41. |
பொருவ
ருந்தவத் தான்புலிக் காலனாம்
அருமு னியெந்தை யர்ச்சித்து முள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப் புலியூரென்
றொருமை யாளர்வைப் பரம்பதி யோங்குமால். |
31 |
(இ-ள்.)
பொருவரும் ... உள்ளது - (முன்னே பலர் அருச்சித்து
வழிபட்டதன்றி) ஒப்பற்ற தவத்தையுடைய வியாக்கிரபாதர் என்னும்
எனது தந்தையாரும் அருச்சிக்கப்பெற்று உள்ளது; பெருமைசேர்
...
ஓங்குமால் - அன்றியும், எல்லாப் பெருமைகளும் வந்து அடையும்
பெரும்பற்றப் புலியூர் என்ற பேருடன் முனிவர்களுக்கு வைப்பாகிய
அப்பதி ஓங்கி விளங்கும்.
(வி-ரை.)
பெரும் பற்றப் புலியூர் - புலிக்கால் முனிவர்
(வியாக்கிர பாதர்) பூசித்தமையால் இது புலியூர் எனப்பெற்றது.
மாமுனிவர்களுக்குப் பெரிய பற்றுக்கோடாய் உள்ளதாதலின் -
பெரும்பற்றப்புலியூர் என்பர்.பற்றற்ற வரும்
பற்றுவது என்பதாம்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை” என்ற திருக்குறளில், “அப்பற்றினைப்
பற்றுக” என்றது வீட்டு நெறி நூல்களில் ஓதிய உபாயமாதலின்
இத்தலத்தைப் பற்றுதலும் ஓர் உபாயமாயிற்று. “...துறந்தோருள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூரானை”,
“திருச்சிற்றம்பலஞ்
சென்றடைந்துய்ம்மினே” என்ற திருவாக்குக்களும் காண்க.
இத்தலத்திற்குரிய பல மேன்மைகள் காரணமாக வரும் பல
பெயர்களிலும் இப்பெயரே சிறந்ததாகலானும், இங்கே இவ்வரலாறு
சொல்பவரும் கேட்பவரும் பற்றற்ற முனிவர்களாதலானும், பற்றற்ற
முனிவர்களுக்கே அது பற்றுக்கோடா மெனில், மற்ற
ஆன்மாக்களுக்கு மேலும் மிகவும் அடைதற்குரியதென்பது
விளங்குமாதலானும, இப்பெயரினையே குறித்துக் கூறினார் என்பது.
அப்பர் சுவாமிகள் பெரிய திருத்தாண்டகத் திருப்பதிகத்தை
இப்பெயராலே அருளியிருத்தலும் காண்க. அத்திருப்பதிகத்தையே
அடியவர்கள“தஞ்சிந்தை பிரியாத பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ்”
(திருநா - புரா - 175) எனப் பின்னர்க் குறிப்பதும் காண்க. தாம்
பாலுக்காகப் பசித்தழுதபோது பாற்கடலையே கொடுத்த நன்றியை
முதலிலே நினைவு கூர்ந்தார் என்பதுமாம். வியாக்கிரபாதர்
தவஞ்செய்து அருச்சித்த வரலாறு கோயிற் புராணம் முதலியவற்றுட்
காண்க.
அருச்சித்தல்
- இங்குத் தவஞ்செய்து வழிபடுதல் என்ற பொருளில் வந்தது. அருச்சனை செய்யப் பூப்பறித்தற்கு
இம்
முனிவர்பெருமான் புலிக்காலுருவங் கொண்டமையும் கருதுக; தம்மை
வழிபட்டு வினவிய முனிவர்களுக்கு மேலும் கருத்து ஊன்றுதற்காகத்
தமது தொடர்புபற்றி எடுத்த தகுதியும் காண்க.
பெருமைசேர்
- பெருமைகள் யாவும் வந்து புகலடைந்த -
என்க. புராண இதிகாசங்களால் மட்டுமேயன்றிக் கைவல்யம்
சாந்தோக்கியம் என்ற உபநிட தங்களால் (வேதம்) துதிக்கப்பெற்று
வேத சம்மதமானதலமாகிய பெருமை விராட்புருடனுக்கு
இருதயத்தானமாகிய பெருமை - [“நீவிரிருவரும் கண்ட மன்றம்
இதயமாம்” என்ற திருவிளையாடற் புராணம் காண்க.] சற்புத்திரப்
பேற்றிற்காகத் தவஞ் செய்த அநசூயை யம்மையாரது அஞ்சலித்த
கையிலே ஆதிசேடன் குமாரராக வந்து விழுந்த காரணத்தால் (பத்
- விழுதல்; அஞ்சலி - கூப்பியகை) பதஞ்சலி எனும்
பேர்பெற்ற
முனிவர் பூசித்த பெருமை சேர் என்ற எதிர்காலக் குறிப்பினால்
இப்புராணம் பாடிய சேக்கிழார் பெருமானுக்கு அடியெடுத்துக்
கொடுத்தும், உண்ணின் றுணர்த்தியும் உபகரிக்கும் பெருமை -
காண முத்தி கொடுக்கும் பெருமை - முதலிய பல பெருமைகளும்
உள்ளிட்டுரைக்க நின்றது.
ஒருமையாளர்
- “செம்மை வெண்ணீற் றொருமையினார்”
(சண்டீசர் புரா - 2) என்ற இடத்திற்போலச் சிவபெருமான்
ஒருவரிடத்திலே யன்றி வேறொன்றிலும் சிந்தை செல்லாதவர்
எனலுமாம். “ஒருமையால் உலகை வெல்வார்” (தடுத் - புரா - 196)
என்பதும் காண்க. தாம் வேறு, இறைவன் வேறு, என்றில்லாமல்
பெருமானும் தாமும் அத்துவிதக் கலப்பினாலே ஒரு தன்மைப்பட்ட
மனத்தையுடையவர்களே ஒருமையாளர் எனப்பெறுவர். ஒருமை -
ஒன்றுபட்ட தன்மை. “தம்பிரானைத் தன்னுள்ளந் தழீஇயவன்”
என்றதும் காண்க. இதனைப் “பொது நீக்கித் தனைநினைய
வல்லோர்க் கென்றும், பெருந்துணையை” என்ற
திருத்தாண்டகத்தும் காண்க.
ஒருமையாளர்
வைப்பாம் - அருச்சித்த புலிமுனிவர்க்கே யன்றி ஏனை முனிவர்களுக்கும் தில்லைவாழந்தணர்
முதலியோர்க்கும்
நித்தமாகிய சேமநிதி. வைப்பாம் - முக்காலத்தும் நிகழ்வது என்க.
ஒங்கும்
- எக்காலத்தும் வளர்ந்து விளங்கும்.
பெருமைசூழ்
- என்பதும் பாடம். 31
|