38. கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான்
 
  “செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன்
மையன் மானுட மாய்மயங் கும்வழி
ஐய னேதடுத் தாண்டருள் செய்”யென.
28

     (இ-ள்.) கைகள் ... கலங்கினான் கைகளை அஞ்சலித்துச் சிரமேற் குவித்துக் கொண்டு மனங்கலங்கியவராகிய; “செய்ய ...
அருள்செய்” என - ”ஐயனே!

     செம்மையாகிய சிவந்த திருவடிகளைப் பிரிந்து இங்குநின்று
நீங்கும் சிறுமையுடையேனாகி மயக்கம் பொருந்திய மானுடப்
பிறப்பிற் பிறந்து மயங்கும்போது தேவரீர் வந்து
அம்மயக்கத்திலிருந்து தடுத்து என்னை ஆட்கொண்டு அருள் செய்ய
வேண்டும்” என்று வேண்ட,

     (வி-ரை.) செய்ய - செப்பமாகிய - திருந்திய, தன்மைப்பண்பு
- செம்மையிலே உயிர்களைச் சேர்க்கவல்ல என்க. செம்பொருள் -
(வியாபகம்) - நிறைவு திருநின்ற செம்மை எனும் பொருள்.

     சே - சிவந்த. நிறப்பண்பு.

     செய்ய சேவடி - இயற்கையாகவே செப்பமாகத் திருந்திய
சிவந்த திருவடி. இதனை மீமிசை என்பதுபோலக் கொண்டு மிகச்
சிவந்த என்றுரைப்பாருமுளர். பொருட் சிறப்பின்றிச் சொற்களைப்
பெய்தல் ஆசிரியரது இயல்பன்று, ஆதலின் அஃது
உரையன்றென்பது.

     நீங்கும் சிறுமை - நீங்குதலால் வரும் சிறுமையாம். சிறுமை
-துன்பம். “ஆறு சென்றவியர்” என்புழிப்போல காரணகாரியப்
பொருளில் வந்தது. நீங்கும் சிறுமை என்னும் பெயரெச்சம் காயத்தால்
நீங்குதலேயன்றி மனத்தால் நீங்குவதன்று.

     மையல் மானிடம் - வேண்டத் தகாததைத் தக்கதென்று
மயங்கித் திரியும் மானிடப் பிறவி;“... மால் கொடுத்து ஆவி
வைத்தார்...” - அப்பர்சுவாமிகள். “...மறக்குமாறிலாத என்னை
மையல்செய்திம் மண்ணின்மேற், பிறக்குமாறு காட்டினாய் ...” -
திருஞான சம்பந்த சுவாமிகள். திருத்துருத்தி- (5) கலங்கிநான் -
என்பதும் பாடம்.  28