329. மாதுடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலைப்
 
  போதலர் வாவி மாடு செய்குன்றின் புடையோர்
                               தெற்றிச்
சீதளத் தரளப் பந்தர்ச் செழுந்தவி சிழிந்து                               தங்கள்
நாதர்பூங் கோயி னண்ணிக் கும்பிடும் விருப்பா                               னம்பி,
183

     (இ-ள்.) மாதுடன் கூட வைகி - பரவையாரோடு சேர்ந்து
வாழ்ந்து இருந்து; மாளிகை....இழிந்து - மாளிகையின் பக்கத்திலே,
சோலையில், நீர்ப்பூக்கள் மலர்ந்து விளங்கும் தடாகத்தின் சார்பில்,
செய்குன்றின் பக்கத்தில், ஒரு திண்ணையில் குளிர்ந்த முத்து
விதானத்தின்கீழ் அமைந்திருந்த அழகிய ஆதனத்திலிருந்து இறங்கிச்
சென்று; நாதர்........நம்பி - தங்களுடைய இறைவர் எழுந்தருளிய
பூங்கோயில் அடைந்து கும்பிடவேண்டும் என்ற விருப்பத்துடன்
நம்பிகள்,


     (வி-ரை.) கூடவைகுதல் - உடன் வாழ்தல். கூடவைகி -
சேர்ந்து. மேற்பாட்டிற் கூறியவாறு சேர்ந்து விளையாடி வாழ்ந்து
வைகுவார், ஒருநாள் பின் வருமாறு செய்தார் என்க.

     மாளிகை...செழும் தவிசு - மாளிகை - சோலை - வாவி
செய்குன்று - தெற்றி - பந்தர் - இவை தவிசுக்கு விசேடணமாகிய
அடைமொழிகளாய் அந்தத் தவிசின் உயர்வையும்; அதனிலிருந்தோர்
அதைவிட்டு இலகுவில் நீங்கலாகாத அருமையும் குறித்து நின்றன.
தவிசு செழுமையாய் இருந்தது; அது சீதளத் தாளப் பந்தர்க்கீழ்
அமைந்திருந்தது; மேற்பந்தரும் கீழ்த் தவிசும் ஒரு தெற்றியில்
அமைக்கப்பெற்றன; அத்தெற்றி ஒரு செய்குன்றின் புடையிருந்தது;
செய்குன்று வாவியின் மாடு அமைந்தது; வாவி சோலையினிடை
இருந்தது; சோலைதானும் மாளிகை மருங்கு நின்றது எனத்
தொடர்ந்து காண்க.

     இவ்வாறன்றி மாளிகை சோலை முதலியனவற்றைத் தனித்தனி
எண்ணும்மை கொடுத்து மாளிகையிலும், சோலையிலும், ஆசனத்திலும்
மாதுடன் கூடவைகி என்று உரை கூறுவாருமுண்டு. வைகி என்பது
மேற்பாட்டிலே முடித்த விளையாடிச் செல்கின்றார் என்பதைத்
தொடர்ந்து அனுவதித்து மேற்கொண்டார் ஆதலானும், இழிந்து
என்பது இவற்றிலே தவிசு ஒன்றுக்கேயன்றி ஏனைய மாளிகை
சோலை முதலியவற்றிற்குப் பொருந்தாமையானும் அஃது உரை
அன்றென்பது.

     சோலை - வாவி - செய்குன்று முதலிய இப்பொருள்கள்,
கூடிய நாயகன் நாயகிகள் அனுபவிக்கும் உலக அனுபவப்
பொருள்களாம். மேலும் பரவையார் (கமலினியார்), சங்கிலியார்
(அநிந்திதையார்) இவர்களின் பொருட்டே சுந்தரமூர்த்திகள்
ஆணைவழி அவதரித்து அவர்களின்வழியே வேட்கைதீர
மணக்கோலத்துடன் மண்மேல் விளையாடி வருகின்றார் ஆதலானும்
இவை இவரது அனுபவங்களுக்கு மிக உரியவாயின. பின்னர்ச்
சேரமான் பெருமாள் நாயனார் நம்பிகளுக்குச் செய்யும்
உபசாரங்களினும் இவ்வுண்மை காணப்பெறும்.

“திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமு மெனக்குன் சீருடைக்
                            கழல்களென் றெண்ணி
யொருவரை மதியா துறாமைகள் செய்து மூடியு முறைப்
                              பனாய்த் திரிவேன்“
                   -தக்கேசி - திருமுல்லைவாயில் - 1

என்ற நம்பிகள் தேவாரக் கருத்தினையும் காண்க. எந்த மகனும்
விட்டுநீங்கலாகாத உலக இன்பப் பொருள்களாகிய சோலை - வாவி
- செய்குன்று - தவிசு இவைகளின் இடையேயும் பூங்கோயில் சென்று
கும்பிடும் விருப்பமே நம்பிகளுக்கு மிக்கு எழுந்தது என்று
கூறியவதனால்“ பிரான் சரணாசர விந்தமலர் சிந்தையினும்
சென்னியினும் மலர் வித்து.........கூடி விளையாடிச் செல்கின்றார்“
என்று மேற்பாட்டில் கூறியதின் உண்மை விளக்கப்பெற்றது.

     சோலை - வாவி முதலிய பல விசேடண அடுக்கு
அத்தவிசினது பிணிக்கும் தன்மையின் வன்மையைக் காட்டி நின்றது.
இழிந்து - அது கும்பிடும் விருப்பினைவிட இழிந்ததாக நம்பிகள்
கருதினார் என்பதும் குறிப்புப் பொருள். செழுந்தவிசில் இருந்த
போதே நம்பிகளது மனம் அதிற் பற்றாது கும்பிடும் விருப்பம்
மேலிட்டிருந்தது என்க.

     எல்லார் உயிர்க்கும் இச்சை, அறிவு, செயல் என்ற மூன்று
சத்திகள் உண்டு. இவை மூன்றும் வேலை செய்கின்றமட்டிலே மேல்
நிகழ்ச்சிகள் நிகழும். பொருள்களை முதலில் நிருவிகற்பக்
காட்சியாகக் கண்ட உயிருக்கு அதிலே புத்தி கலந்து தொழில்
செய்தபோது சவிகற்பக் காட்சி நிகழும். அதன்பின் அதில் ஞானம்
உண்டாம். பின் அதில் இச்சை நிகழும். இங்கு நம்பிகளது
அறிவிச்சை செயல்கள் அவ்வாறு தொடர்ந்து நிகழாது பரவையார்
சார்வும், சோலை வாவி முதலிய பொருள்களும், கண்டபோது
அவற்றின் சார்பினாலே முன்னை அறிவும் இச்சையும் செயலுமாகத்
தொடர்ந்து நிகழ்ந்து கும்பிடும் விருப்பை எழுப்பப் பின்னர்த்
திருத்தொண்டத் தொகை அருள எதுவாயினமை குறிக்கத்தக்கது.
அதுவே அவரது அவதார தத்துவம்.

“மாத வஞ்செய்த தென்றிசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப், போதுவார்“

என முன்னர்க் கூறியமை காண்க. தவிசிழிந்து கும்பிடும் விருப்பால்
நம்பிகள் பூங்கோயில் போந்ததன் உண்மை இவ்வாறுணரத் தக்கதாம்.

     உலகத்தில் நிற்கும்போதே சிவஞானிகளின் அறிவு இச்சை
செயல்கள் உலகச் சார்பிலே செல்லாது சிவச்சார்பிலே செல்வனவாம்.
அவர்கள் உலகத்தைப் பாரார். அவர்களதுகண் விழித்தே
யிருக்குமாயினும் உலகத்தை நோக்காது; உண்முகமாகவே நோக்கி
நிற்றலால் உலகத்தார்க்குக் குருடாகவேகாணும். “விழித்த கண்குரு
டாய்த்திரி வீரரும் பலரால்“ என்பது இவர்களது இயல்பு.
உயிர்களுக்கு உடம்புகள் அவ்வவற்றின் கருமத்திற்கீடாய் வரும்;
அவ்வுடம்புகளே மேலும் கருமத்திற்குக் காரணமாயும் இருக்கும்.
ஆனால் சிவஞானிகளுக்கோ எனில் பிராரத்த வினையைத்
தொலைப்பதன் பொருட்டுமட்டுமே செயல் செய்யக் காரணமாக
உடம்புகள் பயன்படும். அவை மேல் விளைவுக்கு வித்தாகா. சூரிய
வெளிச்சத்திலே விளக்கு ஏற்றிச் செய்யப்படும் கிரியைகளில்
விளக்கின்காரியம் பயனற்றொழியச் சூரியஒளியி னுதவி கொண்டே
அவை செய்யப்படுவதுபோலச் சிவாஞ்ஞையாகிய அருள்நெறியிலே
அதன் முன்னிலையிற் செய்யப்படும் அந்தப் பிராரத்த அநுபவம்
செயலற்று நிற்கும். இங்கு நம்பிகள் செயலும் அவ்வாறே காண்க.

