386. “வளத்தினான் மிக்க வோடு வௌவினே னல்லே;
                              னொல்லை
 
  உளத்தினுங் களவி லாமைக் கென்செய்கே?
                       னுறையு“ மென்னக்;
களத்துநஞ் சொளித்து நின்றான் “ காதலுன்
                         மகனைப் பற்றிக்
குளத்தினின் மூழ்கிப்போ“வென் றருளினான்
                        கொடுமையில்லான்.
  27

     (இ-ள்.) வளத்தினால்......என்ன-“உமது மிகவும்
வளம்பொருந்திய ஓட்டினை நான் களவு செய்தவனல்லன்; செயலிலே
களவில்லாமையேயன்றி என் மனத்திலேயும் அதுபற்றிய களவாகிய
எண்ணம் இல்லாமையைக் காட்டுவதற்கு நான்
என்ன
செய்யவேண்டும்? சொல்லுங்கள்“ என்று நாயனார் சொல்ல;
களத்து....இல்லான் - தமது கழுத்தின் மட்டிலே நின்ற விடத்தினை
மறைத்து வந்தாராகிய யோகியார், “(அதனைக் காட்டுதற்காக) உன்
ஆசைக்குரிய மகனைப் பிடித்துக் கொண்டு குளத்திலே முழுகித்
தந்து செல்வாயாக“என்று கொடுமை யில்லாதவரேயாகிச் சொன்னார்.

     (வி-ரை.) வளத்தினான் மிக்க - நீர் முன்னர்த் தெரிவித்த
மிகுந்த வளங்கள். உளத்தினும - செயலில் களவில்லாமையேயன்றி
இறந்தது தழுவிய எச்சவும்மை. ஒல்லை - விரைவில்; ஒல்லையில்
என்செய்கேன் என்று கூட்டுக. ஒல்லையில் உரையும் என்று
கூட்டியுரைப்பாருமுண்டு. ஒல்லை - சிறிதும் - அற்பமும் - எனப்
பொருள் கொண்டு சிறிதும் களவிலாமைக்கு என்றும் உரை கூறுவர்.
உளத்தினும் களவு இலாமை - களவு செய்தல்வேண்டுமென்ற
எண்ணமும் மனத்தில் நிகழாமை. இந்நாட் குற்றச் சட்டத்திலும்,
களவுசெய்ய வேண்டுமென்ற எண்ணத்தாற்செய்வதே களவுக்
குற்றமாமென்று விதித்தமை காண்க.

     இலாமைக்கு - இல்லாததைக் காட்டுதற்கு - தெரிவித்தற்கு.
உள்ளத்தின் நிகழ்ச்சி வேறுவகையாலே தெரிவித்தாலன்றித்
தெரியாதாதலின் அதனை விளங்கக் காட்ட என்செய்கேன்
என்று கேட்டனர்.

     களத்து நஞ்சு ஒளித்து நின்றான - முன்னரும் “கறை மறை
மிடற்றினான்“ (381) என்றமை காண்க. திருநீலகண்டத்திலே பத்தி
செய்தாரை விளக்க வந்தாராதலின் அது பற்றியே பல முறையும்
எடுத்துக் கூறினார். அதனை மறைத்து வந்தமையே அதனிடத்து
அவர் செய்த பத்தியை விளக்குதற் கேதுவானதால் இவ்வாறு நஞ்சு
ஒளித்து நின்றான் என்றார்.

     குளத்தினின் மூழ்கிப்போ - நீரில் மூழ்கிச் சத்தியம்
பண்ணுதல் உலக வழக்கு. நீர், நெருப்பு முதலியன இறைவனது
அட்ட மூர்த்தங்களாகிய திருமேனிகளாம். ஆதலின் நெருப்பிலே
தாண்டுதல் - நெருப்பிலே கைந்நீட்டுதல் - நீரில் முழுகுதல்
முதலியவை இறைவன் திருமுன்னர்ச் சத்தியம் பண்ணுதலாம் என்க.
கோயில் வாசலிலும், சந்நிதியிலெதிரிலும் செய்யும் வழக்கமும் காண்க.
ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்திலே திருவொற்றியூரில்
சுந்தரமூர்த்திகள் சபதம்செய்த சரிதப்பகுதியில் இவற்றினியல்பும்,
வலிமையும், பிறவும் காண்க. மூழ்கிப்போ - முழுகி உனது
களவிலாமையைச் சொல்லித் தந்து போவாயாக. “மூழ்கியுந் தாரான்“
(391) “மூழ்கித் தருகின்றேன்“ (395) எனப் பின்னருங் கூறுவர்.

     கொடுமை யில்லான் - யோகியாரது இச்சொல்லும் செயலும்
மிகக் கொடியனவாகக் காணினும், அவை கொடியன அல்லவாய்த்
தொண்டரை விளக்கங்காணும் இரக்கத்தாலே செய்த
அருளிப்பாடுகளேயாம் என்பார் கொடுமையில்லான் என்றும்,
அருளினான் என்றும் கூறினார். இதற்காகத் தாம் செய்யும்
பாவகங்கள் பலவற்றையும் அவர்மேல் ஏற்றிக் கூறியனவும்
அதுபற்றியேயாம் என்க. 27