394. திருவுடை யந்தணாளர் செப்புவார் “திகழ்ந்த
                                நீற்றி
 
  னுருவுடை யிவர்தாம் வைத்த வோட்டினைக்
                       கெடுத்தீ ரானாற்,
றருமிவர் ‘குளத்தின் மூழ்கித் தருக'வென்
                      றுரைத்தா ராகின்,
மருவிய மனைவி யோடு மூழ்குதல் வழக்கே“
                            யென்றார்.
35

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு இருவர் மொழியுங்கேட்ட
தில்லைவாழந்தணர்கள் தீர்ப்புச் சொல்வார்களாய், (நாயனாரைப்
பார்த்துத்)“திருநீறு புனைந்த கோலத்தினையுடைய இவர் தாமே
உம்மிடத்து வைத்த ஓட்டினை நீர் கெட்டுப் போக்கிவிட்டீரானால்,
நீர் சொல்வதை ஒப்புக் கொள்வதற்காக அவ்வோட்டினைத் தந்த
இவரே உம்மைக் குளத்திலே முழுகித் தருமாறு கேட்பாராகில், இவர்
கேட்டவாறே உமதன்புக்குரிய மனைவியுடனே குளத்தில்
மூழ்கித்தருதலே வழக்காம்“ என்றார்கள்.

     (வி-ரை.) திருவுடை அந்தணாளர் - கல்வி - செல்வம் என
இவற்றோடு அருட்செல்வமுடையார். “செல்வர் வாழ்தில்லை“
என்றருளினர் ஆளுடைய பிள்ளையார். இவர்களது திரு உலகுக்
குதவுவது. “உலகுக்கெல்லாந், திருவுடையந்தணர்“ என்றருளினர்
(கோயிற் றிருவிருத்தம் - 2) ஆளுடைய அரசுகள்.

     திகழ்ந்த நீற்றின் உருவுடை யிவர் - நீறு திகழ்ந்த இனிய
உருவம். நீறு திகழ்ந்த கோலம் அந்தணர்களை வசீகரித்ததாம்.
“சேலும் கயலும்“ - என்ற திருவிசைப்பாக் காண்க. “கேடிலா
வாள்விடு நீற்றொளி மலர்ந்த மேனி“ (370) என இவரது நீறு
பொலிந்த கோலத்தை எடுத்து முன்னர்க் கூறியதும் காண்க. நீறு
திகழ்வதற்கிடமாகிய, நீற்றினாற்றிகழ்ந்த என்று பிரித்துக்
கூட்டியுரைத்தலுமாம். “மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான்“ - திருவாரூர் அப்பர் பெருமான். இவர் - நாயனார்
மேலே சுட்டியறிந்தது போலவே அந்தணாளரும் அறிந்து
சுட்டினார்கள். வைத்த - ஒப்புவித்த, மான் வைத்த - (391) என்றது
காண்க.

     கெடுத்தீரானால் - கெட்டுப் போக்கி விட்டீர்
என்பதுண்மையானால்.

     தரும்இவர் - ஓடுதந்தவராக நீர் ஒப்புக்கொண்ட இவர்.
உருவுடையிவர் - என்றது முறைப்பாடு சொன்னவர் என்ற இந்
நிலையினையும், தரும்இவர் - என்றது ஒப்பு வித்தவர் என்ற
அந்நிலையினையும் குறித்தது.

     உரைத்தாராகில் - ஓடே வேண்டும் - என்ற
நிலையினின்றிறங்கி,உம்மிடம் பிரமாணம் பெற்றுக்கொள்ளச்
சம்மதித்துக் கேட்டாரானால்.

     வழக்கே - அறநூல் வழக்கு. இது அந்நாள் வழக்குமுறை.
பிரமாணஞ்செய்தலோ அல்லது ஒப்புவித்த பொருளுக்கு ஈடுசெய்து
தருதலோ இவ்விரண்டி
லொன்றினை வழக்கிடப்பட்டார் தமது
எண்ணம்போல் செய்யலாம் என்பது இந்நாள் வழக்குமுறை.
வழக்கிடுவோர் கேட்டபடிச் சபதம் செய்தே தீரவேண்டும் என
இந்நாள் வழக்குச்சட்டம் வற்புறுத்துவதில்லை. எனவே, இந்நாளைவிட
முன்னாளில் தமிழ்நாட்டு வழக்குமுறை குடிகளின் பொருளுரிமையை
அதிகமாகக் காத்துவந்ததென்பது விளங்கும்.

     வழக்கே - இது சபையினர் கூறிய முடிபு. அவர் ஓடு தந்ததை
நீர் ஒப்புக் கொண்டீர்; ஆனால் நீர் அதனைக் கெடுத்ததாகச்
சொல்கிறீர்; ஆதலின் பிரமாணம் செய்து உமது வாக்கை நீரே
உறுதிப்படுத்தல் வேண்டும் என்ற நீதிமுறை குறித்தபடி. 35