338. “ஞால முய்ய நடமன்று ளாடின;
 
  கால னாருயிர் மாளக் கருத்தன;
மாலை தாழ்குழன் மாமலை யாள்செங்கை
சீல மாக வருடச் சிவந்தன,“
192

     (இ-ள்.)வெளிப்படை. “உலகம் உய்யும்பொருட்டு ஐந்தொழிற்
பெருங்கூத்தைத் திருஅம்பலத்திலே ஆடின; இயமனது
உயிர்போகும்படி கோபித்தன; மாலையணிந்த கூந்தலையுடைய
உமையம்மையார் தமது செங்கையினாலே உபசரித்துத் தடவச் சிவந்து
காட்டின;

     (வி-ரை.) நடம - ஐந்தொழிற் பெருங்கூத்து. இதனையே
அற்புதக் கூத்து - ஆனந்தக்கூத்து - பொற்றில்லைக்கூத்து என்று
பலவாறும் வகுத்துப் புகழ்ந்து ஆணையிட்டனர் திருமூலதேவ
நாயனார். (திருமந்திரம் ஒன்பதாந் தந்திரம் பார்க்க).

     ஞாலம் உய்ய - உயிர்கள் கடைத்தேறி உய்யும்படியாகப்
படைத்தல் - காத்தல். அழித்தல் - மறைத்தல் - அருளல் என்னும்
ஐம்பெருந் தொழில்களும் இறைவன் செய்கின்றான்; ஆதலின் ஞாலம்
உய்ய என்றார். இவையே தோற்றம் - நிலை - இறுதி - மறைப்பு -
அருள் எனவும் கூறப்பெறும். இவற்றைப் புரிதலையே நடம் ஆடின
என்பர். ஞாலம் - உயிர்களின்மேல் நின்றது. இவற்றின் விரிவு
முன்னர் 42-ம் பாட்டிலும், இன்னும் வந்த பிற இடங்களிலும்
கண்டுகொள்க.

     உய்ய நடம் ஆடின - ஞாலம் - சேதனம் - அசேதனம் என
இருவகைப்படும்; அவற்றுள்ளே அசேதனம், சேதனத்தின்
அநுபவத்திற்கே உரியது. சேதனமாகிய உயிர்கள் மலத்தாற்
கட்டுப்பட்டன. மல மறைப்பு - இருள். இவ்விருள் மிக வலிமை
வாய்ந்தது. அது தானாய் அகலாது; உயிரோ அதனை அகற்ற
வலிமையற்றது; ஆதலின் இயல்பாகவே மலமற்றவனாய்
எல்லாம்வல்லவனாம் ஒருவன் வேண்டும். அவன் தனக்கென்று
உருவமோ செயலோ வேண்டாதவன். ஆதலின் அவன்
உருவத்தையும் செயலையும் மேற்கொண்டால் அது ஞாலமுய்யவே
கொள்வானாதல் வேண்டும். கட்டுண்டு கிடக்கும் உயிர்க்கு
அதனைப்பற்றிய கட்டு நீங்கும்பொருட்டுக் கருவிகரணங்கள்
வேண்டும்; அவற்றுக்காக உடம்பு தருதல் வேண்டும்; உடம்பு
நிற்பதற்காகப் புவனங்களும், அவற்றிலே புசித்து அநுபவித்திருக்கப்
போகங்களும் தருதல் வேண்டும்; இவற்றை மூலகாரணப்
பொருளிளின்று படைத்துத் தருதல் சிருட்டி எனப்படும். அவற்றை
நிலைக்கச் செய்தல் திதி - காத்தல் எனப்பெறும்.
இளைப்பாற்றுதற்காக ஒடுக்குதலையே சங்காரம் என்பர்;
மும்மலங்களின் வழிநின்று அவற்றின் றொழிலை நிகழ்த்துதல்
மறைப்பு; மலநீங்கிய உயிரைத் தன்னடிகூட்டுதல் அருள் என்ப;
இவ்வநை்தையும் இறைவன் சங்கற்ப மாத்திரத்தாலே - நினைப்பு
மாத்திரத்தாலே - செய்வன். இதனை அருட் கூத்தென்றும், அருள்
விளையாட்டென்றும் உபசரித்துக் கூறுவர். இதனையே இங்கு
நம்பிகள் ஞாலம் உய்ய நடம் ஆடின என்றார். சூரியனது சந்நிதி
மாத்திரத்திலே வாவிகளில் உள்ள தாமரைகள் மலர்தலும்,
மலர்ந்தவாறே இருத்தலும், குவிதலும் நிகழ்வதுபோல இறைவனது
சந்நிதி மாத்திரத்தானே இவை நிகழ்வன ஆதலின் ஆடின என்றார்.
ஆடுதல் இறைவன் தொழில்; ஆயினும் ஆடுதற்குரியன பாதங்கள்
ஆதலின் பதம் ஆடின என்றார். பதம் - சிவசத்தி;
அஃதொன்றேயாயினும் அறிதலும் செய்தலுமாகிய தொழில்
வேறுபாடுபற்றி ஞானம் கிரியை என இரண்டாதலின் ஆடின எனப்
பன்மையாகக் கூறினார்.

