359. அகலிடத் துயர்ந்த தில்லை யந்தண ரகில
                                மெல்லாம்
 
  புகழ்திரு மறையோ ரென்றும் பொதுநடம் போற்றி
                                    வாழ!
நிகழ்திரு நீல கண்டக் குயவனார் நீடு வாய்மை
திகழுமன் புடைய தொண்டர் செய்தவங் கூற
                                 லுற்றாம்.
10

     (இ-ள்.) அகலிடத்து.........வாழ! - பரந்த உலகிலே
உயர்வுடைய தில்லைவாழந்தணர்களாகிய உலகம் எல்லாம் புகழ்ந்து
போற்றும் செல்வத் தெய்வ வேதியர்கள் நித்தமும் தில்லைச்
சிற்றம்பலத்தின் அத்தனது அருணடனத்தைப் பேணிப் போற்றி
வாழ்வார்களாக! நிகழ்....உற்றாம் . திருநீலகண்டம் என்ற பெயரோடு
நிகழ்ச்சி பெற்ற குயவனராகிய நீடு செலுத்திய வாய்மைத்தன்மை
விளங்குதறகிடமாகிய அன்புடைய தொண்டனார் செய்தவத்தின்
வரலாற்றினைச் சொல்லப் புகுகின்றோம்.

     (வி-ரை.) உயர்ந்த அந்தணராதலின் அகிலம் புகழ்
வேதியராயினர் என்க. உயர்ந்த என்பதனைத் தில்லைக்கு
அடையாக்கி, ஆகாய தத்துவ நிலயமான் தலமாதலின் உலகில்
உயர்ந்ததாகிய தில்லை என்றுரைத்தலுமாம். வேதாகம
புராணேதிகாசங்களாலும், தமிழ் மறைகளாலுந் துதிக்கப்படும் உயர்வு
என்றலுமாம்.

     அகிலமெல்லாம் புகழ்தல - மேற்கூறிய பண்புகளாலாகியது.
திருஞான சம்பந்த நாயனார் தில்லைவாழந்தணர்களைச்
சிவகணநாதர்களாய்க் கண்டு தேவாரத்திலே வைத்துத் துதித்த
வரலாறு அவர் புராணத்துட் காண்க. (திருஞா - புரா - 170.)
என்றும் எக்காலத்திலும். என்றும் வாழ எனக் கூட்டுக.

     நிகழ் திருநீலகண்டக் குயவனார் - நிகழ் - “திருநீல
கண்டத்துக்குயவனார்“ என்ற திருத்தொண்டத் தொகையின்
பொருளைக் குறித்தது. நீடுவாய்மை திகழும் அன்பு ஒரு ஆயுள்
அளவும் கைக்கொண்டு செலுத்தப்பெற்ற உண்மைத் திறத்தினாலே
விளக்கம்பெற்ற அன்பு. இவற்றின் விரிவு அப்புராணத்துட்
காணப்பெறும்.

செய் தவம் - தவம் -
  

“அகனமர்ந்த வன்பினரா யறுபகைசெற் றைம்புலனு மடக்கி
                                         ஞானப்
புகலுடையோர்“

         - திருஞான - மேகராகக் குறிஞ்சி திருவீழி - 6

என்றபடிக்குள்ள தவநிலை பூண்டு வாழ்தல். சரிதம் இதனை விரித்துக் கூறும்.

     நிகழ் நீடு - என்பன வினைத்தொகைகள். அவ்வவையும்
முக்காலத்தும் செல்லும் திறமை நோக்கிக் கூறிய அழகு காண்க.
இங்குக் கூறிய இவையும், செய்தவம் என்றதும் திருநீலகண்ட
நாயனாரது சரித தத்துவங்களாமாறும் உய்த்துணர்க.

     போற்றி வாழ - இப்புராண முதல் இரண்டு பாட்டிலும்
கண்டவாறுபோற்றியும் பின்னர்க் குறித்தவாறு பேணியும் வாழ்தல்.
“போற்றிநீ டில்லைவாழந்தணர்.“ (352) என்ற இடத்து மேலே
கண்டவாறு போற்றிக்கொண்டு வழி வழியாய் என்றும் நீடி வருகின்ற
என்பார் என்றும் போற்றி வாழ என்று கூறி முடித்தார்.
அகிலமெல்லாம் புகழ் என்றதனாலே ஆசிரியர் தாமும் அவர்களைப்
போற்றி வாழ்த்தி முடித்தனர்.

     எடுத்துக்கொண்ட புராணத்தை முடித்துக் காட்டி இனி வரும்
புராணத்துக்குத் தோற்றுவாய் செய்தார். இவ்வாறே வரும்
புராணங்கள் தோறும் கண்டு கொள்க. முடித்துக் காட்டுவதிலும்,
தோற்றுவாய் செய்வதிலும், அவ்வப்புராண சரித தத்துவங்களை
எல்லாம் சுருங்கத் தொகுத்துக் காட்டி விளக்கும் அழகும்
கண்டுகொள்க.

     வாழ்க - என்பதும் பாடம். 10