     “அவனே தானே யாகிய வந்நெறி, யேக னாகி யிறைபணி
நிற்க, மலமாயை தன்னொடு வல்வினை யின்றே“ என்று
சிவஞானபோதம் பத்தாஞ்சூத்திரம் வகுத்தும், அதன் கீழ்
“அவனருளா லல்ல தொன்றையுஞ் செய்யா னாகவே அஞ்ஞான
கன்மம் பிரவேசியா வாகலான்“ என்று அருளியதுங் காண்க.
பசுபாசங்களினியல்புகளை உள்ள வாறுணர்ந்து, செய்வனவெல்லாம்
அவனருள் வழிநின்று செய்யப்படும் செயலாகக் கண்டுகொண்
டிருப்பாராயின், அவ்விறைபணியாகிய அடிமைத்திறமுடையார்
எவ்வுடம்பினின்று எவ்வினைகளைச் செய்யினும் அவை அவர்க்குப்
பந்தமாதலில்லை; பிராரத்தவினையுந் தன்னைக் கூட்டுவிக்கும்
முதலவன் சந்நிதியில் உடலூழாய் ஒழிவதன்றி, ஏனையோர்க்குப்போல
அவர்க்கு ஆதலில்லை யாகலான், பெருங்காயமிட்டு எடுத்தொழிந்த
கலத்திலே அதன் வாசனை மங்கிப்போய் மெலிதாய் நாறுமாறுபோல,
நானவ னென்றெண்ணிச் சிவோகம்பாவனை செய்தறியும் ஞானிக்குப்
பிராரத்த வினையும் அதற்கிடமாகிய உடம்பு முதலிய மாயேயமும்
வாசனை மாத்திரையாய் மெலிதாய் வந்து தாக்குமாயினும், அவ்வழி
யேறுவதாகிய ஆகாமியவினை பிறவிக்கு வித்தாய் நிலைபெற்று
முறுகுதலின்றிக் கெட்டொழியும். ஒளி இருளைத் துரக்குமாறுபோல
அவ்வுணர்வு ஆகாமியத்தைத் துரக்கும் என்று இக்கருத்தை விரித்து
மாபாடியத்திலே எமது மாதவச் சிவஞான யோகிகள்
உரைத்தருளியவற்றையுங் காண்க. விரிவு அங்குக் கண்டு கொள்க.

     பின்னர் வரும் சங்கிலியார் திருமணச் செய்திகளையும், அங்கு
நம்பிகள் “புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட தூநலத்தைக்,
கண்டுகேட் டுண்டுயிர்த்துற் றுணர்ந்திருந்தார் காதலினால்“ என்றும்
கூறும் (ஏயர்கோன் - 267) பகுதிகளையும் இவ்வாறே கண்டுகொள்க.

     வெளிமுகம - உண்முகம் என்ற இருவகை நிலைகளையும்
குறிப்பதற்காகப் “பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின்
விரும்பினார்“ என்று மிக அழகுபெற ஒரே அடியிற் குறித்த
ஆசிரியர், முன்பாட்டிலே அவற்றைப் பிரித்து
“மலர்வித்து.....விளையாடிச் செல்கின்றார்“ என விரித்தனர். அதன்
விளைவை இப்பாட்டிலே “கூட வைகிச் செழுந்தவிசிழிந்து கும்பிடும்
விருப்பால் நம்பி“ என்று காட்டி, விளையாட்டு
விளையாட்டின்மட்டிலே நிற்க, விருப்பம் பெருமானிடத்தே பதிந்து
கிடந்ததை விரித்தோதினார்.

     சாணாரவிந்தமலர் சிந்தையிலும் சென்னியிலும் மலர்வித்ததனால்
கும்பிடும் விருப்பம் நிகழ்ந்தது. கும்பிடுதல் நனவில் நிகழ்வது.
மலர்வித்தல் அதனோடு கனவு முதலிய நிலைகளினும் நிகழ்வது.
சென்னி ஆயிரம் இதழுடையதாய் மேனோக்கி மலர்ந்த தாமரை
போன்றதாகவும், சிந்தை - குவிந்த தாமரை போன்றதாகவும் கூறுவர்.
இது பற்றியன்றே பட்டினத்தடிகள் முதலிய பெருஞானிகளும்
திருக்கோயில் வாயில் காத்திருந்தனர் என்க.

     தங்கள் நாதர் - உரிமையின் மிகுதி காட்டிற்று.
பரவையாருக்கும் தமக்கும் நாதர் என்றலுமாம்.

     “பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய
பெருமானே“ எனவரும் நம்பிகள் திருவாக்குங் காண்க. 183