344. தன்னையா ளுடைய நாதன் றானருன் செய்யக்
                              கேட்டுச்
 
  சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப் பாடி
                                  நாடர்
“இன்னவா றின்ன பண்பென் றேத்துகே? னதற்கி
                                யானார்?
பன்னுபா மாலை பாடும் பரிசெனக் கருள்செ“
                                யென்ன.
198

     (இ-ள்.) வெளிப்படை. தம்மை ஆளாகக்கொண்ட பெருமான்
தாமே இவ்வாறு அருளிச்செய்த ஆணையைக் கேட்டவராய்
அவரைத் தலையார வணங்கி நின்ற நம்பிகள் “அவ்வாறு இவர்களை
நிறைசொன்மாலை பாடுதற்கு இன்னபடி பாடுவது என்றும், இன்ன
பண்பினைப் பாடுவது என்றும் எவ்வாறு அறிந்து துதிப்பேன்?
அத்திருத்தொண்டினுக்கு நான் என்ன தகுதியுடையேன்? இவர்களை
நிறைசொன்மாலை பாடும் தன்மையை நீயே எனக்குத்
தந்தருளிச்செய்தல் வேண்டும்“ என்று வேண்டி நிற்க,


     (வி-ரை.) இன்னவாறு - அவர்களது வரலாறு இன்னது.
இன்னபண்பு - அவர்களது தன்மை இன்னது. ஏத்துகேன் - இவை
இன்ன என்றறியாமையால் எவ்வாறு ஏத்தவல்லேன்?

     அதற்கு யான் ஆர் - அவ்வாறு ஏத்துவதற்கு என்ன உரிமை
- என்ன தகுதி “நான் ஆரென் னுள்ளமார்?.....என்னை
ஆண்டிலனேல்“ என்ற திருவாசகம் காண்க.

     பாடும் பரிசு எனக்கு அருள்செய் - “உன்றன்
குணப்பெருங்கடலை நாயேன், யாதினை யறிந்தென் சொல்லிப்
பாடுகேன்“ (218) என மொழிந்து முன்னர்க் கேட்டதும்,
ஆண்டானைப்போலவே அடியாரும் உணரவும் ஓதவும் படாராதலின்
அதற்கு இறைவனை வேண்டிப் பெறுதலும் உய்த்துணர்க.   198