390. நல்லொழுக்கந் தலைநின்றார், நான்மறையின்
                            றுறைபோனார்,
 
  தில்லைவா ழந்தணர்கள் வந்திருந்த
                           திருந்தவையின்
எல்லையிலான் முன்செல்ல, விருந்தொண்ட
                                ரவர்தாமு
மல்குபெருங் காதலினால் வழக்குமே
                           லிட்டணைந்தார்.
31

     (இ-ள்.) வெளிப்படை. நல்லொழுக்கத்திலே சிறந்தவர்களும்,
நால்வேத நெறிகளிலும் முற்றவும் வல்லவர்களும் ஆகிய
தில்லைவாழந்தணர்கள் வந்து கூடி யிருந்த திருந்திய சபையிலே,
தனக்கு ஓர் அளவு இல்லாதாராகிய இறைவர் முன்னே சென்றாராகப்,
பெரிய தொண்டராகிய திருநீலகண்டரும் மிகப்பெரிய ஆசையினாலே
இழுக்கப்பெற்று யோகியார் தொடர்ந்த வழக்கினாலே மேலிடப்
பட்டாராய் (அவர் பின்னே அங்கே) தாமும் சென்று அணைந்தனர்.

     (வி-ரை.) தலை நின்றார் - துறை போனார் இவை முன்னர்த்
தில்லைவாழந்தணர் புராணத்திலே (354, 355) கூறப்பெற்றன. விரிவு
ஆண்டுக் காண்க. முன்னர்க் கூறியபடி உள்ள ஒழுக்கத்திற்
சிறந்தார்களும் நான்மறையின்றுறை முற்றப் போனவர்களும் ஆகிய
என வருவித் துரைத்துக்கொள்க. தலை நின்றார் - தலைமையாக
நின்றார். துறைபோனார் - துறைமுற்றவும் பயின்று வல்லவராயினார்.
போனார் - அதன் எல்லை முடிபுவரைப் பயின்றவர் என்பதாம்.

     திருந்து அவை - சபை திருந்தி யிருத்தலாவது ஒருபால்
கோடிச் சொல்லாமலிருத்தலே. “என் பெரினும் - பால்பற்றிச்
சொல்லா விடுதல்“ - என்றார் முன்னோரும். அறிவினாலும்
ஒழுக்கத்தாலும் நிறைந்தார் கூடிய சபை. ஒழுக்கம் நிறைந்தாராதலின்
தாம் அறிந்து பிழைபடச் செய்யார்; துறை போனாராதலின்
அறியாமையினாலே பிழைபடச் செய்யார்; ஆதலின் இருவகையிலும்
பிழைபடாமற் றிருந்திய சபை என்க.

     வந்திருந்த - வந்து கூடியிருந்த - நியாய விசாரணையின்
பொருட்டு வந்து சேர்ந்திருந்த என்பதாம். சபையைக் கோஷ்டி என்ற
வடநூல் வழக்கு இக்கருத்தே பற்றியது. ஞான வாக்குடையார்
ஒன்றுசேர்ந்து கூடிய கூட்டம் என்க.

     எல்லையிலான - “ஆதியு முடிவுமில்லா அற்புதத்
தனிக்கூத்தாடு நாதனார்“ என இப்புராணத் தொடக்கத்துக் கூறியது
காண்க. தனது அருளாலும் திருவாலும் அளவுட் படாதவன் நான்
மறையின் துறைபோகி, ஒழுக்கந் தலைநின்ற அவர்கள் எவரும்
அறிதற்கரியவனாய் நின்றானாதலின் இங்கு எல்லையிலான் என்றார்.

     இருந் தொண்டர் - செய்தற்கரிய செயல் செய்து
அத்தொண்டினாலே சிறந்தவர். திருநீலகண்டத்தினுக்குரிய
தொண்டிலே தமது இளமை முதலிய யாவையும்
கீழ்ப்படுத்தியவராதலால் இருந்தொண்டர் என்றார். தாமும -
யோகியார் அணைந்ததேயன்றி இவர்தாமும் என இறந்தது தழுவிய
எச்சவும்மை.

     மல்கு பெருங்காதலினால - செயிர்த்து நோக்கிக் கொடிய
மொழி புகன்று தம்மைப் பழி சுமத்தினாரே என்பதில்லாது,
அவர்மேற் காதல்பெருகி மிகுகின்றதால். “கண்டதோர்
வடிவாலுள்ளங் காதல்செய்துருகாநின்ற“ (188) சுந்தரமூர்த்திகள்
கிழவேதியராகிவந்த இறைவர்பின்னே “திரிமுகக் காந்தஞ் சேர்ந்த -
வல்லிரும் பணையுமாபோல்...கடிது சென்றார்“ (196) என
முன்னர்க்கண்டதுபோலவே, இங்கு நாயனாரும் காதலினால்
அவர்பின்னே அணைந்தனர்.

     வழக்கு மேலிட்டு - வழக்கினாலே மேலிடப் பட்டாராய்,
வழக்குத் தொடரப்பட்டாராய், பிரதி வாதியாகி என்பர் நவீனர்.

     வழக்கின்மேலிட்டு - என்பதும் பாடம். 31