369. இந்நெறி யொழுகு நாளி லெரிதளிர்த் தென்ன
                                நீண்ட
 
  மின்னொளிர் சடையோன் றானுந் தொண்டரை
                        விளக்கங் காண
நன்னெறி யிதுவா மென்று ஞாலத்தார் விரும்பி
                                யுய்யும்
அந்நெறி காட்டு மாற்றா லருட்சிவ யோகி யாகி,
10

     (இ-ள்.) வெளிப்படை. இவர்கள் மேலே குறித்த இந்த
நெறியிலே வாழ்கின்ற நாளிலே, எரியானது தளிர் விட்டு நீண்டதோ
என்னும்படி வளர்ந்து ஒளி வீசுகின்ற சடையையுடைய
சிவபெருமானும், தமது தொண்டராகிய நாயனாரது உண்மைத்
தன்மையைக் கண்டு உலகத்தார் இதுவே நன்னெறியாம் என்றறிந்து
விரும்பிக் கைக்கொண்டு உய்யச் செய்யும் அந்நெறியினைக் காட்டும்
வகையினாலே அருட்சிவ யோகியாராகிய கோலத்தைத்
தாங்கிக்கொண்டு, (அக்கோலத்திலே).

     (வி-ரை.) எரிதளிர்த்தென்ன நீண்ட மின்னொளிர் சடை -
நெருப்புத் தளிர்விட்டு - நீண்டு வளர்ந்ததுபோல மின்னி
விளங்குகின்ற சடை. “பொலிந்திலங்கு மின்வண்ண மெவ்வண்ணம்
வீழ்சடை“ என்பது பொன்வண்ணத்தந்தாதி (1) “அழனீ ரொழுகி
யனைய சடையும்“ - கௌசிகம - திருச்சோற்றுத்துறை (1) என்பது
சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம். தளிரை வாட்டும் எரி தானே
தளிர்த்ததுபோல என்க. முன்னே எரிந்ததுபோலக் காணப்படினும்
பின்னே தளிர்த்தது என இச்சரிதப் பின் நிகழ்ச்சிக் குறிப்பாம்.
முன்னர் இறைவன் சினந்து பேசலும், பின்னர் அருள்வதும்,
நாயனாரது இளமை கழிந்து முதுமை வருதலும், பின்னர் அவ்விளமை
மீளத் தளிக்கப்பெறுதலும் சரிதத்துக் காண்க.

     விளக்கம் காண - ‘நகரங்காண் படலம்' என்றதிற்போலக்
காண - செய்ய - விளக்கஞ் செய்தற்பொருட்டு என்க. ஞாலத்தார்
உய்யும் நெறி காட்டுமாற்றால் தொண்டரை விளக்கம்
செய்தற்பொருட்டு என்பது. முன்பெல்லாம் அயலறியா வகை ஆணை
போற்றினாராதலின் விளக்கஞ்செய்து உய்யுநெறி காட்டுதல் இறைவர்
கடனாயிற்று. தான் எல்லாக் காலத்தும் எல்லா விடத்தும் எல்லாம்
அறிபவன் ஆதலின் தான் காண அல்லது சோதிக்க என்பது
பொருளன்றாம். காணவேண்டுவதும், சோதித்தறிய வேண்டுவதும்
தனக்கு வேண்டுவதில்லை என்க.

“காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போற்
காண வுள்ளத்தைக் கண்டு காட்டலி
னயரா வன்பி னரன்கழல் செலுமே“
      -சிவஞானபோதம் - சூத்திரம் - 11

     இச்சூத்திரத்தின் கீழ் ஆசிரியர் எமது மாதவச் சிவஞான
முனிவர் “அறிவிக்க அறியுமியல்புடைய அவ்வான்மா
விடயத்தையறியும்படி முதல்வன் அதனோ டொருங்கியைந்து நின்று
அறிவித்து அறிந்து வருதலான்“ என்று பிண்டப் பொழிப்புரைத்து,
அதன்கீழ், “அறிவானுந்தானே அறிவிப்பான்றானோ“ என்றோதிய
அம்மை (காரைக்காலம்மையார் அற்புதத் திருவந்தாதி - 20) “
அறிவாயறிகின்றான்றானே எனவு மோதியதூஉமென்க“ என எடுத்துக்
காட்டியருளினார். இவ்வுண்மைகளை இங்கு வைத்துணரக்
காட்டுமாற்றால் (உலகருடன் கலந்து நின்று) தானும் காண என்றதும்
உன்னுக. உயிர்களுக்கு நெறி காட்டித் தான் தொண்டரை விளக்கங்
கண்டான் என்பதும் கருத்து. இவ்வாறே மேலும் - வரும்
புராணங்களிலும் காண்க.

