405. அக்கு லப்பதிக் குடிமுதல் வணிகர்;
 
       அளவில் செல்வத்து வளமையி னமைந்தார்;
செக்கர் வெண்பிறைச் சடையவ ரடிமைத்
     திறத்தின் மிக்கவர்; மறைச்சிலம் படியார்
மிக்க சீரடி யார்கள்யா ரெனினும்
     வேண்டும் யாவையு மில்லையென் னாதே
இக்க டற்படி நிகழமுன் கொடுக்கு
     மியல்பி னின்றவர்; உலகியற் பகையார்.
2

     (இ-ள்.) அக்குலப்பதி...வணிகர் - அந்த வளம்பதியிலே
நிலைத்து வாழ்வாராகிய பெருங்குடி வணிக மரபினர்
(இப்புராணத்திற்குரிய நாயனார்); அளவில்...அமைந்தார்- அளவில்லாத
செல்வத்தினால் வந்த எல்லா வளங்களையும் உடையவரானார்;
செக்கர்......மிக்கவர் - சிவந்த மாலைக் காலத்தில் விளங்கும்
பிறைச்சந்திரனைச் சூடிய சடையையுடைய சிவபெருமானுடைய
அடிமைத் திறத்திற் சிறந்தவர்; மறைச் சிலம்பு....நின்றவர் -
வேதங்களாகிய சிலம்புகள் ஒலிக்கும் திருவடிகளையுடையார் பெரும்
சிறப்புடைய அடியவர்கள் யாவரேயாயினும், அவர்கள் வேண்டியவை
எவையேயாயினும் இல்லையென்னாதே கடல் சூழ்ந்த இந்த உலகிலே
விளக்கமுற முன்னே கொடுக்கும் தன்மையிலே நிலைத்து நின்றவர்
உலகியற்பகையார் - இவ்வுலகிலே இயற்பகையார் என்ற
திருநாமமுடையவர்.

     (வி-ரை.) குலப்பதி - பெருமையும் வளமும் மிகுந்த நகரம்
“குலவெஞ்சிலையால்“ - திருஞான - தேவா - தக்கேசி -
திருப்பழனம் - 5, “குலவரையே சிலையாக“ - திருநா - தேவா -
காந்தாரம் - திருவேகம்பம் - 10 முதலியவை காண்க. மேலே வளம்
புகார் என்றதும் காண்க. அப்பதிக் குலக்குடி முதல் - என்று கூட்டி
யுரைப்பது மொன்று.வணிகர்களாவார் நற்குடி நாற்பத்தெண்ணாயிரவர்.
அவர்கள் இப்பர், கவிப்பர், பெருங்குடி வாணிபர் என மூன்று
வகையினர். இவ்வகையிலே மூன்றாவது வகையினர்.

     அளவில் செல்வம் - உலகச் செல்வம் சிவனடிமைத் திறத்தில்
ஒழுகாதவிடத்திற் செல்வமாகாது; இன்னலுக்கே யேதுவாகும்,ஆதலின்
இதனையடுத்துச் செக்கர்....மிக்கவர் என உடன் சேர்த்துக் கூறினார்.
அடியாரிடத்து அன்பு செய்யாக்கால் “ஈசனுக் கன்பிலார்
அடியவர்க்கன் பில்லார்“ - (சிவஞான சித்தியர் 12-ம் சூத்திரம் - 2)
என்றபடி ஈசனிடத்தும் அன்பு இல்லையாய் முடியும்; ஆதலின்
அடியார்பா லன்பும் அடுத்து வைத்தோதினார்.

     செல்வத்து வளமையினமைந்தார் - செல்வங்களின்
எல்லாவகையும் தொகையும் அடங்கச் செல்வத்தினமைந்தார்
என்றதனோடமையாது வளமையின் என்றார். செல்வம்
படைத்தோர்க்கு அடிமைத்திறம் அமைதல் அருமையாதலின் இதனை
முன்னர்க் கூறினார். அமைந்தாராயினு மிக்கவர் என்க.

     செக்கர் - சிவந்த அந்திமாலை. அது செக்கரிற்றோன்றும்
வெள்ளிய பிறை எனவும், செக்கரே போலும் வெண்பிறை கூடிய
சடை எனவும் இருவழியும் கூட்டி உரைக்க நின்றது. “மாலையின்,
றாங்குருவே போலுஞ் சடைக்கற்றை“ என்பது அற்புதத்திருவந்தாதி
(65). அடிமைத்திறத்தின்

     மிக்கவர் - இவ்வாறு மிக்க வகையை மேலே முன் கொடுக்கு
மியல்பினின்றவர் என விரித்துக் கூறினார்.

