333. கைக்கடா குரங்கு கோழி சிவல்கவு தாரி பற்றிப்
 
  பக்கமுன் போது வார்கள் பயின்மொழி பயிற்றிச்
                                 செல்ல
மிக்கபூம் பிடகை கொள்வோர் விரையடைப்
                           பையோர் சூழ
மைத்தடங் கண்ணி னார்கண் மறுகநீண் மறுகில்
                                வந்தார்.
187

     (இ-ள்.) கைக்கடா.......பயிற்றிச் செல்ல - கையிற் பிடித்துப்
பழக்கும் கடா - குரங்கு - கோழி - சிவல் - கவுதாரி என்றிவற்றைப்
பிடித்துக்கொண்டு இருபக்கங்களிலேயும், முன்னேயும்
செல்கின்றவர்கள் அப்பிராணிகளைப் பயிற்றிய சொற்களைச்
சொல்லிப் போகவும்; மிக்க.......சூழ - பூக்கள் நிறைந்த பூக்கூடைகள்
கொண்டு போவாரும், வாசனைப் பண்டத்துடன் கூடிய வெள்ளிலை
முதலியவற்றை ஏந்தும் அடைப்பைக்காரரும் சூழ்ந்து வரவும்;
மைத்தடம்......மறுக - மையணிந்த விசாலமான கண்களையுடைய
பெண்கள் மயங்கவும்; நீள்மறுகில் வந்தார் - நீண்ட தெரு வழியாக
(நம்பிகள்) வந்தார்கள்.

     (வி-ரை.) கடா - குரங்கு - கவுதாரி - இவற்றைப் பயிற்றிப்
போய்ப் பெரியோர் திருமுன் காட்டிச் சன்மானம் பெறுதல்
அந்நாளில் அரசர் சமூகத்திற் பெருவழக்காம். இந்திரத்திருவின்
மேலாம் கோலத்துடன் சென்றதற்கேற்ப இதனையும் கூறினார். கை
என்பதனைப் பற்றி என்றதனோடு கூட்டிக் கைப்பற்றிப் பயிற்றிச்
செல்ல என்றுரைத்தலுமாம். கடா - ஆட்டுக்கடா தகர்ப்பாய்ச்சல்
முதலிய காணுதல் அரசர் விளையாட்டுப் பொழுது போக்குக்கள்.
இவைகளைப் பின்னர்க் காண்க.

     பயின்மொழி பயிற்றிச்செல்ல - பெரியோரைச் சூழ்ந்த
கூட்டத்தில் வரும் போது அதற்கேற்ப வருதல் வேண்டுமாதலின்
முன்னர்ப் பயிற்றிப் பழக்கிய நன்மொழிகளால் அவைகளை
வழிப்படுத்திச் செல்ல என்க. இவையுடன்செல்லுதல் உலாச்
சிறப்பின்பொருட்டுமாம். திருநகரச் சிறப்பு 21-ம் திருப்பாட்டுக்
காண்க. தகர் வென்றி - சிவல் வென்றி முதலிய
புறப்பொருட்டுறைகளையும் காண்க.

     பூம்பிடகை கொள்வோர் - அடைப்பையோர் - பூவும் -
தாம்பூலமும் ஆகிய இருவகைப் பொருள்களையும் வேண்டும்போது
கொடுக்க ஆயத்தமாய்ப் பக்கத்தே நிற்பார். பிடகையும்
அடைப்பையும் தாங்கிவருவர். அடைப்பையோர் -
அடைப்பைக்காரர்கள்.

     மறுக - மறுகுதல் - மயங்குதல். நம்பிகளது கோலப்பொலிவின்
மூழ்கி வசமிழத்தல். “புலமறுகும் சிலமறுகு“ என்பது காண்க. இது
சிறந்த தலைவனது பவனியிலக்கணம்பற்றிந் கூறியவாறு. 187