408.
|
வந்து
தண்புகார் வணிகர்தம் மறுகின்
|
|
|
மருங்கி
யற்பகை யார்மனை புகுத
வெந்தை யெம்பிரா னடியவர ரணைந்தா
ரென்று நின்றதோரின்பவா தரவாற்
சிந்தை யன்பொடு சென்றெதிர் வணங்கிச்
சிறப்பின் மிக்கவர்ச் சனைகண்முன் செய்து
முந்தை யென்பெருந் தவத்தினா லென்கோ
முனிவரிங்கெழுந் தருளிய தென்றார்.
|
5 |
(இ-ள்.)
வெளிப்படை. (மேலே சொல்லியவாறு) வந்து
புகாரிலே வணிகர் தெருவிலே ஒரு பக்கத்தே உள்ள இயற்பகையார்
திருமனையிலே அவ்வேதியராகிய இறைவன் புகவே,எமது தந்தையும்
இறைவனுமாகியவரது அடியவரே அணைந்தனர் என்று கொண்டு,
எப்போதும் தமது மனத்திலே நிலைத்து நின்ற இன்பமுடைய
ஆதரவினாலே எழுந்த அன்புடன் எதிர்கொண்டு போய் வணங்கி,
அழைத்துவந்து,சிறப்பின் மிகுந்த அருச்சனை வழிபாடுகளையெல்லாம்
செய்துமுடித்து, எனது முன்னோர்களும் அடியேனும் செய்த பெருந்
தவத்தின் பயனாகவோ பெரு முனிவராகிய தேவரீர் இங்கு
எழுந்தருளி வரப்பெற்றது என முகமன் மொழிந்து நின்றார்.
(வி-ரை.)
தண்புகார் - வளமும் அழகும்
பொருந்தியதால்
தண்புகார் என்றார். காவிரி சேரும் கடற்கரையிலுள்ளமையால் தண்
புகார் என்றார். எனினுமமையும். பூம்புகார் என்பதும் காண்க.
வணிகர்தம்மறுகு - வணிகர்கள் வாழுந் தெரு.
வணிக வீதி.
இத்தெருவின் சிறப்பினையும் இயல்பினையும் சிலப்பதிகார முதலிய
பழந்தமிழ் நூல்களுட் காண்க. இந்நகரின் வாணிகச் சிறப்புப்
பட்டினப்பாலையுள் விதந்து பேசப் பெற்றுள்ளது.
ஒவ்வோர் வருணத்தாரும், (வருணம்பற்றி யல்லாது)
தொழில்
முதலிய வேறு காரணம்பற்றித் தனித்தனிக் கூடி வாழும் பல்வேறு
வகுப்பினரும், வசித்து வாழ்வதற்குத் தனித்தனி வீதிகள் அமைப்பது
முன்னாள் வழக்கு. இவற்றினியல்பைத் திருக்குறிப்புக்தொண்ட
நாயனார் புராணத்திற் காண்க. இது உலக நிலையிற் கலந்த மக்கள்
தத்தம் நிலையில் நின்று இன்ப வாழ்வு வாழ்வதற்கு ஏற்றதோர் நல்
வழக்கு.இதன் நன்மைகளை அறியாது இகழ்வோர் பலர் .இந்நாள்
நகர அமைப்பில் இதன் உள்ளுறையான தத்துவத்தையும் உணர்ந்து
பின்பற்றுதல்வேண்டும். அவ்வாற்றில்லாது இவ்வழக்காறொழிந்து
வருதல் வருந்தத் தக்கதாம்.
எந்தை எம்பிரான்
அடியவர் - எந்தை - எமது தந்தை;
பிரான் - பெருமான் - தலைவன். பிரானது
அடியவர் என ஆறாம்
வேற்றுமைத் தொகை. பிரானே அடியவர் வேடத்தில் அணைந்தார்
என்ற உண்மை, நாயனார் சிந்தையிலே தாக்க, எழுந்த குறிப்புமாம்.
வேடமும் அரனெனத் தொழுமே என்பது சாத்திரமாதலின்
நாயனார் தமது நிலையான ஒழுக்க இயல்பின்படி
(405) இங்கு
அடியவரை அரனெனவே கொண்டு வணங்கினர் என்க.
நின்றதோர் இன்ப
ஆதரவு - சிந்தையில் நின்றது - என்று
கூட்டுக. நின்றது - இயல்பாய் நிலைத்தது.
இன்பத்தை
ஆதரித்தெழுந்த அன்பு - இன்பந்தரும்ஆதரவு.
தமது
கொள்கையைத் தாங்கி நிற்கும் சத்தியே ஆதரவு எனப்பெறும்.
ஆதரித்திசை கற்றுவல் லார்சொலக் கேட்டுகந்தவர் (திருஞான -
தேவா - நட்டராகம் - திருவலஞ்சுழி - 11),உன்னையல்லா
லடையாதென தாதரவே (திருஞான - தேவா - கௌசிகம் -
திருவான்மியூர்) முதலிய திருவாக்குக்களும் காண்க.
இன்ப ஆதரவால்
- அன்பொடு சென்று - இன்பமும்
அன்பும் பிரியா இயல்பினையுடையன. இறவாத வின்ப வன்பு,
முடிவிலா இன்பமான அன்பினை யெடுத்துக் காட்ட, இன்பமே
என்னுடைய யன்பே முதலியவை காண்க.
அன்பொடு சென்றெதிர் வணங்கி அன்புக் கடையாளம்
எதிர்சென்றுவணங்குதல் முதலியன.
முந்தை யெம்பெருந்
தவத்தினால் என்கோ? -
முற்காலத்துச்செய்த எங்கள் பெருந்தவத்தின் காரணமாக. இப்போது
இதனைப் பெறத்தக்க தவம் யாதும் நீயான்,
வலஞ்செய்து
வணங்கவெளி வந்தவிது முந்தென், குலஞ்செய்தவ மென்றினிது கூற
- கையடைப்படலம் - (6) என்று கம்பர் இக்கருத்தையே
விரித்திருத்தல் காண்க. என்கோ என்று சொல்லுவேனோ? -
என்பேனோ? ஐயப்பாட்டினையும் தெளிவையும் உணர்த்திய வினா.
என் - பகுதி; கு - தன்மை யொருமை
விகுதி; ஒ - வினா.
என் - கோமுனிவர்
- எனப் பிரித்து எனது இறைவனாகிய
பெருமுனிவர் - முனிவர் தலைவனார் - எழுந்தருளியது முந்தையெம்
பெருந்தவத்தினாலாயது எனக் கூட்டியுரைத்தலுமொன்று.
இப்பொருட்கு - ஆயது என்ற வினைச்சொல் தொக்கி நின்றது.
முனிவர்
- இவர் தூர்த்த வேடத்துடன் வந்தாரேனும், குலம்
-
குணம் முதலியவற்றைப் பாராது, திருவேடத்தையே நோக்கி
வந்திக்குமியல்புடையர் நாயனாராதலின் மறைச்சிவ வேடத்தையே
பாராட்டி முனிவர் என்றார்.
என்கொல்
- தவத்தினாலே கொல் - என்பனவும் பாடங்கள்.5
|