351. கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி  
  அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துணின்று
பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி
                                  போற்றி.
2

     (இ-ள்.)கற்பனை.............சோதி - பசுஞான பாசஞானங்களாற்
கற்பிக்கப்பெற்ற அவைகளை எல்லாம் கடந்து நின்ற, முன்பாட்டிற்
கூறிய அந்தச் சோதிப் பொருளானது; கருணையே உருவம் ஆகி -
அருளே திருமேனியாகக்கொண்டு; அற்புதக் கோலம் நீடி -
அறிதற்கரிய அற்புதமாகிய கோலத்திலே நீடி; அருமறைச்
சிரத்தின்...........நின்று - அரிய வேதசிரசாகிய உபநிடதங்களின்
உச்சியில் உணர்த்தப்படும் ஞானாகாயத்தின் வடிவமேயாகிய
தில்லைத் திருச்சிற்றம்பலத்திலே நிலைத்து நின்று;
பொற்புடன்........போற்றி - அழகுடனே திருக்கூத்துச் செய்கின்ற
பூப்போன்றதும் கழலை யணிந்ததும் ஆகிய திருவடி நம்மாற்
போற்றப்பெறுவது! போற்றப்பெறுவது!!

     (வி-ரை.) கற்பனை கடந்த சோதி - கற்பனை கற்பிக்கப்
பெறுவதெல்லாம் கற்பனை எனப்படும். உருவமாகிய கற்பனைக்கு
முதற்காரணமாகிய மாயையைக் கடந்த ஞானவடிவம் என்றும், பல
சமயவாதிகளும் தத்தமக்குத் தோன்றியவாறே புனைந்துரைத்த
கற்பனையைக் கடந்த சோதி என்றும், சதாசிவம் மகேசுவரம் முதலிய
நிட்கள சகள மூர்த்திபேதங்களைக் கடந்த ஒளியுருவன் என்றும்
பலவாறுரை கூறுவாருமுளர். தனக்குமேல் ஒருவரிருந்து
கற்பித்தலின்றித் தானே எல்லாவற்றையும் கற்பிக்கின்ற
சுயம்பிரகாசமாகிய சோதி என்பது கருத்து. கற்பனை -
பாவனையுமாம்.

“முத்தியு ஞானமும் வானவ ரறியா முறைமுறை பலபல
                            நெறிகளும் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை“

           - சுந்தரர் தக்கேசி - திருக்கழுமலம் - 2

     “இவனிறைவ னென்றெழுதிக் காட்டொ ணாதே“ - முதலிய
தேவாரங்களும்,

“கதுமெனப் பாழைக் கடந்தந்தக் கற்பனை
யுதறிய பாழி லொடுங்குகின் றேனே“

                - எட்டாந் தந் - 376

என்ற திருமந்திரம் முதலிய திருவாக்குக்களுங் காண்க.

      சோதி - மேற்பாட்டிலே சோதியாய் உணர்வுமாகி என்ற
அந்தச் சோதியைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டார். இப்பாட்டிற்
கூறிய கருத்தையே,

“ஆரணங்கள் முடிந்தபதத் தானந்த வொளியுலகிற்
காரணங்கற் பனைகடந்த கருணை திரு வுருவாகி“

என்று கோயிற் புராணத்திலே உமாபதியார் பொருள் விரித்துரைத்தது
காண்க.

     கருணையே உருவம் ஆகி- தனக்கென ஒன்றும் வேண்டாது
உயிர்களின் மேல் வைத்த அருளே திருமேனியாகக் கொண்டு. ஆதி
நடுமுதலாகச் சொல்லப்பட்ட அவர் திருமேனி தாங்கி நிற்றற்குக்
காரணமும் திருமேனியின் அமைவும் கூறியவாறு.

     “செப்பிய மூன்றும் நந்தங், கருமேனி கழிக்க வந்த
கருணையின் வடிவு காணே“ என்பது ஞான சாத்திரம்.

     அற்புதக் கோலம் நீடி - இன்னதென்று உணரவும் ஓதவும்
படாததோர் இன்பானுபவத்தைத் தரும் திருக்கோலத்திலே நிலைத்து.

  “அற்புதத் தெய்வ மிதனின்மற் றுண்டே“
       - கருவூர்த்தேவர் - கங்கை - 3
 
“பத்தியா யுணர்வோ ரருளைவாய் மடுத்துப் பருகுதோ                           றமுதமொத் தவர்க்கே
தித்தியா விருக்குந் தேவர்கா ளிவர்தந் திருவுரு
                              விருந்தவா பாரீர்“
                   - பூந்துருத்தி - திருவாரூர் - 2

என்ற திருவிசைப்பாக்கள் காண்க. அற்புதமாவது - இன்னதென்று
சுட்டியறியப்படாது அதுவாய்நின்று அனுபவிக்கப் பெறுவதோர்
இன்பானுபவம், 286 பாட்டு உரை கண்க.

     அருமறைச்சிரம் - வேதசிரம் எனப்படும் உபநிடதம்.

     மேலாம் சிற்பர வியோமம - அது பிறப்பதற்கும் மீள
ஒடுங்குதற்கும் நிலைக்களனாகிய ஞானாகாயம். இதனையே
சித்பரமாம் அம்பரம் என்றருளினார் கோயிற் புராணமுடையார்.
சித்தென்ற சொல்லுக்குப் பின்னதாகியவியோமம். வியோமம் -
அம்பரம் - ஆகாயம். பரம் - பின், சிற்பரவியோமம் ஆம்
திருச்சிற்றம்பலம் என்றது ஞானாகாயமேயாகிய அம்பலம்.

“அண்ண லார்தமக் களித்தமெய்ஞ் யானவம்                             பலமுந்தம்
உண்ணி றைந்தஞா னத்தெழு மானந்த வொருபெருந்                           திருக்கூத்தும்.“
                      - திருஞான - புரா - 160

என்று பின்னர் இதனையே ஆசிரியர் விரித்துரைத்ததும் காண்க.

     பூங்கழல் - அழகிய கழலையணிந்த திருவடி என்றலுமாம்.
முன்பாட்டிற்றுதித்தது இறைவனது நிட்களத் திருமேனியை யென்றும்,
இப்பாட்டிற்கூறியது அவனது சகளத்திருமேனியை யென்றும் கூறுவர்.
முதற்பாட்டிலே நடம் போற்றி என்றும், இப்பாட்டிலே நடஞ்செய்யும்
பூங்கழல் போற்றி என்றும் கூறியதையும் காண்க.

     கழல் - காலணி மணிவடம், “அரன்கழல் செலுமே“ (8-ம சூத்)
என்றது போலத் திருவடியைக் கழல் என்றலுமாம். “கழலணிதற்
கேதுவாகிய வெற்றிப் பாட்டைக் கழல் என உபசரித்தார்“ என்பது
மாபாடியம். “கள்ளவினை - வென்று பிறப்பறுக்கச் சாத்தியவீ
ரக்கழலும்“ - போற்றிப்பஃறொடை. தில்லை வாழந்தணர் புராணத்
தொடக்கத்திலே இவ்விரண்டு பாட்டும் கூத்தப்பெருமானது துதியாகக் கூறினமை என்னெனில் இவர் தில்லை வாழந்தணர்களில்
ஒருவராயும் அவர்களில் முதல்வராயும்இருக்கும் உண்மைபற்றி என்க.

     “நாமிவரி லொருவரெனுந், தேவர்க டேவன செல்வம்“

என்று கோயிற்புராணமுடையார் மூவாயிர முனிவர் துதியிற்
குறித்துள்ளதும் காண்க. சோதியின் கழல் என்றியையும். 2