342.
|
“பெருமையாற்
றம்மை யொப்பார்; பேணலா லெம்மைப்
பெற்றார்; |
|
|
ஒருமையா
லுலகை வெல்வார்; ஊனமே லொன்று மில்லார்;
அருமையா நிலையி னின்றா; ரன்பினா லின்ப மார்வார்;
இருமையுங் கடந்து நின்றா;ரிவரைநீ யடைவா“ யென்று,
|
196 |
(இ-ள்.)
வெளிப்படை. “பெருமையினாலே தமக்குத்தாமே
ஒப்பாவார்கள்; பேணுதற்றன்மையினாலே எம்மைத் தமக்கே
உரிமையாகப் பெற்றார்கள்; எம்மோடொன்றித்து நின்ற
நிலையினாலே உலகத்தை வெல்வார்; அதனால் மேலே
வரக்கடவனவாகிய ஊனங்கள் ஒன்றுமில்லாதவர்; பிறர் எவரும்
நிற்றற்கரிய நிலையிலே நின்றவர்கள்; அன்பு நிறைதலினாலே
இன்பத்தையே நிறையத் துய்ப்பவர்கள்; இம்மை மறுமைகளைக்
கடந்த நிலை பெற்றவர்கள்; இத்தகையினராகிய இந்த அடியவர்களை
நீ சேர்வாயாக“ என்று,
(வி-ரை.)
பெருமையால் தம்மை ஒப்பார் பெருமை -
மகிமை. இவர்களது பெருமையாவது பிறர் எவரும் செய்தற்கரிய
செயல் பலவும் செய்ய வல்லவராதல். “செயற்கரிய செய்வார்
பெரியர்“ - குறள். “செய்தற் கரிய செயல்பலவுஞ் செய்து சிலர்,
எய்தற்கரியதனை யெய்தினர்கள்“ என்பது சாத்திரம்.
(திருக்களிற்று - 61)
பஞ்சம் வந்து உலகமெல்லாம் வருந்துங் காலத்தும் தாம்
அஞ்சாது பெருஞ் சோற்று மலை ஈந்து உயிர்களைக் காத்ததும்,
“பிறந்தார் பெறும்பயன் இரண்டில் அடியார்க் கமுதுசெய்வித்தல்
ஒன்றாமாயின் நீவா“ எனச் சூளுரைத்து ஒரு பாட்டுப்பாடிய
அளவில், எலும்பு உயிரும் வடிவமும் பெற்றெழச் செய்ததும்,
இன்னோரன்ன பிறவும் இவர்களது பெருமையாம். இவற்றை
முன்னர்த் திருக்கூட்டச்சிறப்பிலே, “பூதமைந்து நிலையிற் கலங்கினு,
மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்“ என்பது முதலாக
வடித்தெடுத்து வகுத்தருளினமை காண்க. பின்னர் ஒவ்வோர்
சரிதத்துங் காண்க.
தம்மை ஒப்பார்
- தம்மையே தமக்கு ஒப்பாகப் பெற்றார்.
பிறர் ஒருவரும் ஒவ்வார் என்க. பிரிநிலை ஏகாரம் தொக்கது.
“தனக்கு உவமை யில்லாதான்“ என்பது எமது தன்மை; “எம்மை
அடைந்தஅடியார்களாகிய இவர்களுக்கும் அதுவே தன்மை“ என்று
இறைவன் அறிவித்தவடியாம். இப்பெருமைகளை இப்புராணத்திலே
ஒவ்வோர் நாயன்மார் சரிதத்திலும் தனித்தனி விரிவாகக்
கண்டுணர்ந்துகொள்க.
பேணலால் எம்மைப் பெற்றார்
- பேணுதல் - குழவியைத்
தாய் பேணுமாறு போற்றுதல்; என்றும் இடைவிடாது சிந்தித்து
வாழ்தல். “வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண்“ என்ற
காரைக்காலம்மையார் புராணம் (58) காண்க. எம்மைப் பெறுதலாவது
- எம்மைத் தமக்கே உரிய உரிமைப் பொருளாகப் பெறுதல். நாம்
அவர்களது அன்புக்குள்ளாவோம்; எம்மை அடைய வேண்டுபவர்கள்
அவர்களை அடைந்து, அவர்கள் வழிப்படுத்த எம்மை வழிபட்டு,
அவர்கள்தர எம்மை அடையக்கடவர் என்றபடி. “படமாடக் கோயிற்
பரமர் - நடமாடக் கோயில் நம்பர்“ என்ற திருமூலர் திருமந்திரங்
காண்க. அடியார்களைப் பேணலால் அடியடைந்த சிறுத்தொண்டர்,
அப்பூதியார், குலச்சிறையார் முதலிய நாயன்மார் சரிதங்கள் காண்க.
பேணுதல் - உவப்பன செய்து வழிபடுதல். ‘பெரியாரைப் பேணி -
குறள் - (443) உரை.
ஒருமையால் உலகை வெல்வார்
- ஒருமை உணர்ச்சியினால்
இறைவனோடு ஒற்றித்திருத்தல். “ஒட்டிட்ட பண்பின் உருத்திர
பல்கணத்தார்“ என்பது தேவாரம். இதனையே “மெய்ஞ்ஞானத்
தாணுவினோ டத்துவிதம்“ என்றார் தாயுமானார். இறைவனோடு
ஒன்றிய இடத்து உலகம் அவ்வுயிரைப் பற்றாது அருளுள் அடங்கி
நிற்கும்; ஆதலின், உலகைவெல்வார் என்றார். உலக
பாசக்கோடுகளின் பற்றிலிருந்து விடுபட இது ஒன்றே வழி என்று
ஒருமையால் என இரட்டுற மொழிந்தவாறுமாம்.
