376. தொல்லைவேட் கோவர்தங் குலத்துட் டோன்றிய
 
  மல்குசீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்
டொல்லையின் மனையிலோர் மருங்கு காப்புறு
மெல்லையில் வைத்துவந் திறையை யெய்தினார்.
17

     (இ-ள்.) வெளிப்படை. பழமையாய் வழிவழி வரும் குயவர்
குலத்தின் தோன்றலாகிய மிகுகின்ற சிறப்புடைய தொண்டனார்
வணங்கி அதனை வாங்கிக்கொண்டு விரைந்து சென்று, தமது அந்த
வீட்டில் ஒரு தனியிடத்துக் காவல் பொருந்தும் இடத்தில் சேமித்து
வைத்து மீண்டு இறைவரை யடைந்தனர்.  
     

     (வி-ரை.) தொல்லை - பழமையாய் வழி வழி வருகின்ற.
வேட்கோவர்தந் தொல்லைக்குலம் எனக் கூட்டியுரைக்க. இவ்வாறு
இக் குலநலத்தையும் பழமையையும் கூறியது, இந்நாயனார்
ஒருவரையே குலம்பற்றித் தேற்றம் பெற முதனூலிற்
“றிருநீலகண்டத்துக் குயவனார்“ என எடுத்துக்காட்டித்
துதித்தமையால் என்க. இதுபற்றியே முன் புராணத்திறுதியில்
தோற்றுவாய் செய்த இடத்தே “திருநீலகண்டக் குயவனார்“ (359)
என்று காட்டிய ஆசிரியர் “தில்லை மூதூர் வேட்கோவர்“ (360),
“வேட்கோவர் தம்மனை“ (371), “திருந்து வேட்கோவர்“ (378)
“வேட்கோவர்“ (388), “இந்த வேட்கோவன்“ (391), “நிறை யுடைய
வேட்கோவர்“ (392), எனப் பல இடத்திலும் குலச்சிறப்புக் காட்டிச்
செலுத்துதல் காண்க. மனிதன் வீடுகட்டி வாழவும், சோறு சமைத்து
உண்ணவும் தொடங்கிய அன்று முதலே அவனுக்கு ஓடும் கலனும்
தந்து உதவிசெய்யத்தொடங்கியது இக்குலம்; மேலும் துறந்தார்க்குந்
துணையாய் நின்றதாம்; மற்றும் கொடுமை என்பது சிறிதும் கலவாத
தொழிலுமாம் என்பனவாதி சிறப்புக்களும் நோக்கி இவ்வாறு
ஆசிரியர் கூறிப் போந்தனர் என்க.

     மல்குசீர் - மல்குதல் - மிகுதல் - நிறைதல். கடத்தற்கரிய
காமப்பிணியையும் திருநீல கண்டத்தின் ஆணையாலே கடந்தது
முன்கால நிகழ்ச்சி; பெறுதற்கரிய திருவோட்டினைப் பெறுவது
இப்போது நிகழ்கால நிகழ்ச்சி; இறைவன் வெளிப்பட மீளவும்
இளமைபெற்று மீளா நெறியடைதல் இனிவரும் எதிர்கால நிகழ்ச்சி
- என முக்காலத்தினும் மிகுதலினால் மல்குசீர் என முக்கால
வினைத்தொகையாற் கூறினார்.

     வணங்கி வாங்கிக்கொண்டு - வணங்கி - பெரியோர்களின்
ஏவலை வணங்கி ஏற்றுக்கொள்ளும் முறைப்படி தலைவணங்கி.
கொண்டு - ஏற்றுக் கொண்டு.

     ஒல்லையின - விரைந்து சென்று. பெரியோர்களின் ஏவலை
யியற்றுதலின் மேற்கொள்ள வேண்டிய விரைவு குறித்தது. சென்று
என்பது தொக்கி நின்றது. சென்றமை காணார், திரும்பி வந்தமை
மட்டும் கண்டார் எனச் செய்கையின் விரைவு குறிப்பார் சென்று
என்பதனைத் தொகவைத்தார்.

     மனையில் வீட்டிற்குள்ளே, ஓர்மருங்கு - அதற்குரிய ஒரு
தனியிடத்தில், காப்புறும் எல்லை - அதனுள்ளும் காவல்
பொருந்திய தொருவகை. (பொன் - மணி முதலியவைகளை வைக்கக்
கூடிய பெட்டி என்பர் மகாலிங்கையர்.) இம் மூன்றினாலும் யோகியார்
சொல்லிய எச்சரிக்கையை நாயனார் பின்பற்றி ஓட்டினைப் போற்றிய
அருமை கூறியபடியாம்.1

     இறையை எய்தினார்
- யோகியார் மனையில் இருக்கவே
அவர் திருமுன்பே அவரது ஆணையை நிறைவேற்றி வந்தார்
நாயனார் என்பது குறிப்பு. உம்பர் நாயக (374) னாகிய அந்த
இறையை எனவும், வள்ளல்தொண்டனாராகிய (374)அத்தொண்டனார்
எனவும் சுட்டுவருவித்துக் கூட்டியுரைத்துக் கொள்க. தொண்டனார்
- பிரானைத்தொண்டரென்று - கொண்டணைந்து - பூசைகள் செய்து
- பின்- “பணி எது?“ என்றனர்; உம்பர்நாயகனும் - “இவ்வோடு -
வைத்துத் - தருக“ என்று (கூறி) அரியது - செய்வது - வேண்டுவது
- இது; வாங்குநீ“ என, (அத்) தொண்டனார் - வணங்கி - வாங்கி -
வைத்து - வந்து - (அந்த) இறையை - எய்தினார் என்று இந்நான்கு
பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக் கொள்க. 17


     1மனை - தமது உடல்; ஓர் மருங்கு - மனம்; காப்புறும்
எல்லை
- திருநீலகண்ட ஆணை போற்றிய உணர்வு; வைத்து -
அவ்விடத்தே அது போலவே இதனையும் கொண்டு; இறையை
எய்தினார் - அதனால் இறைவனைக் கூடினார், என இப்பாட்டில்
உள்ளுறை பொருள் காண்பாரு முண்டு.