382. “இழையணி முந்நூன் மார்பி னெந்தை!நீர்
                              தந்துபோன
 
  விழைதரு மோடு வைத்த வேறிடந் தேடிக்
                               காணேன்;
பழையமற் றதனி னல்ல பாத்திரந் தருவன்
                              கொண்டிப்
பிழையினைப் பொறுக்க வேண்டும் பெரும!“
                   வென் றிறைஞ்சி நின்றார்.
22

     (இ-ள்.) வெளிப்படை. “இழைகளாலாகிய அழகிய
முந்நூலணிந்த மார்பையுடைய எமது தந்தை போல்பவரே! நீர்
என்னிடம் கொடுத்துப் போயின விரும்பத்தக்க திருவோட்டினை
அது வைக்கப்பெற்ற இடத்தினும் பிறஇடங்களினும் தேடியும்
கண்டிலேன்; ஆதலால், பழையதாகிய மற்ற (கெட்டு ஒழிந்த)
அதனைவிட நல்லதொரு வேறு புதிய பாத்திரங் கொடுப்பன்;
அதனை யேற்றுக் கொண்டு உமது பாத்திரத்தைக் காணாது
போக்கிய இந்தப் பிழையைப் பொறுத்தருள வேண்டும், எமது
இறைவரே!“ என்று சொல்லி வணங்கி நின்றார்.

     (வி-ரை.) இழை அணி முந்நூல் - “ஒன்பது போலவர்
மார்பினில் நூலிழை“ என்ற அப்பர் பெருமான் (விடந்தீர்த்த பதிகம்
- 9) தேவாரம் காண்க. அணி - அழகிய. இழை முந்நூலணிமார்பின்
- என மாற்றி அணிந்த மார்பின் - என்றலுமாம்.

     எந்தை - சிறுவர்செய்த பிழைகளைப் பொறுத்தருள் செய்வது
பெற்றோர் கடமை என்ற குறிப்பில் இங்கு எந்தை என்றார்;
பெரியோர்க்கும் அதுவே கடமை என்று பின்னர்ப் பெரும என்று
கூறி முடித்தார்.

     விழைதகும் ஓடு - பொன் மணி முதலியவற்றை
விழையாதாரும் விழையத்தகுவதாகிய ஓடு. இதன் தன்மையை நீர்
தெரிவித்தபடி (375) பொன்னினு மணியினும் போற்ற வேண்டுவதென
யான் அறிந்துகொண்ட தென்க.

     வைத்த வேறிடம் - வைத்த இடம், வேறிடம் எனத் தனித்
தனிக் கூட்டி எண்ணும்மை விரித்துரைக்க. வேறாகக் காப்புற வைத்த
இடம் என்றலுமாம். நீர் இப்போது அகலப்போக்கி வைத்திருக்கும்
இடத்தின் வேறாகிய இடம் என்ற குறிப்புமாம்.

     பழைய மற்றதனின் - பழமையாகியதும், காணாது
போனதுமாகிய அதனினும் நல்ல பாத்திரம் - புதியதும் நல்லதும் நீடு
செல்வதுமாகிய வேறு ஒரு பாத்திரம். 384- ம் பாட்டில் இக்கருத்தை
நாயனாரே விளங்க உரைத்தல் காண்க.      

      கொண்டு - ஏற்றுக்கொண்டு அதனைக் கொண்டதுபோலவே
இதனைக் கைக்கொண்டு

     இப்பிழை - காவல்செய்ய ஒப்புவித்த பொருளைக் காணாமற்
போக்கிய இந்தப் பிழை. கேள்வன்றானும் - தொண்டர் கேட்பப் -
“புக்காய்? தாழ்த்ததென்?“ என்னத்; (தொண்டரும்) வந்து - தொழுது
- உரைப்பாராய் - “எந்தை! - ஓடு - தேடிக் காணேன் - நல்ல
பாத்திரந் தருவன் - கொண்டு - இப்பிழை - பொறுக்கவேண்டும்“
என்று (கூறி) இறைஞ்சி நின்றார்- என இவ்விரண்டு பாட்டுக்களையும்
தொடர்ந்து முடித்துக்கொள்க.

     விழைதரும - என்பதும் பாடம். 23