391. அந்தணனா மெந்தைபிரா னருமறையோர்
                             முன்பகர்வான்
 
  “இந்தவேட் கோவன்பால் யான்வைத்த
                              பாத்திரத்தை
தந்தொழியான்; கெடுத்தானேற், றன்மனைவி
                                கைப்பற்றி
வந்துமூழ் கியுந்தாரான்; வலிசெய்கின்
                             றா“னென்றார்.
32
    
     (இ-ள்.) வெளிப்படை. அந்தணனாக வந்த எமது பெருமான்,
தில்லைவாழந்தணர்கள் முன்னே சென்று சொல்வாராகி “இந்தக்
குயவன் தன்னிடம் நான் ஒப்புவித்து வைத்த பாத்திரத்தைத்
திருப்பித் தரமாட்டான்; அதைப் போக்கிவிட்டானாயின்,
அவ்வுண்மையைக் காட்டுதற்குத் தனது மனைவியின் கையைப்
பிடித்துக்கொண்டு குளத்தில் மூழ்கிக் கொடுக்கவு மாட்டான்;
இவ்வாறு வலிமை செய்கின்றான்“ என்றார்.

     (வி-ரை.) அந்தணனாம் - வேதங்கள் சிவன் ஒருவனே
பிராமணன் என முழங்கும்; அத்தகைய அந்தணனாம் பெருமான்.
நாயனாரது விளக்கத்தை ஞாலத்தார் விரும்பி உய்யும் அந்நெறி
காட்டும் பொருட்டு (369) வந்தவராதலின் அழகிய தன்மையை
எவ்வுயிர்களுக்கும் செய்பவனாகிவந்த பிரான் என்றலுமாம். இவர்
தம்மோடொத்தே தன்மையாளராய் நான்மறையின்
துறைபோனார்களாம் மறையோரிடமே முறை சொன்னார். ஆயின்
அறிவுக்கும் மாயைக்கும் அதிபதியாகிய இவர் முன் இதனுண்மை
யறிய மாட்டாது அவர்களும் மயங்கி “மருவிய மனைவியோடு
மூழ்குதல் வழக்கே“ (394) எனத் தீர்க்கப் போகின்றார்கள்.
பதிஞானத்தின் முன்னர்ப் பாசஞானம் வலியிழந்து நிற்கும்
என்றபடியாம்.

     பகர்வான் - முறைப்பாடு சொல்வாராய் என்றார் - என
முடிக்க. முற்றெச்சம்.

     இந்த வேட்கோவன - நாயனாரும் வழக்கு மேலிட்டுச்
சபைமுன் அணைந்து முன்னின்றாராதலின் இந்த - இதோ
உங்கள்முன் நிற்கின்ற - எனச் சுட்டிக் காட்டி அண்மைச் சுட்டினாற்
கூறினார். வழக்கிடப்பட்டார் நியாயசபை அல்லது அரச நீதியின்
பேரால் முறையிடப் பட்டபோது, அதனுக்குட்பட்டுத் தாமே தம்மேல்
வழக்கிடுவோரைத் தொடர்ந்து சென்று நீதி மன்றத்தினர் முன் நின்று
தமது முறையையும் விளம்பித் தீர்ப்புக்கேட்டு நிற்றல் அந்நாளில்
தமிழ்மக்களின் சமூக நிலை, இந்நாளில் நீதிமன்றத்தில் வருமாறு
எத்தனை கட்டளைகள் வரினும் அவற்றிற்கெல்லாம் தப்பிமீறி
நிற்கும் நாகரி மெனப்படும் நமது சமூக நிலையினுடன் இதனை
ஒத்துநோக்கி உலகம் திருத்தமடைக. திருவிளையாடற் புராணத்திலே
அரசன் பேரால் பார்ப்பனன் முறையிட்டு வேடனைக் குற்றம்
சாட்டியபோது அவனைத் தொடர்ந்து அரசன் முன்னர்த் தானே
போந்த வேடன் செயலையும் இங்கு வைத்து உன்னுக. முன்னர் வல்
வழக்கிட்ட கிழவேதியரைத் தொடர்ந்து வன்றொண்டரும்
மணப்பந்தலில் இருந்த சுற்றத்தாரும் மணத் தொழிலை விட்டுத்
திருவெண்ணெய் நல்லூர் நீதிமன்றத்தினை அணைந்தமையும், பிறவும்
காண்க.

     வைத்த - காவலாக வைத்துத் தரும்படிக் கொடுத்த -
ஒப்புவித்த.

     தந்தொழியான - தரவும் மாட்டான். கெடுத்தானேல் -
தாராமைக்குக் காரணமாக இவன் சொல்கிறபடி உண்மையிலே
அதனைப் போக்கிவிட்டானாயின், அதனைக் காட்ட என வருவித்துக்
கொள்க.

     மூழ்கியுந் தாரான - மூழ்கிச் சபதம் செய்துகொடுக்கவு
மாட்டான். இவ்விரண்டிலொன்று செய்தால் என் வழக்குத் தீரும்;
இவற்றிலொன்றும் பெறாது உங்கள் முன் வழக்கிட வந்தேன்
என்பதாம். அந்நாள் வழக்குக்கள் செல்லுமுறையும், வழக்குக்களைச்
சபையினர் விசாரித்துத் தீர்க்கு முறையும் இங்கு விளங்குகின்றன.
முறைகேட்ட சபையினர் வழக்கிடப்பெற்றோரைக் கேட்கும் முறை
392, 393-ம் பாட்டுக்களிலும், அவர்களது தீர்ப்பு 394-ம் பாட்டிலும்
காண்க. இவற்றின் விரிவு முன்னர்த் தடுத்தாட்கொண்ட புராணத்துட்
காண்க.

     வலி செய்கின்றான் - என்னிடம் இவ்வாறு வன்கண்மை
செய்கின்றான். அன்புக் கெளியனான என்பாலே வலிய அன்பு
செய்கின்றான் என்றது குறிப்பு. 32