409.
|
என்று
கூறிய வியற்பகை யார்முன்
|
|
|
னெய்தி நின்றவக் கைதவ மறையோர்
கொன்றை வார்சடை யாரடி யார்கள்
குறித்து வேண்டின குணமெனக் கொண்டே
யொன்று நீரெதிர் மறாதுவந் தளிக்கு
முண்மை கேட்டுநும் பாலொன்று வேண்டி
இன்று நானிங்கு வந்தன னதனுக்
கிசைய லாமெனி லியம்பலா மென்றார்.
|
6 |
(இ-ள்.)
வெளிப்படை. இவ்வாறு கூறிய இயற்பகையார்
முன்னே, வந்து நின்றவராகிய அந்தத் தூர்த்தவேடவேதியர்
கொன்றை சூடிய சடையையுடைய பெருமானடியார்கள் எண்ணி
வேண்டியவை எவையேனும் அவை குணமாம் என்றே கொண்டு
அவர் வேண்டியவை ஒன்றையும் மறுக்காது விருப்பத்துடன்
கொடுக்கும் உண்மைத் தன்மையைக் கேட்டு உம்மிடத்தே
ஒருபொருளை வேண்டி இன்று இங்கு நான் வந்தேன்; அதற்கு நீர்
இசையக் கூடுமாயின் சொல்லலாகும் என்று கூறினார்.
(வி-ரை.) கைதவ
மறையோர் -கைதவம் - கீழ்மைத் தன்மை.
இது, வந்த பெருமானுக்காவது மறையோருக்காவது பொருந்தியதன்று,
தாங்கி வந்த தூர்த்தவேடம் உண்மையை மறைத்ததாதலின்
அதற்கடையாயிற்று, தூர்த்த வேட மென்பது வருவிக்கப்பட்டது.
சடையார் அடியார்கள் - ஆறாம் வேற்றுமைத்
தொகை.
குறித்து வேண்டின
- இவரை உய்விக்க எண்ணியதொரு
குறிக்கோளை உட்கொண்டு இவர்பால் வேண்டியவற்றை யெல்லாம்.
குறிக்கோளை உட்கொள்ளுதலாவது இவர் பொருளை இறைவனுக்கும்
அடியார்க்கும் ஆக ஆக்கி இவர்க்கு நன்மைபயத்தலேயாம்.
ஆதலின் வேண்டின - என்றமையாது குறித்து வேண்டின
என்றார்.
வேண்டின - இரண்டாம் வேற்றுமைத் தொகை.
குணமென -
குணமல்லாவிடினும் - குணமாகக் காணப்படாவிடினும் குணமெனக்
கொண்டு. பின் நிகழ்ச்சிக் குறிப்பு.
மறாது உவந்து அளிக்கும்
- மறுக்காது அளித்தலேயன்றி,
விருப்புடனுமளித்தலே பயன் தரும் என்பது நூற்றுணிபு. ஆதலின்
மறாது அளிக்கும்- என்றதனோடமையாது உவந்தளிக்கும் - என்றார்.
சிவனையுன்னிச் செம்பொன் விருப்புடனீ வார்பெறுக வீடு என்ற
பெரியோர் வாக்கும் காண்க.
உண்மை கேட்டு
- உண்மை - உள்ளத்தின் தன்மை.
அளிக்கும் உண்மை - அளிப்பதாகிய செயலுக்குக்
காரணமாயிருந்த
மனப்பான்மை. கொடுக்குமியல்பு - 405 என்றதிற் காண்க.
அளித்த,
வார்த்தை கேட்டுன் மலரடி யடைந்தேன்
- (1)
இன்பமி யானுங் கேட்டுநின் னிணையடி யடைந்தேன்
- (6) |
பெருமையும்
பெற்ற, பெற்றி கேட்டுநின் பொற்கழ
லடைந்தேன்- (7) |
என்பனவாதி
நம்பிகளது தேவாரங்கள் காண்க.
[தக்கேசி - திருநின்றியூர்
இவ்வாறு தமது பேரருட் டிறங்களைக் கேட்டு உயிர்கள்
தம்மை வேண்டிவந்து அடைந்துய்ய நின்ற இறைவன், இங்கு
இவ்வடியவர்பால் வந்து, அவர் அளிக்கும் பெருமை கேட்டு அதனை
வேண்டி வந்ததாகக் கூறி எளியவராய்வந்த பெருங்கருணைத்
திறத்தினை உன்னுக. வேண்டுவார் வேண்டவதேயீயும் கருணாநிதி
தம்மைப்போலவே தம் அடியார்க்கு வேண்டியதேயீயும் இவரைக்
காண வந்ததும் ஒரு சிறப்பாம். இப்பாட்டு மேலே காட்டிய
நம்பிகளது தேவாரங்களின் யாப்பமைதியும் கருத்தமைதியும்கொண்டு
விளங்குதலும் காண்க.
கேட்டு
- எல்லா உயிர்க்குள்ளேயும் உயிர்க்குயிராகி
உடனிருந்தே அறியும் இறைவன் இங்கு கேட்டு என்றருளியதும் ஒரு
வியப்பேயாம். நாயனாரது இவ்வுண்மைத் தன்மையை யினி யாவரும்
விளங்கக்கேட்டு உய்யச் செய்விப்பதற்காகத் தாம் கேட்டார் என்க.
காட்டுவான் வந்தார் - 407 என்றதிற் காண்க.
ஒன்று வேண்டி வேண்டி
- வேண்டுதல் வேண்டாமையி
லானாயினும் நாயனார்க்கும் மனைவியார்க்கும் அருளவும், உலகர்க்கு
உண்மை காட்டவும் இங்கு ஒன்றை வேண்டினான். ஒன்று வேண்டி
என்பதற்கு அவ்வாறருளுவதாகிய ஒரு பயனைக் குறித்து என்ற
குறிப்புமாம். ஒன்று - இரத்தலின் இழிபு குறித்து முதலில்
அப்பொருள் இன்னதென்று குறியாமற் கூறியபடியாம். நல்லா
றெனினுங் கொளல்தீது என்றார் நாயனார். இரத்தலை நோக்கிக்
குறளாய் அங்கங் குறுகியமால், அது தீர்ந்ததும் வளர்ந்தனர் என்று
அழகுபட எடுத்துக் கூறினர் கம்பரும்.
இசையலாமெனின்
- உவந்தளிக்க இசையக்கூடுமானால். நான்
வேண்டிய அவ்வொன்று உலகிற் பிறர் எவராலும் குணமெனக்
கொண்டு உவந்தளிக்க இயலாதென்பது குறிப்பாம். எனின்
-
பிறர்க்குக் கூடாமை குறித்தது. 6
|