374. “எம்பிரான்! யான்செயும் பணியெ?“ தென்றனர்
 
  வம்புலா மலர்ச்சடை வள்ள றொண்டனா;
ரும்பர்நா யகனு“மிவ் வோடுன் பால்வைத்து
நம்பி!நீ தருகநாம் வேண்டும் போ“ தென்று,
15

     (இ-ள்.) வெளிப்படை. “எமது நாயகரே! இனி யான்
செய்யக்கடவதாகிய பணிவிடை யாது? அருளிச் செய்தல் வேண்டும்;“
என்று வாசனைவீசும் கொன்றை மலர் தரித்த சடையையுடைய
வள்ளலாகிய சிவபெருமானது தொண்டனார் சொன்னார்; தேவ
தேவனாகிய சிவயோகியாரும் “நம்பியே! இந்த ஓட்டினை
நீ உன்னிடம் வைத்திருந்து நாம் வேண்டும்போது மீளத்
தருவாயாக!“ என்று சொல்லி,  

     (வி-ரை.) எம்பிரான்! - எங்கள் பெருமானே! - நாயகரே! -
அண்மைவிளி.

     யான் செயும் பணி எது - செயும் பணி - தேவரீர்பாற்
செய்யக்கடவதாகிய பணி. பணி எது - நூல்கள் மொழிந்த பூசைகள்
யானறிவகையா லியற்றினேன்; மேற்செயத்தக்க பணி மொழிந்தருள்க
என்றபடி. தேவரீர் என்னிடம் வேண்டியது யாது என்பதற்கு நான்
செயும்பணி யாது என்றது பெரியோர்களிடம் விண்ணப்பிக்கும்
சம்பிரதாயமான மரியாதைக் கூற்று.

     வம்புலா மலர் - இடத்திற் கேற்ப மலர் என்ற பொதுப் பெயர்
கொன்றை குறித்தது.

     வள்ளல் - தலைவரே அடியார் வேடம்பூண்டு வந்தருளியதால்
வள்ளல் என்றார்.

     வைத்து உன்பால் நம்பி! நீ தருக நம்பி - ஆடவரிற்
சிறந்தவனே! - அண்மைவிளி. நம்பிக்கைக்குப் பாத்திரமானவன்
ஆதலின் உன்னிடம் ஒப்புவிக்கின்றேன் என்பது குறிக்க இப்பெயராற்
கூறினார். நம்பி வைத்தும் - நம்பிக்கையாக வைக்கின்றோம் -
என்பது இராமநாதச் செட்டியார் உரைக் குறிப்பு. 15