388. கங்கைநதி கரந்தசடை கரந்தருளி யெதிர்நின்ற!
 
  வெங்கண்விடை யவரருள, வேட்கோவ
                           ருரைசெய்வார்
“எங்களிலோர் சபதத்தா லுடன்மூழ்க
                           விசைவில்லை;
பொங்குபுனல் யான்மூழ்கித் தருகின்றேன்;
                             போதுமென;
29

     (இ-ள்.) வெளிப்படை. கங்கை ஒளித்திருத்தற் கிடமாகிய
சடையினை மறைத்து அருளி எதிரே நின்றவராகிய
வெங்கண்ணுடைய இடபத்தை வாகனமாக உடையவராகிய இறைவர்
இவ்வாறு அருளிச் செய்தாராகக், குயவனார் அதற்குப் பிரதியாகச்
சொல்வாராய், “எங்களுக்குள்ளே நிகழ்ந்ததொரு சபதத்தினாலே நான்
என்மனைவியார் கையைப் பற்றிக்கொண்டு உடன் மூழ்க
இயலவில்லை; எனது குற்றமின்மையை விளக்கும்படிப் புனலிலே
நானே முழ்கிக் கொடுக்கின்றேன்; வாரும்“ என்று சொல்ல;
    
     (வி-ரை.) கங்கை நதி கரந்த சடை கரந்து - கரந்த சடை
- கங்கை நதியின் மிகுதிப்பாடு குறைந்து ஒளிந்து
கொள்வதற்கிடமாகிய சடை. கரந்த -
கரத்தலைச் செய்தற்கிடமாகிய.
கரந்து - மறைத்து. “நெடுஞ்சடை கரந்திட“ (371) என்றது காண்க.
தனது அருள் வெள்ளத்தினை வெளிப்படப் பின்னர்த் தருவான்
இங்கு மறைந்து நின்றனராதலின் அருள் வெள்ளமாகிய கங்கை
தங்கிய சடையினையும் மறைத்து நின்றனர் என்பது குறிப்பு. பின்னர்
அருள் வெளிப்பட நிற்கும்போது சடை வெளிப்படும்; அது
வெளிப்படவே கங்கையும் வெளிப்படும் என்க.

     அருளி - கருணை செய்து. எதிர்நின்ற - தமது எங்கும்
பரந்து கரந்த நிலையினின்றும் வெளிப்பட்டு எதிரேவந்து நின்ற.
“மறையவனாகி நின்ற“ (381) என்றதும் காண்க.

     வெங்கண் விடை - வெம்மை - இரட்டுற மொழிதலால்
வெம்மை
- விருப்பம் எனக் கொண்டு அடைந்தாரை விரும்பும்
எனவும்; வெம்மை - கோபம் எனக் கொண்டு, அடையலரைக்
கோபிக்கும் எனவும் இருபொருளும் கொள்க. “அண்ணலரண் முரண்
ஏறும்“ என்ற அப்பர் பெருமான் தேவாரம் காண்க. சடையும்
விடையும் கரந்து அருளி நின்ற அவர் எனக் கூட்டியுரைத்தலுமாம்.

     அருள - சொல்ல; எங்களில - எனக்கும் என்
மனைவிக்குமிடையே. சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை -
மனைவியைத் தீண்டுதலை முன்னே நிகழ்ந்த ஒரு சபதம் தடுத்தது.
இப்போது நீர் கேட்கும் இந்தச் சபதத்திற்காகத் தீண்டின் முன்னைச்
சபதத்தைக் கடந்தவனாவேன். சபதங்கடந்த நிலையில் நான் செய்யும்
இச்சபதம் இசைவு பெறாது; ஆதலின - என்க.

     மூழ்க இசைவு இல்லை - மூழ்குதல் இசையாது -
பொருந்தாது. யான - யானே. போதும் - போதுவீர். சபதத்தை
ஏற்றுக்கொள்ள வருவீராக. போதும் - அமையும் என்றலுமாம். என
- என்று சொல்ல.

     நீர் நெருப்பு இவற்றாற் பிரமாணஞ்செய்தல் இறைவன்
முன்னர்ச் செய்யப்பட்டனவேயாம்; ஆதலால் ஏனையோர் அவ்வாறு
கேட்டல் சாலும்; அவற்றைத் திருமேனியாக்கொண்ட இறைவனே
கேட்டல் சாலாது என்று குறிப்பிப்பார் கங்கைநதி கரந்த சடை கரந்து என்று குறிப்பிட்டார் என்ப.  29