330. அந்தரத் தமரர் போற்று மணிகிள ராடை சாத்திச்
 
  சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவை
                                 சாத்திச்
சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர்மணிக் கலண்கள்
                                  சாத்தி
யிந்திரத் திருவின் மேலா மெழின்மிக விளங்கித்
                                தோன்ற,
184

     (இ-ள்.) வெளிப்படை. தேவர்களும் துதிக்கும் அழகிய ஆடை
அணிந்து, குங்குமப்பூக் கலந்த சந்தனக் குழம்பை - அணிந்து,
அழகிய சுழியத்தினைத் தலையில் அணிந்து, ஒளிவீசும்
மணிகளழுத்திய அணிகலன்களையும் அணிந்து, இந்திரச் செல்வக்
காட்சியின் மேம்பட்ட அழகு மிகவும் பொலிந்து தோன்றவும்,

     (வி-ரை.) ஆடையும் - கலவையும் - சுழியமும் - கலன்களும்
சாத்திய அழகிய கோலம் இந்திரதிருவின் மேம்பட்டு விளங்கிற்று
என்பது. அதைவிட மேலாகியதனால் அமரர் போற்ற என்றார்.
அன்றியும் இந்திரன் முதலிய தேவர்கள் எப்போதும் அடியார்களைப்
போற்றற்குரியவர்களாம். மேலும் “இந்திரன் மால் பிரமன் னெழிலார்
மிகு தேவரெல்லாம்“ வெள்ளையானையுடன் வந்து நம்பிகளை
எதிர்கொண்டு வணங்கித் திருக்கயிலைக்கு அழைத்துச் சென்றார்
என்றும் பின்னர்க் காண்போம். ஆயினும் இப்போது நம்பிகள்
அவரது திருவவதாரத்தின் பயனாகிய “தீதி லாத்திருத்தொண்டத்
தொகை தரு“வதற்காகச் செல்கின்றமையாலும், தாங்கள் இதுவரை
ஆசிரயித்துவாயில் காத்துக்கொண்டிருந்த தேவாசிரிய
மண்டபத்துள்ளே எழுந்தருளிய அடியார்களை எல்லாம் துதிப்பதன்
மூலம் உலகிற்கும் தமக்கும் அவர்களது பெருமையை விளங்கும்படி
அறிவுறுத்தப் போகின்றமையாலும் அவர்கள் இங்குப் போற்றியது
சிறப்பு வணக்கமாம்.

     கழியம் - ஆன்மாக்களின் கிரீட விசேடங்களில் ஒன்று.
அதுபோலவே பெண்மக்களின் கிரீட விசேடம் சூடாமணி யென்பர்.

     எழில்பெற - நம்பிகளது காரணப்பெயர் சுந்தரர் என்பதும்,
மணக்கோலத்துடன் மண்மேல் விளையாடுவாய் என இறைவன்
ஆணையிட்டனர் என்பதும் குறித்தவாறு.

     நம்பிகள - “மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும்
பொங்க“ மணக்கோலங்கொண்டா (165) ராதலின் அக்கோலத்துடன்
விளையாடச் செல்கின்றார்க்கு இங்கும் மன்னவர் திருவைக்
குறித்தனர். வரும் பாட்டிலே வைதிகத் திருவைத் குறிப்பதும், இவை
யிரண்டும் நம்பிகளாகிய ஒருவரிடத்தே கூடியமையின் இவ்விரு
பாட்டுக்களும் குளகமாய் முன்பாட்டிற் காணும் “நம்பி“ என்ற
எழுவாய்கொண்டு முடிபுபெற்றிருப்பதும், மன்னவர் கோலத்தின்
மேம்பட்டது வைதிகக் கோலமென அதற்குமேல் இதனை வைத்துக்
காட்டியிருப்பதும் கண்டு களிக்க.

     இந்திரத் திருவின் மேலாம - இந்திரத் திருவானது வெறும்
போகங்களுக்கு இடமாகித் துன்பந் தந்து மீண்டும் மீண்டும் பிறவியிற்
சேர்க்கும். ஆனால் நம்பிகளிடத்து அத்திரு தான்
விளங்கப்பெற்றபோது அவ்வாறன்றி இன்பத்துக்கே ஏதுவாய் மீளா
நெறியாகிய முத்தியிற் சேர்க்கும். ஆதலின் மேலாம் என்றார். 184