392. நறைகமழுஞ் சடைமுடியு நாற்றோளு முக்கண்ணுங்
 
  கறைமருவுந் திருமிடறுங் கரந்தருளி யெதிர்நின்ற
மறையவனித் திறமொழிய; மாமறையோ
                            ருரைசெய்வார்
“நிறையுடைய வேட்கோவர்; நீர்மொழியும்
                             புகுந்த“தென,
33

     (இ-ள்.) வெளிப்படை. (தமக்குரியனவாகிய) வாசனை வீசுகின்ற
சடைமுடியினையும், நான்கு தோள்களையும், மூன்று கண்களையும்,
திருநீலகண்டத்தினையும் மறைத்துக் கொண்டு, கருணைசெய்து எதிரே
வெளிப்பட்டு நின்ற வேதியர் இவ்வாறு சொல்லத்,
தில்லைவாழந்தணர்கள் சொல்வாராகி, “நிறையுடைய வேட்கோவரே!
உள்ளபடி நடந்த செய்தியை நீர் மொழிவீராக“ என்று கூற,

     (வி-ரை.) சடைமுடி - நாற்றோள் முக்கண் - கறைமிடறு
- இவை சிவபெருமானுக்கே உரிய திருமேனியின் அருள்
அடையாளங்கள்.

     நறை கமழும் சடைமுடி - கொன்றை மலரின் மணம்
வீசுகின்ற சடை. நறை கமழும் - என்றதனாற் கொன்றைமலர்
வருவித்துரைக்க. “வம்புலா மலர்ச் சடை“ (374) என முன்னரும்
கூறியது காண்க. சடைகரக்கு முன்னமே அதிற்சூடிய கொன்றை
கரந்தது. ஆயின் அதன் வாசனை கரவாது நின்று சடையினுடன்
கரந்தது போலும். தம்முடனே தோன்று நிலையினவாகிய இவை
மறைந்தும், எப்பொருளிலும் மறைந்த நிலையினராகிய தாம் எதிர்
நின்று போந்தனர் என்ற அணியும் காண்க. அருளி -
அருளிப்பாட்டினைச் செய்து. கரந்தருளி என ஒரு சொல்லாக்கியு
முரைப்பர்.

     மறையவன - மறைத்து நின்றவன். மறைந்து
நின்றவனுமாயினவன் என்றது குறிப்பு. தனது செயலை நாயனார்
மேலேற்றி மறைமொழி புகன்றவன் என்பதுமாம்.

     மாமறையோர் - அவனது மாயையினுட்பட்டு உண்மை
யறியமாட்டாது மறைப்புண்டவர்.

     சடை முடியும், முக்கண்ணும், நாற்றோளும், திருமிடறும்
கரந்தாரை அந்த மறைப்பு நீக்கி ஆசிரியர் நம்மைத் தரிசிக்கச்
செய்த திறம் உய்த்துணர்க.

     நிறையுடைய வேட்கோவர்! - சால்புடையாராகிய
வேட்கோவரே! நிறை - சால்பு. மனவுறுதியுடைய என்றும் கூறுப.
தீக்குணங்கள் வாராமையும், நற்குணங்கள் நிறைதலும் உடையவர்
எனவும், சத்தியவாக்குடையவர் எனவும் இதற்குப் பொருள்
கூறுவாருமுண்டு. நாங்கள் நீவிர் நிறையுடையீர் என அறிந்திருக்கின்ற
வேட்கோவரே. வேட்கோவர்! அண்மைவிளி.இந்த வேட்கோவன்பால்
- என மேற்பாட்டிற்
கூறியது காண்க.

     புகுந்தது - உண்மை. நடந்த செயலை உள்ளபடியே. 33