375. “தன்னையொப் பரியது; தலத்துத் தன்னுழைத்
 
  துன்னிய யாவையுந் தூய்மை செய்வது;
பொன்னினு மணியினும் போற்ற வேண்டுவ;
தின்னதன் மையதிது; வாங்கு நீ“ யென,
16

     (இ-ள்.) வெளிப்படை. தனக்கு ஒப்பாக வேறொன்று
மில்லாதது; தனதிடத்தினுள்ளே பொருந்திய பொருள்கள்
எல்லாவற்றையும் சுத்தமாக்குவது; பொன்னையும் மணியையும்விட
மிகக் காக்கவேண்டுவது; இத்தகைய தன்மையுடையது; இதனை
வாங்குவாயாக! என்று சொல்ல,

     (வி-ரை) தன்னை ஒப்பு அரியது - பிறபொருள் எவற்றிற்கும்
இதனை ஒப்பாகும் தன்மை அரியது. “தனக்குவமை யில்லாதான்“
என்ற எமது தன்மை போன்றதே யாம் வைத்திருக்கும் இதன்
தன்மையுமாம் என்பது குறிப்பு.

     தலத்துத் தன்னுழைத் துன்னிய - தனது இடத்தினுள்ளே
பொருந்திய. தன் தலத்துழைத் துன்னிய என்று மாற்றுக. இவ்வுலகில்
தன்னிடம் பொருந்தும் என்றுரைப்பாரு முண்டு. தலம் -
இப்பாத்திரத்தில் பலியை இடும் இயைபு உள்ள பரப்பு. அதிகார
எல்லை என்பர் நவீனர். அந்தப் பரப்பு இவ்வுலகமேயன்றி எல்லா
வுலகமுஞ் சென்று விரிந்தது என்பது இதன் தத்துவமாம்.

     துன்னிய யாவையும் தூய்மை செய்வது - துன்னிய
பொருள்கள் தூய்மையற்றவையேயாயினும் அவற்றை யெல்லாம்
சுத்தமாக்குவது. யாவையும் - எல்லாவற்றையும். உயிர்கள் தமது
கன்மங்களை எல்லாம் தன்வசமாக ஒப்புவித்துத் தனக்கே
அர்ப்பணம் செய்தபோது இறைவன் அவற்றைப் புனிதமாக்கி
அவ்வுயிர்களை ஈடேற்றுவன் என்பது சாத்திரம். “துள்ளு மறியா
மனது பலி கொடுத்தேன்“ என்றது தாயுமானார் பாட்டு. உயிர்கள்
இறைவன் பரமாகச் செய்யும் எல்லாம் ஏற்றுக்கொள்ளும் தன்மையே
அவனது பலிப்பாத்திரம் எனப்படும்.

     பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது -
பொன்னையும் மணியையும் பார்க்கிலும் அதிகமாகப் பாராட்டிக்
காக்க வேண்டிய பொருள். “ஓடும் செம்பொனு மொக்கவே
நோக்குவார்“களும், “புல்லோடுங் கல்லோடும் பொன்னோடு
மணியோடுஞ் சொல்லோடும் வேறுபாடிலாநிலைமை துணிந்திருந்த
நல்லோர்“களும் ஆகிய அடியார்கள் விரும்பிக் கையிற் கொள்வது
இவ்வோடேயாம். “ஓடுங்கவந்தியுமே யுறவென்றிட்டுள் கசிந்து“ என்ற
திருவாசகமும் (குலாப்பத்து 1) காண்க. போற்றுதல் - வழிபடுதல்
எனக் கொண்டு பொன்னும் மணியும் கொண்டு இதனைப் பூசிக்க
வேண்டுவது என்றுரைப்பாருமுண்டு. இதனைக் கேட்ட நாயனார்
இவ்வோட்டினைப் பெற்று “மனையில் ஓர் மருங்கு காப்புறும்
எல்லையில் வைத்து“ வந்தனர் (376) என்றதால், போற்றல்
என்பதற்குக் காப்பாற்றல் என்றுபொருள் கொள்ளுதலே சிறந்ததாம்.

     தூய்மை செய்வது; ஆதலின் ஒப்பரியது; ஆதலின் போற்ற
வேண்டுவது எனக் காரண காரியமாகத் தொடர்ந்து பொருள்
கொள்க.

     இன்ன தன்மையது இது - மேலே கூறியவற்றை
முடித்துக்காட்டியபடி. “இன்ன தன்மையனென்றறி யொண்ணா
எம்மான்“ தனது பலிப்பாத்திரத்தின் தன்மை தன்னை ஒப்பரியதாகிய
இது எனக் காட்டியதன் அழகு காண்க.

“பிச்சைய தேற்றான் பிரமன் றலைதன்னிற்
பிச்சைய தேற்றான் பிரியா வறஞ் செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரமன்பர மாகவே“

என்ற திருமூலர் திருமந்திர (ஏழாந் தந்திரம் - 184)மும் பிறவுங்
காண்க. “பாத்திரமறிந்து பிச்சை யிடு“ என்ற பழமொழி தன்பாற்
பொருந்தியவற்றை யெல்லாம் தூயதாக்கும் தன்மையுடைய இது
போன்ற ஓட்டினைப் பற்றியதாம் என்பதும் குறிப்பு.

     வாங்கு நீ - மேலே கண்ட தன்மையுடைய சற்பாத்திரமாகிய
இதனை வாங்கும் தகுதியுள்ள சற்பாத்திரம் நீயேயாவாய் என்றதொரு
குறிப்பும் காண்க. வாங்கு - ஏவல். இவ்வோடு உப்பால் வைத்து நாம்
வேண்டும்போது தருக என்று மேற்பாட்டிலே சொல்லி
விட்டாராதலின், இங்கு வாங்கு என்ற மட்டிற் கூறினார். வாங்கி
வைத்துத் தருக என்று நாம் சொன்னோம். ஆனால் அதன்படி
தருதல் உன்னால் இயலப்போகின்றதில்லை. வாங்குதல் மட்டும்
செய்வாய் என்று குறிப்பதற்கு இங்கு வாங்கு என்றதனோடமைந்தனர்
என்றலுமாம்.

     என - என்று சொல்லி, அதனைக் கொடுக்க என்க.

     இங்கு அதனைக் கொடுக்க என்றது இசையெச்சம். இப்போது
இறைவர்தரும் அருள் மறைந்து நிற்பதுபோலச் சொல்லும் மறைந்து
நின்றதுபோலும்.
பின்னர் “என்றும் இவ்விளமை நீங்காது நம்பால்
விருப்புடனிருக்க“ என (401) வெளிப்பட்டுச் செய்யும் அருள்
வெளிப்படச் சொல்லப்பெறுதலும் காண்க. 15