335. கண்ணுதல் கோயிற் றேவா சிரியனாங் காவ ணத்து
 
  விண்ணவ ரொழிய மண்மேன் மிக்கசீ ரடியார் கூடி
யெண்ணிலாரிருந்த போதி “லிவர்க்கியா
                             னடியே னாகப்
பண்ணுநா ளெந்நா?“ ளென்று பரமர்தாள் பரவிச்
                              சென்றார்.
189

     (இ-ள்.) வெளிப்படை. இறைவனது பூங்கோயிலின்
மணிமுற்றத்திலே திருவாயிலின் முன்னாக உள்ள தேவாசிரியன்
என்னும் பெயருடைய மண்டபத்திலே, வாயிலில் ஆசிரயித்துக்
கூடியிருக்கும் தேவர்கள் ஒருபுறம் நிற்க, இப்பூவுலகில் அவதரித்துச்
சிறப்பு மிகுந்த அடியார்கள் சேர்ந்து அளவில்லாதவர்கள்
இருந்தபோது “இவர்களுக்கெல்லாம் என்னை அடியான் ஆகும்படி
செய்கின்ற நாள் எந்நாளோ?“ என்ற கருத்துடனே இறைவனது
பாதங்களைத் துதித்து நம்பிகள் செல்வாராயினர்.

     (வி-ரை.) அடியார் எண்ணிலார் கூடியிருந்தபோதில் -
என்று கூட்டுக.விண்ணவர் ஒழிய - தேவர்கள் சிவனடியார்களை
வணங்கும் தண்மையுடையார். காவணத்து விண்ணவர் ஒழிய -
என்றது காவணத்திலே தேவர்கள் தாந்தாம் நன்மை பெறும்பொருட்டு
அடியார்களது கருணையை எதிர்பார்த்து முன்னே
காத்துக்கொண்டிருக்கின்றார்கள்; அவர்கள் நிற்க என்பதாம்.
“அண்டர்பெருமான் றொண்டர்கழல் அமரர் பணியும் அணியாரூர்“
என்றதும் காண்க. ஒழிய - ஒருபுறம் ஒதுங்கி நின்றொழிய.
“தேவர்
ஒதுங்கத் திருத்தொண்டர் மிடையுஞ் செல்வத் திருவாரூர்“ என்பதும்
காண்க.

     யான் அடியேனாக - யான் அடியவனாக ஆகும்வகையை;
என்னை அடியானாகப் பண்ணும்நாள் என்க.

     என்று - என்று கருதிக்கொண்டு. அரனுக்குப்போலவே
அடியார்க்கும் ஆளாகும் தன்மை அரன் அருளாலே
விளைவதொன்றாதலின் அடியேனாகப் பண்ணும் நாள் என்றார்.

     விண்ணவர் ஒழிய - என்றும் மிக்கசீர் அடியார் - என்றும்
கூறிய அதனால் தேவர் பதங்கள் அழியுந் தன்மையன என்பதும்,
“போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி் யின்பமும்“ என்றபடி
அவற்றை அடியார்கள் வேண்டாதவர்கள் என்பதும், அவற்றை
வேண்டாததோடு வீடும் வேண்டா விறலின் விளங்கிய அடியவர்களே
இந்த மண்டபத்துள் வீற்றிருப்போர் என்பதும் குறிக்கப்பெற்றன.
இதன் விரிவு திருக்கூட்டச் சிறப்பிற் காண்க. விண்ணவர்களும்
அரனடியவர்களேயாயினும் அவர்களி னடிமைத்திறம் வேறு; இந்த
அடியார் கூட்டத்தின் திறம் வேறு என்பதும் ஒழிய என்றதனாற்
பெறப்படும். 183-ம் பாட்டிற் காண்க.

     காவணத்துள் - பணிய - என்பனவும் பாடங்கள்.   189