337. “மன்பெ ருந்திரு மாமறை வண்டுசூழ்ந்
 
  தன்பர் சிந்தை யலர்ந்தசெந் தாமரை
நன்பெ ரும்பர மானந்த நன்மது
வென்ற ரத்து மளித்தெதிர் நின்றன;“
191

     (இ-ள்.)வெளிப்படை. “நிலைபெறுகின்ற பெருந்திருவைத்
தருகின்ற அளவில்லாத வேதங்களாகிய வண்டுகள் மொய்த்து
ஒலிப்ப, அன்பால் நினைவாரது உள்ளச் செந்தாமரையிலே
(ஊறுகின்ற) நல்ல பெரிய பரமானந்தம் என்கின்ற நல்ல தேனைப்
பெறத் தகுதியில்லாத எனது தரத்திலேயும், பெறும்படி கொடுத்து
எதிரே தாமே போந்து நின்றன;“

     (வி-ரை.) மன்பெரும் திருமாமறை - மன்னுதல் -
நிலைபெறுதல். பெரும் - எல்லாப் பொருள்களையும் தன்னுள்
அடக்கி நிற்றலாற் பெரிய என்றார். திரு - “திருநின்ற செம்மை“
என்றபடி செம்மைக்கு ஏதுவாகிய பொருளைத் தன்னுட் கொண்டு
தருகின்றனவாய் விளங்குதலால் திரு (மாமறை) என்றார். திரு -
என்றும் வாராத செல்வம். பசுநூல்களாற் கூறப்படும் திருவெல்லாம்
நிலைபெறாதனவாய்ச் சிறுமையுமுடையன; மாமறை கூறுநெறியாற்
பெறுந் திருவே நிலைபெறும் பெருமையுமுடைய திருவாமாதலின்
அது மன்பெருந்திரு எனப்பட்டது. மா - அளவிடற்கரிதாம்படி
விரிந்த. நிலைத்த - பெரிய - திருவைப்பொருந்தித் - தருகின்ற -
அளவில்லாத மறை - என்க. வேதங்கள் நான்காயினமையின்
அடைமொழிகளும் நான்காயின போலும்.

     மறை வண்டு சூழ்ந்து - வேதமாகிய வண்டுகள் மது
உண்ணும்ஆசையாற் சுற்றி யொலிப்ப சூழ்ந்து - செய்து என்னும்
வாய்பாட்டு வினையெச்சம் செய என் வாய்ப்பாட்டெச்சமாகி
உபசாரத்தால் ஒலிப்ப எனப் பொருள் தந்து நின்றது. “மாமறைகள்,
சொன்ன துறைதொறும் தூப்பொரு ளாயின“ என்பது அப்பர்
பெருமான் (திரு இன்னம்பர் - 1) தேவாரம்.

     சூழ்ந்த என்றமையால் இவற்றின் இடையிலே மது விளங்கும்
என்பதாம். எசுர் வேதத்தின் இருதயத்திலே விளங்குவன சிவ
என்னும் இரண்டெழுத்துக்கள் (அட்சரத்துவயம்) எனப் பெரியோர்கள்
துதித்திருத்தல் காண்க. “எழுதரிய மறைச்சுரும்பு கிடந்து புறத்தலம்ப“
என்பது திருவிளையாடல். சூழ்ந்து - என்றதனால் சுற்றிப்புறத்துக்
கிடப்பதேயாம் எனவும், அகத்திற் சுவைப்பது அன்பர் சிந்தை
எனவும், அப்பாதம் சிந்தைத்தாமரையிலே தேனாக ஊறி
அனுபவிக்கப்பெறுவன எனவும், குறித்ததாம். மறைசூழ்ந்து -
பாதத்தை அகப்படுத்துமாறு சூழ்ச்சிசெய்ய என்பதும் குறிப்பு.

     “மன்று ளாடும்மது வின்னசை யாலே மறைச்சு ரும்பறை
புறத்தின் மருங்கே“ (242) என்று முன்னர்க் கூறியதும் காண்க.
“பண்டைமறை வண்டரற்ற“ என்றார் அருணந்தி சிவாசாரியர்.

அன்பர் சிந்தை அலர்ந்த செந்தாமரை -

“கீழ்மையிற் றொடர்ந்து கிடந்தவென் சிந்தைப்
பாழறை யுனக்குப் பள்ளியறை யாக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி
செந்தை நீயிருக்க விட்டனன்.."
          திருக்கழுமல மும்மணிக்கோவை - 4   

என்ற பட்டினத்தடிகள் திருவாக்குக் காண்க.

