367.
|
கற்புறு
மனைவி யாருங் கணவனார்க் கான
வெல்லாம்
|
|
|
பொற்புற
மெய்யு றாமற் பொருந்துவ போற்றிச்
செய்ய
இற்புறம் பொழியா ரங்க ணிருவரும் வேறு வைகி
அற்புறு புணர்ச்சி யின்மை யயலறி யாமை
வாழ்ந்தார்.
|
8 |
(இ-ள்.)
கற்புறு.....செய்ய - கற்புடைய மனைவியாரும்
தமது
நாயகருக்கு வேண்டுவனவாகிய எல்லாப் பணிவிடைகளையும் அழகு
பெறவும், ஆனால், தமது மேனி அவரது மேனியிற் றீண்டாமலும்,
இல்வாழ்க்கையிற் பொருந்தும் செய்கைகளைச் சோர்வுபடாது காத்துச்
செய்துவந்தாராக; இற்புறம்பு....வைகி -
தமது வீட்டைவிட்டு
வெளியிலே நீங்காது, அவ்வொரு வீட்டிற்றானே இருவரும் தனித்தனி
வாழ்வார்களாகி; அற்புறு....வாழ்ந்தார்
- அன்பு செலுத்தும் மெய்யுறு
புணர்ச்சி ஒன்றுமட்டும் இல்லாது வாழும் தன்மையை அயலார்
ஒருவரும் தெரியாதவாறு வாழ்ந்து வந்தார்கள்.
(வி-ரை.)
கற்புறு மனைவியார் - தான்
இருக்க -
தங்கியிருத்தற் கேற்ற - இடமிதுவே என்று கற்பு வந்து சேர்தற்குரிய
மனைவியார். அருந்ததிக் கற்பின் மிக்கார் - (363) என முன்னர்க்
கூறியது இவரது கற்பின்றிறம் புலவி கொண்ட போது திறம்பாத
நிலையைக் குறித்தது. தமது புலவியின் மிகுதிப் பாட்டிலே சொன்ன
ஆணையாலே, இவ்வாறு. இல்வாழ்க்கையிற் சிறப்புத் தன்மையாகிய
மெய்யுறு புணர்ச்சியையும், அதனாற்பெற நின்ற நன்கலனாகிய
மக்கட்பேற்றையும் இழக்க நேர்ந்தது. இவ்வகையாலே வாழ்க்கைப்
பயனுக்குதவாது தாம் கணவனாராற்றுறக்கப்பட நேரிட்டபோதிலும்
கற்பு நிலையிற்றிரியாது கணவனார்க்கானவற்றை யெல்லாம்
போற்றிச்செய்து வாழ்ந்த சிறப்பினை உணர்த்தற்கு மீண்டும் கற்புறு
மனைவியார் என அநுவதித்துக் காட்டியவாறு.
பொற்புற மெய்யுறாமல்
- அழகுபடச் செய்தனர்; ஆனால்
அவ்வாறு செய்தலிலே இருவரும் மேற்கொண்ட ஆணைவழியே
நிற்பார் உடம்பு படாமற் செய்தார் என்க. பொற்பு உறவும், மெய்
உறாமலும் என்ற சொல்லழகும் காண்க.
பொருந்துவ
- மெய்யுறாமற் செய்யத் தக்கவையும்,
இல்வாழ்க்கையின் விதிப்படி பொருந்தியவையும், போற்றிச் செய்ய -
விருப்பத்தோடும் எவ்வகையிலும் தாழ்வுபடாமலும் காத்துச் செய்ய.
இற்புறம்பு ஒழியார்
- தமது வீட்டினின்றும் வெளியிற்
செல்லாதவர்களாகி. ஒழியார் - ஒழியாராகி.
முற்றெச்சம். ஒழியாராய்
வைகி - என இயையும்.
அங்கண்
- அவ்வொரு வீட்டினுள்ளே. வேறு - வெவ்வேறாய்.
வேறு வேறாய், வைகி - இல்வாழ்க்கை நடத்தி
வாழ்ந்து.
அற்புறு
புணர்ச்சி - நாயகன் நாயகிகள் தம்முள் அன்பு
செலுத்தலும், அன்பு மிகுதலும் நிகழ்தற்குக் காரணமாகிய மெய்யுறு
புணர்ச்சி. இணை விழைச்சு என்பர். அன்பு
- எதுகை நோக்கி அற்பு
என நின்றது.
அயலறியாமை வாழ்ந்தார்
- பிறர் எவரும் அறியாதவாறு.
அயல் வீட்டாரும் தெரியாதவாறு. இந்நிகழ்ச்சி ஒரு நாளிரவு
இவ்விருவர்க்குள்ளும் நிகழ்ந்த அந்தரங்கமாம். நாயகன் நாயகிக்குள்
நிகழும் ஊடல் முதலிய அகவொழுக்கங்களைப் பிறரறிய வைத்தல்
உயர் குடிப்பிறந்தார் மரபன்று. நல்லொழுக்கமு மன்று. அன்றியும்
திருநீலகண்டத்தின் வைத்த ஆர்வம் நாயனாரும், அவரை அந்த
ஆர்வமுற ஆண்ட இறைவனும் அறியநின்ற அந்தரங்கம். அதன்
வலிமையாலே, வலிய காமத்தைக் கடக்கச் செய்ததும் அவ்விறைவன்
பேரால் நிகழ்ந்த ஆணை. இவற்றையும் பிறர் அறிய வைத்தல்
மரபன்று. அருளுடையா ரளித்தருளுஞ் - செவ்விய பேரருள்
விளம்புந் திறமன் றென்றுரை செய்யார் (27) என்ற
காரைக்காலம்மையார் புராணம் காண்க.
இது காரணம் பற்றியே பின்னர்த் தில்லைவாழந்தணர்
தீர்ப்பின்
பின்னரும் தீண்டாமை செப்ப மாட்டார் (395) என இச்சரிதத்துக்
கூறலும் காண்க. அயலறியாது வாழ்ந்த, ஆணைபோற்றிய,
இவ்வுண்மை வாழ்வினை உலகமறிந்து உய்யும்படி இறைவனே வந்து
அறிவிக்க நின்றது என்பது இச்சரித நிகழ்ச்சியாதலின் அயலறியாது
வாழ்ந்ததே சரித நிகழ்ச்சியின் உள்ளுறையான
தத்துவங்களிலொன்றாம். பின்னர்க் குளக்கரையில் இறைவனதாணை
வழியே பாரோர் கேட்ப நாயனார் சொல்லுதலும் காண்க (397).
நாயகன் நாயகிகளினிடை நிகழும் ஒரு சிறிய அகப்பொருளும்
ஊர்தூற்ற நின்று இல்லதுமுள்ளதுமாக ஊரலர் பெருகவாழும் இந்நாள்
மாக்களது தகாத பொய்யொழுக்கத்தினை இம்மெய்யொழுக்கத்தின்
தூய நெறியினோடு ஒத்து நோக்கி உலகம் உண்மை கண்டு
உய்வதாக.
பொற்புறுமெய்
- போற்றிச் செய்தே - ஒழியாது - என்பனவும்
பாடங்கள்.
|