே சார்வாப் பன்னாளும்
பயில்யோகம
- மலைகளின் உச்சி சார்ந்து தவஞ்செய்தல்
யோகிகளின் செயல். யோகம் - (யுக் பகுதி) சேர்தல் - கூடுதல்
என்பது பொருள். (Yoke என்பதும் அப்பகுதியிலேவந்தது.) அது
இரண்டு ஆன்மாக்களின் கூட்டத்திலே சிற்றின்பம் எனப் பேர்பெறும்.
நாயகன் நாயகி பாவனையில் ஆன்மாவாகிய நாயகி
உயிர்த்தலைவனாகிய ஈசனைக் கூடுதல் பேரின்பம் எனப்பெறும்.

      பிராணவாயுவை அடக்கிச் சுழுமுனையின் வழியே
பிரமரந்திரத்திற் செலுத்தித் துவாதசாந்தத்திலே விந்துச் சோதியாகிய
ஒளியைத் தரிசித்து அக்காட்சியிலே அழுந்தி அதன்மயமாய் நிற்றல்
சிவயோகம் எனப்பெறும். இதன் இயல்பைத் திருவாதவூரடிகள்
புராணம் உபதேசப்படலம் - திருமந்திரம் - முதலியவற்றிற் காண்க.

      குவடே சார்வாக யோகம் விரும்பினார் - முலையே
குவடாயிற்று. அதன் சார்வே யோகமாயிற்று; அது பரம்பரை
விருப்பமாய் விளைந்ததேயன்றி வேறு செயலுக்குக் காரணமாகவில்லை
என்பது.

“பெற்றசிற் றின்பமே பேரின்ப மாமங்கு
முற்ற வரும்பரி சுந்தீபற
முறையாது மாயையென் றுந்தீபற“
                     - திருவுந்தியார்

     மின் ஆரூங்கொடி மருங்குல் மெல் இயல் - ‘விரைக்
கொடியோ' என முன்னர்க் கூறியதற்கேற்ப இங்கும் கொடியாகக்
கூறினார். மின் ஆர்தல் - மின்னலைப் போன்று (துவளவும்)
இயக்கமும் - வளைவும் - மென்மையும் - ஒளியும் - உடைமை.

      பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாக -
பொன் ஆரும் பொன் அணிகள் அணிந்த. அழகிய என்றலுமாம்.
முலை ஓங்கல் - பருத்து வளர்ந்திருத்தலின் முலையை மலைக்கு
உவமிப்பது வழக்கு. புணர் குவடு - இரண்டு தனங்களும் ஒன்றுபட்ட
தன்மையவாய், “இடையீர் போகா இளமுலை மாதர்“, “ஈர்க்கிடை
போகா இளமுலை“ என்றபடி சேர்ந்து உயர்ந்து இருப்பன. குவடு -
ஓங்கலின் மேலிடம். குவடே சார்வாக அவையே பற்றாக.
யோகபாவனை நிகழ்வதற்கு இவையே பற்றாக இருந்தன. இவைகளே
யோக பாவனையை நிகழ்த்தின என்பது. திருவாலவாயிலிலே
சிவபாதவிருதயரைக் கண்ட போது அவர்சார்பு பற்றித்
திருத்தோணியப்பரைத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
நினைவுற்றமையும்,

[“அவர்சார்வு கண்டருளித் திருத்தோணி யமர்ந்தருளிப்
பவபாச மறுத்தவர்தம் பாதங்க ணிணைவுற்றார்“
                           - திருஞான - புரா - 879]

     பாண்டி நாட்டு விசயத்தின் பின்னர்ச் சீகாழியிலே தமது
திருமாளிகையிற் போந்த போது தமது தாயார் அடி வணங்கியகாலைத்
தோணியில் வீற்றிருக்கும் பெரிய நாச்சியாராகிய தாயரை மனங்
கொண்டமையும், [திருஞான - புரா - 958 -]

[“அங்க ணைந்தரு மறைக்குலத் தாயர்வந் தடிவணங் கிடத்தாமுந்
துங்க நீள்பெருந் தோணியிற் றாயர்தான் மணங்கொளத்
                                     தொழுவாராய்“]

     இங்கு நினைவுகூர்தற்பாலன. நம்பிகளது யோக பரம்பரை
விருப்பத்திற்கே முலைக் குவடுகள் சார்பா யிருந்தனவன்றி ஏனையோர்
போலச் சிற்றின்ப விருப்பிற்குக் காரணமாகவில்லை என்பது.
‘குணமென்னுங் குன்றேறி நின்றார்' என்பது குறள்.

     யோகம் பரம்பரையின் விரும்பினார் - சரியையாதி
நான்கனுள் யோகபாதத்தை விளக்க வந்தவர் நம்பிகள். இவரை
வழிபட்டுக் கதிபெற்றாராகிய பெருமிழலைக்குறும்ப நாயனார்
யோகத்தின் வழியே இவரை (நம்பிகளை) முன்னடைந்தனர். “நாடுவன்
நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல்“ என்பனவாதி நம்பிகள்
தேவாரத் திருவாக்குக்களையும் காண்க. ஆதலின் இவ்வாறன்றி
இங்குக் குறித்த யோகம், பரம்பரை என்பதற்குச் சிற்றின்பப்
பொருள்கொண்டு மனம்போனவாறெல்லாம் உரைத்த உரைகள்
பலவும் உரையாகாமையறிக.

     யோகம - கூட்டம் என்பது. கூட்டங்களில் எல்லாம் மிக
உயர்ந்த கூட்டமாகிய இறைவனது கூட்டமே - சிவபெருமான்
அளிக்கும் முத்தி நிலையே - இங்குக் குறிக்கப் பெற்றது. யோகம்
விரும்பிப் பயின்ற வகை வரும் பாட்டிற் காண்க.

     பிராரத்த அனுபவ மாத்திரையாகவே உடம்பு தாங்கும் சீவன்
முத்தர்க்கு உலகானுபவங்களாகிய பிராரத்தங்கள் உடலூழாய்க் கழிந்து
படுவனவேயன்றி மேல் வினைக்கு மூலமாகாமை அறியப்படும். முலை
ஓங்கற் புணர்குவடு சார்வாக முன்பயில் யோகத்தின் மேலதே
விருப்பமாயிற்று என்ற உண்மை, சார்வாக யோகம் விரும்பினார்
என்பதனாற் பெறப்படும். 329-ம் பாட்டின் உரை காண்க.   181