348. தம்பெருமான் கொடுத்தமொழி முதலாகத்
                           தமிழ்மாலைச்
 
  செம்பொருளாற் றிருத்தொண்டத் தொகையான
                            திருப்பதிக
மும்பர்பிரான் றானருளு முணர்வுபெற வுலகேத்த
எம்பெருமான் வன்றொண்டர் பாடியவ
                      ரெதிர்பணிந்தார்.
202

     (இ-ள்.) வெளிப்படை. தமது இறைவன் எடுத்துக்கொடுத்த
மொழிகளையே முதலாக வைத்துத் தொடங்கிய தமிழ்ப்
பாமாலையாய்ச் செம்பொருள் கொண்டு திருத்தொண்டத்
தொகையாகிய திருப்பதிகத்தை அந்த இறைவனே அருளும்
உணர்வுபெறுதலால் உலகம் ஏத்துமாறு எமது தலைவராகிய
வன்றொண்டர் பாடி முடித்து அத்திருக்கூட்டத்தின் முன்னர்
வணங்கினார்.

     (வி-ரை.) தம்பெருமான - தம்மை ஆட்கொண்டு பணித்த
இறைவன். முன்னர்த் திருக்கயிலையிலும், பின்னர்த் திருவெண்ணெய்
நல்லூரிற்றொடங்கி இங்குப் போந்தவரையிலும் பணிகொண்டவர்.

     மொழி - தொடர்மொழி. “தில்லைவா ழந்தணர்தம் மடியார்க்கு
மடியேன்“ என்பதாம். முதலாக அதனையே தொடக்கமாகக்
கொண்டு என்க. கைமுதல் - விதைமுதல் - என்பன போலக்
காரணமாகி ஊதியமாக - மூலதனமாக - என்றுரைத்தலுமாம்.

     தமிழ்மாலை - நிறை சொன்மாலை (343) எனும்
தமிழ்ப்பாட்டுக்களா லாகிய மாலை. இது பதிகத்தின் தொடையைக்
குறித்தது. செம்பொருளால் - இது பதிகப் பொருளைக் குறித்தது.
எனவே சொல்லும் பொருளும் குறித்தபடியால் செம்பொருள் -
செம்மையைத் தரும் பொருள். செம்மை - சிவத்தன்மை - முத்தி.
“திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட“ என்ற இப்பதிகம்
நான்காவது பாசுரங் காண்க.

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு“ என்பது குறள்.
 
“செம்மைபெற வெடுத்ததிருத் தோடுடைய செவியனெனு
மெய்ம்மைமொழித் திருப்பதிகம்
                       - (திருஞான - புரா - 76)

          “தீதுறு பிறவிப் பாசந் தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு“ -
(மேற்படி 1245) முதலிய திருவாக்குக்கள் காண்க.

     சைவசமய பரமாசாரிய மூர்த்திகளது தேவார திருவாசகங்களின்
பயன் பிறவி நீங்கி வீடடைவதேயாம் என்பது ஆன்றோர் துணிபு.
செம்பொருளால் என இத்திருப்பதிகத்துக்குப் பொருள்கண்டார்
ஆசிரியர்.

     திருத்தொண்டத் தொகையான - திருத்தொண்டர்களது
வரலாறும் பண்பும் இன்ன என்று தொகுத்துக் கூறுவதான.
முன்பாட்டிற் கண்டது பதிகப்பெயர். இங்குக் கூறியது அதன்
பொருளமைதியும் விவரணமுமாம். தொகையான - தொகைக் கூற்று
ஆயின. திருப்பதிகம் - பத்துப்பாட்டுக்கொண்ட பாமாலை பதிகம்
எனப்பெறும். இது பொதுவிலக்கனத்தாலே, சிறுபான்மை 11 - 12
பாட்டுக்கொண்ட பாமாலைகளுக்கும் பொருந்த வழங்குவது. இங்கு 11
திருப்பாட்டுக் கொண்ட இத்தமிழ்மாலை பதிகமெனப்பெற்றது. பதிகம்
- முன்னர் (48) இப்புராணத்திற்குப் பதிகமாய்க் கொள்ளப்
பெற்றதென்று உரைத்தலுமாம்.

     உம்பர்பிரான் தான் அருளும் உணர்வுபெற உலகு ஏத்த -
உம்பர் பிரான் - தேவவுலகிலே அரசு வீற்றிருந்தருளிய தியாயகேசர்.
அவர் அருளிச்செய்த உண்மையறிவினை உண்முகமாகப்
பெற்றதனாலே அதனை உலகம் ஓதி உய்யும்பொருட்டுப் பாடி என்க.
மொழிஎடுத்துக் கொடுத்தருளு முன்னரே பொருள்களை உண்ணின்று
உணர்த்தினார். என்பது “மன்னுசீர் அடியார் தங்கள்
வழித்தொண்டையுணர நல்கி“ (341) என மேலே கூறியதனாற்
பெற்றாம்.

     எனவே திருத்தொண்டத் தொகைப்பொருள் யாவும் இறைவன்
அருளிய பதிஞானத்தாற் பாடியதாலும், அவனே தந்த மொழிகொண்டு
பாடியதாலும் அது முற்றும் தியாகே சருடைய வாக்கேயாய்ப்
பதிவாக்காகியவேதமே என்பது துணியப்பெறும்.

     பெற பாடி - பெறுதலினாலே அதன் துணைகொண்டு பாடி.
உலகேத்த - உலகம் அறிந்து ஓதித் துதித்து உய்யும்படி. இதுவே
நம்பிகளது அவதார தத்துவமுமாம் என்பது. “தீதிலாத்திருத்
தொண்டத் தொகைதரப் போதுவார்“ (35) என்று முன்னர்க்
கூறப்பெற்றது.

     அவர் - வீரத்தார்களான அத்திருத்தொண்டர்கள்.

     வன்றொண்டர் - மன்னவரைச் சென்னியுற
அடிவணங்கியவராகிய (346) அந்த வன்றொண்டர். தொண்டர் எதிர்
பணிந்தார் என்று உரைத்துக்கொள்க.

     தொகையான்ற - என்பதும் பாடம்.  202