     மறைச் சிலம்படியார் - வேதங்களே இறைவன் பாதங்களிற்
சிலம்புகளாக ஒலிப்பன என்பது வழக்கு. வேதங்கள்
இறைவனிலக்கணங்களையே தம்முட் கொண்டு ஒலிப்பன என்பது
கருத்து. சிலம்படியாரது சீரடியார்கள் - என ஆறாம் வேற்றுமை
யுருபு விரித்துரைக்க.

     யாவரேனும் - குலம், குறி, குணம் முதலிய பேதங்காணாது
பொது வகையால் எல்லா அடியாரிடமும் செல்லும் அன்புபற்றி
முற்றும்மை தந்து யாரேனும் என்றார்.     

“எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா
                                              லுள்கி“

என்பது திருத்தாண்டகம்.     

“நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற
 குலமில ராகக் குலமதுண் டாக“ என்றும்

 “கணங்களாய் வரினுந் தமியராய் வரினும் மடியவர் தங்களைக்
                                            கண்டாற்
  குணங்கொடு பணியும்“ என்றும்,

     இன்னும் பலவாறும் ஆளுடைய பிள்ளையார் தமது
திருவாலவாய்த் தேவாரத்திலே இவ்வுண்மையை விரித்தருளினர்.

     வேண்டும் யாவையும - வேண்டுவனவற்றைக் கொடுத்தலே
சிறப்பு;

     வேண்டாத பொருள் தருதல் எத்துணைப் பெரிதாயினும் அது
சிறந்த கொடையாகாது என்பர் பெரியோர். இதனை “நாடிய
பொருள்“ என்ற இடத்துத் தமது கம்பராமாயண முதற்செய்யுட்
சங்கோத்தர விருத்தியில் ஆசிரியர் எமது மாதவச் சிவஞான முனிவர்
விரித்தது காண்க. “வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்“ -
என்ற திருத்தாண்டகமும் காண்க. யாவையும் - விரும்பியன
வெவையாயினும். கொடுக்கத்தக்கது, தகாதது என்பதின்றி. இது
பிற்சரிதக் குறிப்பு.

     இல்லை என்னாதே இக்கடற்படி நிகழ முன் கொடுக்கும -
இது, “இல்லையே என்னாத“ - என்ற முதனூலின் விரிவுரையாம்.
இக்கடற்படி - கடல் சூழ்ந்த இந்த நிலவுலகம். நிகழ -
சிவதருமவியல் நின்று நிலவுமாறு “அடியாரவர் வான் புகழ்
நின்றதெங்கு நிலவி யுலகெலாம்“ என்றதும் காண்க. முன்
கொடுக்கும
- முன் - வேண்டுவார் முன்பு - இடங்குறித்தது. காலங்
குறித்ததாக கொண்டு, அவர் வேண்டு முன்னரே குறிப்பறிந்து
கொடுக்கும் என்றலுமாம். “யானே முன் செய் குற்றேவல், ஒன்றிது
தன்னை யென்னை யுடையவ ரருளிச் செய்ய நின்றது பிழையாம்“ -
(414) எனப் பின்னர்க் கூறும் வரலாற்றில் இதன் விரிவு காண்க.

     இயல்பின் நின்றவர் - இது தாமாக முயன்று மேற்கொண்டு
நின்றதோர் ஒழுக்கம் என்னலாகாது, இஃதவரியல்பு என்னும்படி,
அதில் நிலைத்து நின்றவர், இஃதவர் பெயரின் பொருள் விரித்தவாறு.

     உலகியற் பகையார் - உலகில் விளங்கிய இயற்பகையார்
என்ற திருப்பெயர் பூண்டவர். அவர் நின்றது இயல்பு - ஆயின்
அந்நிலையை உலகம் இயலும் பகையாகக் கருதியது என்பது குறிப்பு.
இயற்பகை என்ற முதனூல் உலகியற்பகையார் என விரிந்தது.

     இயற்பகையார் - இது அவரது - இயற்பெயர். காரண
இடுகுறியாய் நிகழ்ந்தது போலும். இஃதவரது இயற்பெயரென்பது
பின்னர் “இயற்பகை பித்தனானால்“ (416); “இயற்பகை வெல்லும்“ -
(419); “இயற்பகை முனிவா வோலம்“ (432) என்பனவாதி
வழக்குக்களாலறியலாம். இனி எல்லா உடைமைகளையும் எனது
எனது எனக் கொள்ளும் உலக இயல்புக்குப் பகைமையுடையார்
எனவும், எல்லாவற்றையும் எம்பிரான் அடியவருடைமை எனக்
கொள்ளும் உண்மையியலுக்குப் பகைமையில்லார் எனவும்
உடன்பாட்டினும் எதிர்மறையிலும் பொருந்தும் படி இயற்பகையார்
என்ற குறிப்பும் காண்க.  2