355. மறுவிலா மரபின் வந்து மாறிலா வொழுக்கம்                                 பூண்டார்;  
  அறுதொழி லாட்சி யாலே யருங்கலி நீக்கி
                                 யுள்ளார்;
உறுவது நீற்றின் செல்வ மெனக்கொளு முள்ள
                                 மிக்கார்;
பெறுவது சிவன்பா லன்பாம் பேறெனப் பெருகி
                                வாழ்வார்;
6

     (இ-ள்.) மறுவிலா.......பூண்டார் - (இவர்கள்) குற்றமற்ற
மரபிலே வழிவழியாக வந்ததன்றியும் இடையறாத நல்லொழுக்கத்தை
மேற்கொண்டவர்கள்; அத்தொழில்.....உள்ளார் - தமக்குரிய ஓதல்
முதலிய ஆறு தொழில்களையும் விதிப்படி செய்து
வருகின்றமையாலே உலகத்தின் உயிர்கட்கெல்லாம் கலியை வாராமற்
பாதுகாத்தவர்கள்; உறுவது....மிக்கார் - தாம் பெறக்கடவதாகிய
உறுதிப்பயன் திருநீற்றின் நெறியாலாகிய அருட்செல்வமே என்று
கொண்டொழுகி மிக்கெழும் ஆசையுள்ளவர்கள்; பெறுவது.....வாழ்வார்
- சிவபெருமானிடத்துத் தாம் பெறத் தக்க பெரும்பேறாவது அவன்
திருவடியிலேயே பதிந்த அன்பொன்றுமேயாம் என்று கொண்ட
பெருவாழ்வுடையார்கள்;

     (வி-ரை.) மறுவிலா மரபு - தாய் தந்தை என்ற இருமரபும்
வழிவழிச் சுட்டியறியத் தக்கவாறு தூயராம் தன்மை குறித்தது.
“இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி“ என்றார் நக்கீரதேவர்.

     மாறிலா ஒழுக்கம் - மாறுதல் - இடையறுதல் - அஃதில்லாது
நிலைபெற்றுநின்று ஒழுகும் ஒழுக்கம். “நிலையிற்றிரியாது“ - குறள்.
நிகரில்லாத என்றலுமாம்.

     அறுதொழில் - அந்தணர்க்குரியனவாய் நூல்களில் விதித்த
ஓதல் முதலிய ஆறு தொழில்கள். ஆட்சி - இவற்றைத் திறம்பட
வழுவாதியற்றல். முன் குறித்த ஒழுக்க மின்னதென்று கூறியபடி.

     அருங்கலி நீக்கி - இஃது இவர்களது தொழிலால் உலகம்
பெறும் பயன் குறித்தது. தம்மிடமும் கலி வாராமல் நீக்கியவர்
என்றலுமாம். “கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார்“
என்றும், “செல்வ நெடுமாடஞ்சென்று சேணோங்கிச் செல்வமதி
தோயச் செல்வ முயர்கின்ற, செல்வர்வாழ் தில்லை“ என்றும்
இதனையே திருஞான சம்பந்த நாயனார் அருளியமை காண்க.
கற்றல
- ஓதல் ஓதுவித்தலும், எரியோம்பல் - வேட்டல்
வேட்பித்தலும், கலிசெறுதல் - ஈதல் ஏற்றலும் என இங்குக் கூறிய
அறுதொழிலும் கருதியது காண்க. ஓதல் - வேத
சிவாகமமாதி
சிவநூல்களை ஓதுதல். வேட்டல - சிவபெருமானை நோக்கிச்
செய்யும் சிவவேள்விகளை யியற்றல்.

     உறுவது - தாம் அடையக் கருதுவது. உயிர்கள் அடையத்தக்க
தென்பதுமாம். தமது தொழிலொழுக்கத்தாலே பிறர்க்குரிய பயன்
கலிநீக்குதலாகவே, தாம் உறுவது நீற்றின் செல்வமும், தாம்
குறிக்கோளாகக் கொண்டபேறு அன்பும் ஆகக் கொண்டவர் என்க.
நீற்றின் செல்வர் சிறப்பும் இயல்பும் திருநீற்றுப் பதிகத்துட் காண்க.

     பெறுவது சிவன்பா லன்பாம் பேறு - வேதத்திற்
சொல்லப்பெற்ற பிரமானந்தம் சிவானந்தமே எனக் குறித்தொழுகுதல்.
“சிவம் சதுர்த்தம் சாந்தம் அத்வைதம் மன்யந்தே“ என்ற
வேதவிதிப்படிச் சிவனையே நினைந்து ஒழுகுதல். இதனையே “பொது
நீக்கித் தனைநினைய வல்லோர்க்கென்றும் பெருந்துணையை“
என்றருளினார் அப்பெருமான். பேணுதல் - வழிபடுதல். 6