“அன்புடைத் தொண்டர்க் கமுதருத்தி, யின்னல் களைவன“
“சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன், முந்திப் பொழிவன“

என்பன அப்பர் பெருமான் திருவிருத்தங்கள். இவ்வலர்ந்த
தாமரையிலே ஊறுவது இறைவனது திருவடியாகிய மது - தேன். அது
தருவது பரமானந்த அநுபவமாம்.

     இவ்வாறன்றிச் சிந்தையிலே அலர்ந்த செந்தாமரை எனக்
கொண்டு சிந்தையை அந்தத் தாமரைபூக்கும் நீர் நிலையாகக்
கூறுவாருமுண்டு. அவர்கள்,

     “........அன்பர் இதய மென்னும், செழுமலரோ டையின்மலர்ந்து
சிவானந்தத் தேன்றதும்பு தெய்வக் கஞ்சத், தொழுதகு சிற்றடி.....“
(விருத்தகுமார பாலரான படலம்) என்று திருவிளையாடற்
புராணமுடையார் இதற்குப் பொருள் கூறியிருத்தலைக் கூறுவர்;
ஆயின் இங்குச் சிந்தைக்குரிய ஓடையாகிய உவமானமும்,
தாமரைக்குச் சிந்தையாகிய உவமேயமும் வருவித்துரைப்பர். இங்குக்
கொண்ட பொருளிலே மறை வண்டு - சிந்தைத் தாமரை - ஆனந்த
மது - என உவமான உவமேங்கள் இயல்பிற் பொருந்திநிற்பன.
அன்றியும் மது தாமரையினுட்கலந்து அது அலரஅலா உள்ளே
ஊறுவதுபோலச் சிந்தையுட் கலந்த திருவடியே அன்பு முதிர முதிர
ஆனந்தமாய் ஊற்றெடுப்பதாம். இங்குத் திருவடியைக் காட்டக் கண்ட
நம்பிகள் அத்திருவடியே “தன்னை நினையத் தருகின்றான்“
(பதினொராந் திருமுறை) என்று நம்பியாண்டார் நம்பிகள்
அருளியபடி மதுவாகிய தம்மையே அளித்ததாகப் போற்றுவதுங்
காண்க. எனவே திருவடியையே மதுவாகக் கூறினர் என்பது.

     நன் பெரும் பரமானந்த நன்மது - வேதத்திலே எனைத்
தேவர்கள் பெயரோடு சேர்த்து விஷ்ணுவானந்தம் -
அக்கினியானந்தம் - இந்திரானந்தம் முதலியன கேட்கப்
பறாமையானும், சிவானந்தம் ஒன்றே கேட்கப்பெறுதலானும்,
சிவானந்தமே பரமானந்தம் என்க. ஆதலின் பிரமானந்தம் என்பதிற்
பிரமசத்தமானது பிரமனைக் குறிக்காது பரப்பிரமமாகிய சிவத்தையே
குறிப்பதாம் என்றுங் காண்க. நல் - என்ற இரண்டில் முன்னையது
ஆனந்தத்திற்கும், பின்னையது மதுவுக்கும் அடைகளாம்.
பரமானந்தமாவது - உயர்வு ஒப்பு இல்லாததும் அழிவில்லாததும்
ஆகிய சிவத்துவ விளக்கமாம். அதனை அழுந்தியறிதலே
அநுபவமெனப்படும். “இன்பமே எந்நாளுந் துன்பமில்லை“ என்றது
திருவாக்கு.

     என்தரத்தும் அளித்து - பெறச் சிறிதும் தரமில்லாத
என்னிடத்திலேயும். உம்மை இழிவு சிறப்பு. அளித்து - கொடுத்து.
அளியினாற் (கருணையினாற்) கொடுத்து எனவும் குறிப்பிட்ட அழகு
காண்க.

“என்னையு மாளுந்தன்மைக் கெந்தையெம் பெருமா னீசன்
றன்னரு ளிருந்த வண்ணம்....“
                         - (திருஞான - புரா - 226)

என்பனவாதி திருவாக்குக்கள் காண்க. பெருமானது அருளிப்பாடுகள்
தம்மிடம் வெளிப்பட நிகழக் கண்டபோது தமது சிறுமையையும்,
அவரது அளவிறந்த பெருமையையும் எண்ணி எண்ணி
ஆராமைப்பட்டு அநுபவித்தல் பெரியோரியல்பு.

“இத்தனையும் எம்பரமோ வைய! ஐயோ!
எம்பெருமான் றிருக்கருணை யிருந்த வாறே“

என்ற அப்பர் பெருமான் தேவாரமும்,

“யாவர்க்கு மேலா மளவிலாச் சீருடையான்
யாவர்க்குங் கீழா மடியேனை - யாவரும்
பெற்றறியா வின்பத்துள் வைத்தாய்க்கு.......“

என்ற திருவாசகமும் காண்க.

     வண்டுசூழ் - என்பதும் பாடம். 191