361.
|
பொய்கடிந்
தறத்தின் வாழ்வார்; புனற்சடை
முடியார்க்
கன்பா |
|
|
மெய்யடி
யார்கட்கான பணிசெய்யும் விருப்பி
னின்றார்;
வையகம் போற்றுஞ் செய்கை மனையறம் புரிந்து
வாழ்வார்;
சைவமெய்த் திருவின் சார்வே பொருளெனச் சாரு
நீரார்; |
2 |
(இ-ள்.)
பொய்.......வாழ்வார் - (முன்பாட்டிற்
கூறிய அவர்)
பொய்ம்மையை ஒழித்து அறநெறியிலே வாழ்பவர்; புனல்....நின்றார்
- கங்கையைத் தரித்த முடியையுடைய சிவபெருமானது உண்மை
யடியார்களுக்கு வேண்டுவனவாகிய பணிவிடைகளைச் செய்யும்
விருப்ப மிக்க ஒழுக்கமுடையார்; வையகம்...வாழ்வார்
- உலகிலே
சிறந்ததாகக் கொண்டொழுகப்பெறும் இல்லறத்தை விதிப்படி
வழுவாதுசெய்து வாழ்பவர்; சைவ...நீரார்
- சைவத்தின் உண்மைச்
செல்வத்தின் சார்பே பொருளாவது என்று உணர்ந்து சார்ந்து ஒழுகும்
தன்மையுடையவர்;
(வி-ரை.)
பொய்கடிந்து அறத்தின் வாழ்தல்
-
மெய்பொருள் இதுவென்றும் பொய்ப்பொருள் இதுவென்றும் உணர்ந்து
பொய்யினைத் தள்ளி உண்மை நெறியாகிய சிவநெறியிலே வாழ்பவர்.
அறம் - ஈண்டுச் சைவ நல்லறங்களின் மேனின்றது.
பின்னர்
மனையறம் வேறு பிரித்துச் சொல்லப் பெறுதலின், இங்குக் குறித்த
அறம் உலக நிலையின் வைக்கும் அறங்களின் வேறாகிய பதிதருமம்
எனப் பெறும் சிவதருமங்கள் என்க.
அன்பாம் மெய்யடியார்
கட்கான பணி - உண்மை
யடியார்கள்.அன்பாகிய உண்மைத் தன்மையில் நிலைபெற்றவர்கள்.
பொய்யடியார் என்பதொன்றில்லாமையின் அன்பாமெய் என்பது
இயல்பு குறித்து நின்றது. ஆனபணி - வேண்டுவன
- ஆவன -
ஆகிய பணிவிடைகள் தம்மாற் செய்யத் தக்கன. இப்பணிவிடையே
இச்சரித நிகழ்ச்சிக்குக் காரணமாயினமையால் இதனை இங்குச்
சிறப்பித்து எடுத்துக் கூறினார். இவ்வாறே ஏனைச் சரிதங்களிலும்
கண்டுகொள்க.
வையகம் போற்றும்
செய்கை மனையறம் - உலகிற்
பெரியோர்கள் சிறந்தன என்று கொள்ளும் விருந்தோம்பல் முதலிய
செயல்களைச் செய்தற்குரியதான இல்வாழ்க்கை. வையகம் போற்றும்
செய்கை என்றதற்கு நீதிநூல்களில் விதித்தவாறு வையகத்துள்
துறந்தார் முதலிய யாவர்க்கும், ஏனை எல்லா வுயிர்க்கும்
பற்றுக்கோடாய் நின்று பாதுகாக்கும் செய்கை என்றுரைத்தலுமாம்.
சைவ மெய்த் திருவின்
சார்வு - சைவச் செல்வமாகிய
திருநீறு - கண்டிகை - சடைமுடி - சீபஞ்சாக்கரம்
முதலிய
உண்மைச்சார்புகள். ‘சார்புணர்ந்து சார்புகெடவொழுகின்
என்ற
குறள் காண்க. அஞ்செழுத்துந் திருநீறுங் கண்டிகையும்
பொருளாக்கொண்ட நாயன்மார் - காஞ்சிப் புராணம்.
பொருள்
- உண்மைப் பொருள்; இதுவே பொருள்;
ஏனையவெல்லாம் பொருள் அன்று - என்று சார்ந்தார் என்க.
பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும் - மருளானாம்
மாணாப் பிறப்பு என்பது குறள். நீரார் -
நீர்மையுடையவர்.
முடியார்க்கன்பர்
- என்பதும் பாடம். 2
|