ஊனம் மேல் ஒன்றுமில்லார்
- ஊனம் - குறித்ததொன்
றாகமாட்டாக் குறைவு. யாதுங்குறைவிலார் என்றதும்அது. ‘பிறவிப்
பெருங்கடல் நீந்துவர்' என்பது திருக்குறள் ஆணை. உடம்பே
ஊனமாவது. ஏனை ஊனங்கள் உடம்போ டொடுங்குவன.
உடம்பெடுத்தலே - பிறவியே - ஊனங்கட்கெல்லாம் காரணமும்
தாயகமுமாவது. உயிருக்கு வரும் ஊனமாவது உடம்பெடுக்கும் பிறவி.
இவர்கள் பேணலால் எம்மைப் பெற்றாராதலின் பிறவி வாராமற்
செய்துகொண்டார். ஆதலின் மேல் ஊனம் ஒன்றுமில்லாராயினர்.
அருமையாம் நிலை
- பிறரால் அடைதற்கரிய நிலை.
அன்பினால் இன்பம்
ஆழ்வார் - அன்பு காரணமாக
இன்பம் உளதாம். “இன்பமே யென்னுடை யன்பே“, “இறவாத வின்ப
அன்பு வேண்டி“ முதலிய திருவாக்குக்கள் காண்க.
இருமையும் கடந்து நின்றார்
- இருமை - இம்மை மறுமை
என்பன. அவை இம்மை என்னும் இவ்வுலகப்பிறப்பு நிலையும்,
மறுமை என்னும் சுவர்க்க நரகப்பிறப்பு நிலையும் ஆம். இறைவனைப்
பற்றிநின்ற நிலையினாலே இவ்வுலக நிலையையும், சுவர்க்காதி
போகங்களைப் பொருளல்ல வென்றொதுக்கியதால் மறுமையும்
கடந்தவர். “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு“, “போகம்
வேண்டிலேன்பு ரந்த ராதி யின்பமும்“ “சுவர்க்கங்கள்
பொருளளவே“, “உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன்
பேர்வேண்டேன்“. (திருவாசகம்)
“நின்,
றிருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களு மனைவியு மொக்கலுந் திருவும்
பொருளென நினையா துன்னரு ளினைநினைந்
திந்திரச் செல்வமு மெட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தன ரொதுக்கிச்
சின்னச் சீரை துன்னற் கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
சிதவ லோடொன் றுதவுழி யெடுத்தாங்
கிடுவோ ருளரெனி னிலையினின் றயின்று
படுதரைப் பாயலிற் பள்ளி மேவி யோவாத்
தகவெனு மரிவையைத் தழீஇ மகவெனப்
பல்லுயி ரனைத்தையு மொக்கப் பார்க்குநின்
தெய்வக் கடவுட் டொண்டர்“ |
-பதினொராந்
திருமுறை - திருவிடை - மும்மணி - 7 |
முதலிய திருவாக்குகளிற்
கண்ட இலக்கணங்களும், அவற்றிற்
கிலக்கியமாய் விளங்கும் சிறுத்தொண்டர், இயற்பகையார் முதலிய
நாயன்மார் சரிதங்களும் காண்க.
இருமை
- “இருமை வகை தெரிந்து“ என்ற குறளிற்
பரிமேலழகர் இருமை யென்பதற்குப் பிறப்பு வீடென்று உரைகண்டார்.
வீட்டைக் கடந்த நிலை வேறின்மையாலும், இங்கு இருமையுங்கடந்து
என்றமையாலும் ஈண்டு மேலே கண்டவாறுரைக்கப் பெற்றது. இருமை
- எண் குறித்ததாகக் கொண்டு பிறப்பும் இறப்புங் கடந்த
பேராவியற்கை பெற்றார் என்றலுமாம்.
“பெத்தத்துந்
தன்பணி யில்லை பிறத்தலான்
முத்தத்துந் தன்பணி யில்லை முறைமையால்
அத்தற் கிரண்டு மருளா லளித்தலாற்
பத்திப் பட்டோர்க்குப் பணியொன்று மில்லையே“ |
-எட்டாந்
தந் - 507 |
என்ற திருமூலர் திருமந்திரக்
கருத்தினைக்கொண்டு இவர்நிலையினை
இவ்வாறுரைத்தலும் ஒருவகையாற் பொருந்துவதாம். “வீடும் வேண்டா
விறலின் விளங்கினார்“ என்றதும் காண்க.
இவ்வாறன்றி இதற்கு இருவினைகளையும், இன்ப
துன்பங்களையும், பிறப்பிறப்புக்களையும், ஒழித்தவர் என்று
கூருவாருமுண்டு.
இவரை
- அண்மைச் சுட்டு. இதோ இங்கு முன்னர்த்
தேவாசிரியனிற் கூடியிருக்கும் இவர் எனக் காட்டிக் குறித்தபடியாம்.
அடைதல்
- அடிமையாகச் சேர்ந்து அவர்களோடணைதல். 196
|