345. தொல்லைமால் வரைபயந்த தூயாடன் றிருப்பாகர்
 
  அல்லறீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால்
“தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு
                           மடியே“ னென்
றெல்லையில்வண் “புகழாரை யெடுத்திசைப்பா
                         மொழி“யென்றார்.
   199

     (இ-ள்.) வெளிப்படை. பழைய பெரிய இமய மலையிலே வந்து
தூயவளை ஒரு பாகத்திலே யுடைய இறைவன், உலகம் துன்பநீங்கி
உய்தற் பொருட்டு வேதங்களை அருளிச்செய்த தமது
திருவாக்கினாலே “தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன்“
என்று தொடங்கி எல்லையில்லாப் பெரும்புகழுடையார்களாகிய
இவ்வடியார்களை எடுத்துத் துதித்துப் புகழ்மாலை பாடுவாயாக!
என்றருளிச் செய்தார்.


     (வி-ரை.) தொல்லை.....பாகன் - தொல்லை - பழமை;
மால்வரை - பெரிய மலை; தூயாள் - தூய்மைகட்கெல்லாம்
இடமானவள்; கருணையே திருமேனியாதலின் தூயாள் என்றார்.
பாட்டுக்குரிய கருணையுடன் அருள்செய்தார் என்றது குறிப்பு.
“சத்தியருளன்றிச் சத்தனருளின்றாம்“ (திருமூலர்) என்றபடி தான்
சத்தியுடையானாகி அருளினன் என்றலுமாம் அருணாதவொலியாய்
மந்திரமாய் அருளப்பெறும் அப்பாட்டுக்கு அருட்சத்தியுடன் கூடிய
உருவினனாகித் தோற்றுவாய் செய்தருளினன் என்ற கருத்துமாம்.

     அல்லல்தீர்ந்து உலகு உய்ய - உலகு உய்யமறையளித்த -
என்றும், உலகு உய்யப் பாடுக - என்றும் இரண்டிடத்தும் இயைத்துப்
பொருளுரைத்துக் கொள்க. உலகுய்ய
மறையளித்தலாவது
தருமங்களை விதித்தலும், நமகம் சமகம் உருத்திரம்
முதலியவற்றால் இறைவனது இலக்கணங்களை ஒருவகையாற்காட்டி
நிற்றலும் ஆம். இவற்றை அறிந்தொழுகுவதனால் உலகம்
உய்யுமென்பது. மறையளித்த திருவாக்கால் அடியெடுத்துச் சொன்னார்
என்றமையால் இதுவும் மறையேயாம் என்று எடுத்துக்காட்டியவாறு.
மறையளித்தவர் அதனோடமையாது இதனைச் சொன்னார் எனவே,
அதனினும் சிறந்ததாய், அடியார்களைத் துதித்தும், ஆண்டான்
அடியார் இலக்கணங்களை நேரே எடுத்துக் கூறியும் விளங்கும்
இதன் சிறப்பையுங் குறித்துக் காட்டியபடியாம்.

     உலகு உய்ய மொழி என்று காட்டியவிடத்துத் “தீதிலாத்
திருத்தொண்டத் தொகைதர“ (35), “தேசமுய்யத்திருத்தொண்டத்
தொகைமுன்பணித்த திருவாளன்“ (சண்டீசர் - 60) முதலிய
திருவாக்குக்களை நினைவுகூர்க. இதனால் உலகம் உய்தலாவது
அடியவர் கூட்டத்தைச் சார்ந்து அவர்களது சத்பாவனைப்பயன்
பெறுதலும், அதனால் ஆகாமியம் மேலும் ஏறாது
காத்துக்கொள்ளுதலும, வாசனாமலம் தாக்காது காவல் பெறுதலும்
முதலியனவாம். விரிவு சிவஞானபோதம் 12-ம் சூத்திரத்துட் காண்க.

     தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன -
இது தியாகேசர் அடி எடுத்துக் கொடுத்த முதல். “என்பெயர்
பித்தனென்றே பாடுவாய்“ (219) என முன்னர்த் தம்மைப்பாடுதற்குப்
பித்தன்என்ற ஒருமொழியே சாலும் என எடுத்துக்கொடுத்த இறைவன்,
தம் அடியாரைப் பாடுதற்கு இவ்வாறு இப்பாட்டின் ஒரு பாதி
அடியினை முதலாக எடுத்துத் தந்தருளினது அடியார்
பெருமையையும், அவர்களைப் பாராட்டும் முறையையும்
உணர்த்துதற்காம். அந்தணர்க்கடியேன் என்னாது
அந்தணர்தம்அடியார்க்கும் அடியேன் என்றது அடியவரின்
அருமையும் பெருமையும் குறித்தற்கு. “ஆசையொடும்
அரனடியாரடியாரை யடைந்திட்டு“ என்ற சாத்திரமும்
இக்கருத்தேபற்றியது. வைணவர்வழிபாட்டு முறையில் இவ்வாறே பல
அடுக்கிக் கூறுவதும் காண்க.

     தில்லை வாழ் அந்தணர் - நடராசரை முதல்வராகக்
கொண்ட தில்லைமூவாயிர முனிவர். அந்தணர் என்றது
“அறவாழியந்தணன்“ என்ற குறளிற் போலவும், “திருமார்பன்
முதலாய தேவருக்கெல் லாமறையோன் சிவனே யாமென்,
றொருவாய்மை மறைகரைந்தது“ (பேரூர்ப் புராணம்) என்றபடி
வேதங்களில் விதித்தது போலவும் முதற்கண் இறைவனை
உணர்த்தும். அதன்பின் இரட்டுற மொழிதலால் மூவாயிர
முனிவோரையும் உணர்த்தும். இதன் விரிவு தில்லைவாழந்தணர்
புராணத்துட் காண்க.

     எல்லையில் வண்புகழ - அளவு கடந்த வள்ளற்றன்மையால்
வந்த புகழ். “அளவிலா வடியார் புகழ்“ (5) எனப்
பாயிரத்துட்கூறியதுங் காண்க. “இது பெரும்பாலும் ஈதல்பற்றி
வருதலின் அதன் பின் வைக்கப்பட்டது“ எனப் புகழ் என்ற
அதிகாரத்தின் வைப்பு முறையைப் பரிமேலழகர் விளக்கினார்.
வண்புகழார் - வள்ளன்மையால் - வரையாது கொடுத்தலாற் போந்த
கீர்த்தியையுடையார் என்க. “சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலியார்“
முதலிய நாயன்மார் சரிதங்களாலே இதன் உண்மை தெளிக.
சீர்கொண்ட புகழ் என்பதனை “ஞாலமார் புகழின் மிக்கார் -
சாலுமீகைத் திறத்திற் சிறந்த நீரார்“ - (சிறப்புலி - புராணம். 3)
என்று பின்னர் ஆசிரியர் விளக்கியருளியதும் காண்க.

     இசைப்பா - இசைகளைத் தம்முட்கொண்ட பாட்டு.
சிவபெருமானது இசைகளைக் (புகழ்களைக்) கொண்ட பாட்டு.
திருவிசைப்பா என வழங்குவதும் காண்க.

     பாகன - திருவாக்கால் - அடியேன் என்று எடுத்துப் -
புகழாரை - இசைப்பா - உலகுய்ய - மொழி - என்றார் எனக்
கூட்டியுரைக்க. 199