     காலன் ஆர் உயிர் மாளக் கறுத்தன - ஆருயிர் - மிகு
வலிமை படைத்த உயிர். காலனாரது உயிர் என்றுரைப்பாருமுண்டு.
காலனுக்கு ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பாலன்றி ஆர் விகுதி புணர்த்தற்கு
இயைபின்மை ஓர்க. கறுத்தல் - கோபித்தல். “மாணிக் குயிர்பெறக்
கூற்றை யுதைத்தன“ என்பது அப்பர் பெருமான் தேவாரம்.
“என்னடியா னுயிரைவவ்வே லென்றடற் கூற்றுதைத்த, பொன்னடி“
என்ற தேவாரமுங் காண்க. இறைவனது ஆணையின்வழி அவரவர்
காலத்தைக் கணக்கிட்டுப் போவானாதலின் காலன் என்ப.
அடியார்கள் காலனையுங் கடந்தவர்கள்.

காலனையும் வென்றோங் கடுநரகங் கைகழன்றோம்
மேலை யிருவினையும் வேரறுத்தோங் - கோல
வரணா ரவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து
                  - அற்புதத் திருவாந்தாதி - 81

என்று காரைக்காலம்மையார் திருவாக்குக் காண்க. தனது
அதிகாரவரம்புகடந்தவனாய் இறைபணியின் நின்ற அடியார்களிடம்,
சென்றானாதலின் உதைபட்டான் என்க. பாதமிரண்டாதலின் கோபப்
பிரசாதமென்ற இரண்டு அருட் குணமும் குறிக்கக் கறுத்தன -
சிவந்தன எனக் கறுத்தல் சிவத்தல் இரண்டும் கூறப்பெற்றன.

     மாமலையாள் செங்கை சீலமாக வருட - வருட வேண்டிய
முறையால் வருடுதல் சீலமாக எனப் பெற்றது. வருடுதல் -
உபசரித்தல். இது ஒருவகை வழிபாட்டு முறை. உரிய மரியாதையோடு
மெல்லென வருடவும் - என்க. வருட - வருடவும்; சிறப்பும்மை
தொக்கது.

“மன்னு மலைகள் கையால் வருடின“
“செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்க மலக்கரத்தால்
வருடச் சிவந்தன மாற்பே றுடையான் மலரடியே“

என்பன அப்பர் பெருமான் திருவாக்கு. சீலமாகும் பொருட்டுவருட
என்றுரைத்தலுமொன்று. முன்னே கறுத்தன; பின்னே வருடச்
சிவந்தன என்பது அணி. 192