     நன்னெறி.......காட்டும் ஆற்றால் - இது நன்னெறியாம் என்று
விரும்பி ஞாலத்தார் உய்யும் அந்நெறி காட்டும் ஆற்றால் என்று
மாற்றுக. இதுவே - என ஏகாரம் விரித்துரைக்க.

     நன்னெறி என்று - நல்ல வழி எனக் கண்டு; விரும்பி -
விரும்பிப் பின்பற்றி; உய்யும் அந்நெறி விரும்புகின்றதனாலும் பின்
பற்றுவதனாலும் அவர்களை உய்விக்கும் அந்த வழியை.

     காட்டும் ஆற்றால் - காட்டுகின்ற வகையினாலே -
காட்டுவதற்காக; கண்ணுக்குப் பொருளைக் காட்டும் கதிர் ஒளிபோல
இறைவன் காட்டினாலன்றி உயிர்கள் காணா ஆதலால் காட்டும்
ஆற்றால் என்றார். தொண்டரை விளக்கஞ் செய்தல் ஞாலத்தார்க்கு
நெறி காட்டற்பொருட்டே என்பதாம். ஞாலத்தார் - உயிர்கள்.
வானிடத்தவரும் மண்மேல் வந்தே உய்தி பெறவேண்டுதலின்
அச்சிறப்புத் தோன்ற ஞாலத்தார் என்றார். அந்நெறி என்ற சேய்மைச்
சுட்டு முடிவில் அடையப்பெறும் உய்தியாகிய பயனையும், இதுவாம்
என்ற அண்மைச் சுட்டு அப்பயனை விளைவித்துத் தருவதாய்
இங்குக் காட்டப்பெற்ற சாதனத்தையும் குறித்தன.

     இதுவாம - உலகப் பற்றுக்கள் எவையாயினும் இறைவ
னன்பினை நோக்க அவை யாவும் கீழ்ப்படுத்தத்தக்கன என்பது. இது
- பத்தி வைராக்கியத்தைக் குறித்தது என்றும், பெண்ணை ஆணும்,
ஆணைப் பெண்ணும் நீத்துறைவதைக் குறித்ததன்று என்றும் உரை
கூறுவாருமுளர். இது இப்புராண முழுமையும் காணும் குறிக்கோளைக்
குறிக்கொள்ளாது கூறுவதாம். இறைவனன்புக்குமுன்,
மனைவியின்பமோ, மக்களின்பமோ அன்றித் தந்தையோ, கண்ணோ,
தலையோ எவையும் மேலாகக் கொள்ளப்படமாட்டா என்பதே
திருத்தொண்டர்களின் வாழ்க்கைத் தத்துவமாம்.உலகம் ஒருபுறம் கீழ்
இழுக்க நிற்கவும், இறைவன் மற்றொருபுறம் மேல் உயர்த்த நிற்கவும்
உயிர்கள் உலகத்தைத் தாழ்த்தி இறைவனைப் பிடித்து நின்ற உயர்ந்த
சரிதங்களே இப்புராணத்துட் காணப்பெறுவன. ஈண்டு இறைவனது
பெயராலெழுந்ததோர் ஆணைச் சொல்லை ஆயுள் முழுவதும்
இளமைச் செயல்களையும் காமத்தையும் முழுதும் அறுத்து
நீத்துறைவதைச் செய்வித்தது. ஐம்புலவின்பங்களை இறையன்புக்குமுன்
ஒழியச் செய்வதே இங்கு நன்னெறி இதுவாம். என்றதாம்.
“அடல்வேண்டு மைந்தன் புலத்தை“ என்றதுங் காண்க.

     அருட்சிவயோகி யாகி
- அருளுடைய சிவத்தன்மை
விளங்கும் யோகி கோல முடையாராகத் திருமேனிதாங்கி. அதனைப்
பின்வரும் இரண்டு பாட்டுக்களும் கூறும். 10