385. “ஆவதென்? னின்பால் வைத்த வடைக்கலப்
                       பொருளை வௌவிப்
 
  பாவகம் பலவுஞ் செய்து பழிக்குநீ யொன்று
                                நாணாய்!“
யாவருங் காண வுன்னை வளைத்துநான்
                        கொண்டே யன்றிப்
போவதுஞ் செய்யே“ னென்றான் புண்ணியப்
                       பொருளாய்நின்றான்.
26
     
     (இ-ள்.) வெளிப்படை. “உன்னால் இனி ஆகக் கடவது என்ன
இருக்கிறது? உன்னிடம் அடைக்கலமாக ஒப்புவித்த ஓட்டினைக்
களவு செய்து, பலப்பல வஞ்ச நடிப்புச் செய்து அதனால் வரும்
பழிக்கு ஒரு சிறிதும் நாணமடையாதவனாயினாய்; யாவரும்
காணும்படியாக உன்னை வளைத்துப் பற்றி (எனது பாத்திரத்தை
வாங்கிக்கொண்டே யல்லாமல் இங்கு நின்று ஓர் அடி பெயர்த்து)
போவதுங்கூடச் செய்ய மாட்டேன்“என்று புண்ணியங்களுக்கெல்லாம்
பொருளாய் நின்ற இறைவன் கூறினார்.

     (வி-ரை.) ஆவது என்? - உயிர் அறிவு முழுதும் ஒழிந்தது
என்று விட்டமையால் பசு போதங்கெட்டவழி மேற் செயலாவது
என்ன உளது என்பது குறிப்பு.

     பாவகம் பலவும் செய்து - இங்குப் பாவிக்கும் செயலின்மே
னின்றது. ஒன்றை வேறொன்றாக எண்ணிச் செய்யும் தொழிலே
பாவனை எனப்படும். இது தானே பாவித்துச் செய்தலும், பிறரை
அவ்வாறு பாவிக்கும்படி செய்தலும் என இருவகைப்படும்.
சிவோகம்பாவனை - தன்னையே சிவமாமாறு எண்ணுதல் எனப்படும்.
இங்குப் பாவகம் என்றது பிறர் தன்னை உண்மையினின்று மாறுபட்ட
நிலையில் எண்ணுமாறு காட்டும் செயல் குறித்தது. வஞ்சித்துக்
காட்டும் இயல்பு. பாசாங்கு என்பது உலக வழக்கு.

     பழிக்கு நீ ஒன்று நாணாய் - வஞ்சிக்கப் பட்டோரும்
பிறரும் இவ்வஞ்சனை வெளிப்பட்டபின் பழிப்பர்; அந்தப் பழிக்கு
அஞ்சி ஒதுங்குதல் நாணம் - பழியச்சம் எனப்படும்; உன்னிடத்தில்
அதுவுமில்லை என்றபடியாம்.

     பாவகம் பலவும் செய்து - என்ற இடத்துத்
திருநீலகண்டத்தின் வைத்த உறைப்பேறிய பாவனை
யுபாசனையினாலே உலகப்பற்றை வென்றார் என்பதும், பழிக்கு நீ
ஒன்று நாணாய் என்ற விடத்து “நாடவர் பழித்துரை பூணதுவாக“
என்றாற் போல அப்பாவனையினாலேவரும் உலகநிலைப் பழிக்கு
அஞ்சார் என்பதும் குறிப்பிற் போந்தமை காண்க.

     யாவரும் காண - நாயனாரது விளக்கம் உலகம் காணக்
காட்டுமாறு (369) வந்தவராதலின் யாவருங் காண என்று
குறிப்பித்தார்.

     வளைத்து நான்கொண்டே யன்றிப் போவதும் செய்யேன்
- உன்னையும் உன் மனைவியையும் சேர்த்துப் பிடித்துக்
குடும்பத்துடன் என் உலகத்திற்கு உடன் கொண்டு போவதன்றி
இங்கு நின்று அகல்வதில்லை என்ற பிற்சரிதக் குறிப்பும் காண்க.

     போவதும் செய்யேன் - இங்கு நின்றும் பெயர மாட்டேன்.
கொண்டே அன்றிப் போகேன் என்ற இரண்டு எதிர்மறைகளும்
ஏகாரமும் கொண்டே போவேன் என ஓர் உறுதிப்பாடு பற்றிய
உடன்பாட்டுப் பொருள் குறித்தன.

     புண்ணியப் பொருளாய் நின்றான - உயர்வாகிய
பதிபுண்ணியம் செய்யும் யாவரும் பெறும் பொருளாக நின்றவர்.
புண்ணியங்களின் குறிக்கோளானவர்.

     நின்றான் - நிலைபெற்றிருப்பவர். நீங்க இயலாமையின்
நின்றான் என்றார். நாயனார் இதுவரை செய்த புண்ணியம்
எல்லாவற்றிற்கும் இவரே பொருளாயினார் என்ற குறிப்புமாம். 26