379. வந்தபின் றொண்ட னாரு மெதிர்வழி பாடு செய்து
 
  “சிந்தைசெய் தருளிற் றெங்கள் செய்தவ“ மென்று
                                    நிற்ப,
“முந்தைநா ளுன்பால் வைத்த மொய்யொளி
                            விளங்கு மோடு
தந்துநில்“ லென்றா னெல்லாந் தான்வைத்து
                          வாங்க வல்லான்.
20

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு இறைவன் முன்புபோல்
வந்தபின் நாயனாரும் (முன்புபோல) எதிர் கொண்டு அழைத்து வந்து
விதிப்படி வழிபாடு செய்து, “தேவரீர் அடியேனை நினைந்து
எழுந்தருளியது யாங்கள் செய்த தவமே“ என்று கூசி மொழிந்து
நின்றாராக; எல்லாப் பொருள்களையும் தானே வைக்கவும் மீள
வாங்கவும் வல்லாராகிய அவ்விறைவர், “முன்னாள் உன்னிடம் நான்
கொடுத்து வைப்பித்த மிக்க ஒளி விளங்கும் ஓட்டினைத் தந்து
நிற்பாயாக“ என்றார்.

     (வி-ரை.) தொண்டனாரும் - தலைவனார் முன்பு வந்தது
போலவே வந்தாராகத் தொண்டனாரும் அப்போது செய்தது
போலவே வழிபட்டார் என்க. உம்மை இறந்தது தழுவிய எச்சம்.

     எதிர் - எதிரே. எதிர் கொண்டு அழைத்து உபசரித்து. சிந்தை
செய்தருளிற்று எங்கள் செய்தவம் - சிந்தை செய்தருளுதல -
நினைத்தல். “எங்களையு நினைந்தருளிற் றென்றியம்ப“ (ஏயர்கோன்-
புரா - 126) என்றது காண்க.

     எங்கள - தம்மையும் தம்மனைவியாரையு முள்ளிட்டுப்
பன்மையிற் கூறினார். இவர்களது இல்வாழ்க்கைத்திறம் (367) முன்
உரைக்கப்பட்டமை காண்க. எங்கள் என்றது நாயனாரையும்
அடியார்களையும் உள்ளிட்டதென்று கூறுவாரு
முண்டு. செய்தவம -
முன்னரும் செய்தவம் (359) என்றமை காண்க. நாயனாரும்
அம்மையாரும் செய்த தவத்தினைவிடப் பெரியதும் அரியதும்
வேறில்லை என்க.

     நிற்ப - எதிரே வணங்கி முறைமையின் நின்றாராக. முன்னரும்
நின்றபின் (373) “நின்ற தொண்டர்“ (377) என்றது காண்க.

     மொய் ஒளி விளங்கும் ஓடு - முன்னர்க் (375) கூறிய அரிய
தன்மையில் விளக்கம் மிக்குத் திகழும் திருஓடு. கோலமார் ஓடு
என்று மேலே கூறியது காண்க. மொய்த்தல - தொகுதியாய்க் கூடுதல்.

     தந்து நில் - தருக நாம் வேண்டும்போதென்று கொடுத்த
அதனை இப்போது நாம் வேண்டினோமாக, மீளத் தந்து அதன்பின்
என்பால் நிற்பாயாக. நில் - நிற்பாய் என்றபடி. தம்முன் நின்ற
அவரை இப்போது நிற்பதனோடன்றித் தந்த பின் நில் என்றவாறு.
நில - பின்னர்ச் சரித முடிவில் என்பால் நிலைத்து நிற்பாயாக என்ற
குறிப்புமாம்.

     எல்லாந் தான் வைத்து வாங்க வல்லான - “விச்ச
தின்றியே விளைவு செய்குவாய் விண்ணு மண்ணகம் முழுதும்
யாவையும், வைச்சு வாங்குவாய்“ (திருச்சதகம் - 96) என்ற
திருவாசகம் காண்க. தனதுடைமையாகிய சுத்தாசுத்த
மாயைகளிலிருந்து எல்லா உலகங்களையும், அவற்றின்கண் அனுபவ
பதார்த்தங்களையும், அவற்றை அனுபவிக்கத்தக்க கரணங்களையும்,
அக்கரணங்களையுடைய உடம்புகளையும் தோற்றுவித்து
உயிர்களுக்குக் கொடுத்து, உயிர்களின் மலங்களைப் போக்கிப்
பின்னர், மீளவும் அவ்வுலக முதலியவற்றை அம்முதற்
காரணங்களிலே ஒடுங்கும்படிச் செய்யவல்லவன் இறைவன் என்பது
உண்மைநூற்றுணிபு. வைத்து என்பது உலக முதலியவற்றை
அவ்வவ்வற்றிற்குரியபடி நிலைபெறவைத்தல் குறித்தது. வாங்க என்றது
அவற்றை அவ்வவற்றினிடமிருந்து மீளத் தன்னிடத்தேயுள்ள
மாயைகளில் ஒடுக்கி வாங்கிக்கொள்வதைக் குறித்தது.
“தாயாகியவுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்“ (நட்டபாடை -
திருநெய்த்தானம் - 3) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரம்
காண்க. “ஒடுங்கி மலத்துளதாம்; அந்தமாதி“ என்பது சிவஞானபோதம். எல்லாம் வைத்து வாங்க வல்லவனாதல்
தலைவனுக்கேயமையுமாதலின் இவ்விடத்து மேற்பாட்டிலே
தலைவனார் என்ற சொல்லாற் கூறினார். எவ்வெவ்வுயிர்க்கும்
வேண்டிய எவ்வெப் பொருளையும் வைத்து வாங்கவல்லவன்
இவ்வொரு திருவோட்டினை நாயனார்பால் வைத்து மீள வாங்குதல்
பெரிதன்று என்பது.

     இங்கு மண்ணாலாகிய இத்திருவோட்டினை ஏந்திய கையராய்
(371) வந்தமை சிருட்டி காரியங் குறித்தது. சிருட்டியிற்பட்ட உயிர்கள்
யாவையும் மலநீக்கம் பெற்றுச் சுத்தமாக்கப்படுமென்ற குறிப்பைத்
“தன்னுழைத் துன்னிய யாவையும் தூய்மை செய்வது“ (375) என்று
சொல்லிக் காட்டினார். இங்கு வைத்தல் சிருட்டியையும், வாங்குதல்
சங்காரத்தையும் குறித்தன. 20