393. “நீணிதியா மிதுவென்று நின்றவிவர் தருமோடு
 
  பேணிநான் வைத்தவிடம் பெயர்ந்துகரந்
                           ததுகாணேன்;
பூணணிநூன் மணிமார்பீர்! புகுந்தபரி சிது“
                               வென்று
சேணிடையுந் தீங்கடையாத் திருத்தொண்ட
                           ருரைசெய்தார்.
34

     (இ-ள்.) வெளிப்படை. “அணியாக நூல்பூண்ட அழகிய
மார்பினையுடைய அந்தணர்களே! இது நீள் நிதியேயாம் என்று
சொல்லி இங்கு நிற்கின்ற இவர் என்னிடம் தந்த திருவோடு நான்
அதனை மிகவும் காவலாகவைத்த இடத்தினின்றும் எவ்வாறோ
பெயர்ந்து மறைந்துவிட்டது; இதுவே நடந்த செய்கையாம்“ என்று
தீமை என்பது தம்மைத் தூரத்தினும் அணுக முடியாத
திருத்தொண்டர் சொன்னார்.


     (வி-ரை.) “நீள்நிதியாம் இது“ என்று - இது ஓட்டினைக்
கொடுத்தபோது யோகியார் இவ்வாறு சொல்லி அதனைக் கொடுத்தார்
என்று நாயனார் கூறுவதாம். இதனால் நாயனாரது உண்மைத்
தன்மையும் நிறையும் நன்கு புலனாம். யோகியார் சொல்லாததும்
வழக்கிலே தமக்கு விரோதமானதுமாகிய செய்தியை நாயனார்
சொல்வது அவர் சத்தியத்தின்கட் கொண்டிருந்த மனவலிமையைக்
காட்டுவதாம். “பொன்னினுமணியினும் போற்ற வேண்டுவது“ (375)
என்று யோகியார் கூறியதை நாயனார் இங்குக் குறித்துச்
சொல்லியவாறு. அவரும் அவ்வாறு கூறினார்;

     ஆறலின் அதுகேட்ட யானும் அதனை நினைத்தே அதற்குத்
தக்கவாறு அவ்வோட்டினைப் பேணிக் காப்புறுமெல்லையில்
வைத்தேன் என்று குறிப்பார். பேணி நான் வைத்த இடம் - என்றார்.
இடம் - இடத்தினின்றும். ஐந்தாம் வேற்றுமையுருபு தொக்கது.

     பெயர்ந்து கரந்தது - அது சடப்பொருளாயினும் சேம
இடத்தினின்றும்தான் உயிர் பெற்றுக் கால் பெற்று நகர்ந்ததுபோல
மறைந்தது என்பது குறிப்பு.

     நிதியாம் இவர் - என்று கூட்டி யுரைப்பினுமாம்.

     இவர் - யோகியாராகிய இறைவர். சுட்டியறியப்படாத இறைவன்
அடியார் வேடந்தாங்கி வந்தானாதலின் சுட்டி யறியவும்பட்டான்.

     சேணிடையும் - தூரத்திலேயும்; தீங்கு என்பது எவ்வாற்றானும்
நெருங்கமுடியாத. இவர் அயல் ஒருவரும் அறியாத அதியந்தரங்கத்
தானத்திலேயும் இறைவன் சந்நிதி உள்ளது என்று கொண்டு பயந்து
ஆணை காத்து மனத்தினும் தீண்டேன் என்று நின்றவராதலின்,
தீங்கு எவ்வாற்றானும் இவரை அடையாமை பெறப்படும். 34