383. சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச்
                       செயிர்த்து நோக்கி
 
  “என்னிது மொழிந்த வாநீ? யான்வைத்த
                       மண்ணோ டன்றிப்
பொன்னினா லமைத்துத் தந்தா யாயினுங்
                     கொள்ளேன்; போற்ற
முன்னைநான் வைத்த வோடே கொண்டுவா“
                      என்றான்முன்னோன்.
24

     (இ-ள்.) வெளிப்படை. தலையினால் வணங்கிநின்ற
நாயனாரைக் கோபித்தார் போலப்பார்த்து, “ நீ சொன்னபடிதான்
யாது?யான்வைத்த மண்ணாலாகிய ஓட்டினைத் தவிரப் பொன்னினாற்
செய்ததொன்று தந்தாயானாலும் அதனை நான்
ஏற்றுக்கொள்ளமாட்டேன். காப்பாற்றும்படி முன்னாளில் நான் வைத்த
அவ்வோட்டினையே கொண்டுவா“ என்று யாவர்க்கும் முன்னோனாகிய அந்த யோகியார் கூறினார்.

     (வி-ரை.)செயிர்த்து நோக்கி - கோபித்தார் போலப்பார்த்து.
இவரது செயிர்த்த நோக்கம் மன்மதனை யெரித்ததாதலின்
அவ்வாறன்றிக், கோபித்தார் போல நோக்கி. உண்மையில் இஃது
திரோதானத்தில் வந்த அருட்பார்வையாம். “நெற்றியிற் கண்கண்ட
கண்கொண்டு மற்றினிக் காண்ப தென்னே“ - (கோயிற் றிருவிருத்தம்
6)என அப்பர் பெருமான் இதனை விளக்கியருளியதும் காண்க.

     என் இது மொழிந்தவா நீ - நீ இது மொழிந்தவா என்? என
மாற்றி யுரைக்க. இது - இவ்வாறு. மொழிந்தவா - மொழிந்தவாறு.

     மண்ணோடன்றி.....பொன்னினால்....கொள்ளேன் - “ஓடும்
செம்பொனும் ஒக்கவே நோக்குவார்“ என்றபடி, உலகம் விரும்பும்
பொன்னை விரும்புத லில்லாமையால் விருப்பையும், உலகம்
வெறுக்கும் ஓட்டை வெறுத்தலில்லாமையால் வெறுப்பையும்,
வென்றவர்கள் அடியார். இதுவே வேண்டுதல் வேண்டாமையிலாத
சிவயோக நிலையும் எமது நிலையுமாம் என்பது குறிப்பு.

     போற்ற - போற்றும்படி - காப்பாற்றும்படி. போற்ற
வேண்டுவது (375) என்றமை காண்க.

     முன்னோன - எல்லார்க்கும் முன்னவன் - முதல்வன்.
“வைத்த மண்ணோடு“ என்றும், “நான் வைத்த வோடே“ என்றும்
இருமுறை கூறியது கோபமொழி குறித்தது. அது குறிக்கவே
ஆசிரியரும் என்றான் முன்னோன் என எழுவாய் பயனிலைமாறி
வைத்தார் என்க. வரும் பாட்டிலும் இவ்வாறே வைத்திருத்தலுங்
காண்க.

     முதலில் யான் வைத்த மண் ஓடு என்றது உன்பால் வைத்த
எனவும், பின்னர் முன்னை நான் வைத்த ஓடு என்றது
உன்னிடமிருந்து வேறு வழியால் வாங்கிக் குறியிடத் தகலப் போக்கி
வைத்த எனவும் குறிப்புப் பெறுதலும் காண்க.

     வணங்கிச் சொன்ன - என்பதும் பாடம். 24