410. என்ன வவ்வுரை கேட்டியற் பகையார்
 
       “யாது மொன்றுமென் பக்கலுண் டாகி
லன்ன தெம்பிரா னடியவ ருடமை;
     யைய மில்லை;நீ ரருள்செயு“ மென்ன,
“மன்னு காதலுன் மனைவியை வேண்டி
     வந்த திங்“கென வங்கண ரெதிரே
சொன்ன போதிலு முன்னையின் மகிழ்ந்து
     தூய தொண்டனார் தொழுதுரை செய்வார்.
7

     (இ-ள்.) என்ன...என்ன - வேதியர் இவ்வாறு சொல்ல,
அதனைக் கேட்டு இயற்பகையார் “நீர் வேண்டியதொன்று
எப்பொருளேயாயினும் அஃது என்னிடத்தே உள்ள பொருளாகில்,
அது எம்பிரா னடியவருடைமையேயாம்; இதில் சிறிதேனும் ஐயம்
இல்லை; நீர் வேண்டிய பொருளை இன்னதென அருளிச் செய்வீராக!
என்று சொல்ல; மன்னுகாதல்...என - “நிலைபெற்ற காதலின் உனது
மனைவியைப் பெறவேண்டி நான் இங்கு வந்ததாம்“ என்று வேதியர்
சொல்ல;

     அங்கணர்...செய்வார்
- (காணாக் காலத்துப் புறத்திலேயும்
சொல்லத் தகாத இம்மொழிகளை) அங்கணர் நேர் எதிரே நின்று
சொல்லிய போதிலும் (அதனையும் கேட்டுப் பொறுத்து
நின்றதனோடமையாது) முன்னைவிட மிக மகிழ்ச்சி யுடையராய்த் தூய
தொண்டராகிய நாயனார் அவரை மேலும் தொழுது செல்வராகி,


     (வி-ரை.) யாதும் ஒன்றும் - எவ்வகை உயர்ந்து நான் பிரியக்
கூடாத தாயினும்; அஃது தனித்த ஒன்றேயாயினும்.

     எம்பிரா னடியவர் உடைமை - அடியவராகி நின்ற
தேவரீராகிய எம்பிரானது உடைமை என்ற குறிப்புமாம்.

     உலகில் எல்லா உயிர்களும் சிவனுக்கு அடிமைகளே;
உயிரல்லாதவை யெல்லாம் அவனது உடைமையே; “எல்லா
முன்னடிமையே, எல்லா முன்னுடைமையே“ என்பது பெரியோர்
வாக்கு. ஆதலின் என்னதென்று ஓருடைமையுமில்லை; நான்
அடிமையாதலின் சொத்துக்குச் சுதந்தர மில்லேன்;
என்னிடமிருப்பவை என்னை ஆளாக உடைய இறைவனுடையன;
அவனடியாருடையன என்பது கருத்து.

     ஐயமில்லை - “இசையலா மெனின்“ என்ற உமது மொழி
ஐயத்தை உட்கொண்டுள்ளது; அவ்வாறு ஐயத்தினை என் திறத்திலே
தேவரீ கொள்ள வேண்டுவதில்லை.

     அருள் செயும - இது, அடியார்கள் தம்பக்கல் பெறுவன
வெல்லாம் தம்மைப் பயன்படுத்தி ஆளாக்கித் தமக்கு அவர்கள்
செய்யும் அருளேயாம் என்று கொண்டொழுகிய நாயனாரது இயல்பு
குறித்த மொழி. “பேறெ லாமவ ரேவின செய்யும் பெருமையே
யெனப் பேணிவாழ்“ (406) எனக் குறித்ததும் காண்க.

     இங்கு இறைவன் தம்பால் மனைவியாரை வேண்டிப்
பெறுவதனால் “தக்க பெருகிய அருளினீடு பேறளிக்“ கவும் (437),
உலகர்க்கு அடிமைத் திறத்தினைக் காட்டி உய்விக்கவும்
வந்துள்ளாராதலின் அவ்வருட் குறிப்புத் தோன்ற அங்கணர் என்றார்.
புறகிலும் சொல்லவும் தகாததும், நினைக்கவும் தகாததும், நெறிதவறிய
செயல் குறித்ததும் ஆகிய பழிச்சொல்லை எதிரிலே
வெளிப்படையாய்ச் சொல்லும் வன்கண்மை யுடையராயினும் இஃது
நாயனார் - மனைவியார் - உலகர் முதலிய யாவர் மாட்டும் வைத்த
அங்கண்மையாகிய அருளையே உட்கொண்டதாகும்
என்பார் இங்கு அவ்வன்கண்மை சொல்லியவிடத்து வேதியரை
அங்கணர் என்ற பெயராற் குறித்தார்.

     எதிரே சொன்ன போதிலும் - புறகிலும் சொல்லத் தகாதது
என்பார் எதிரே என்றும், மனத்தில் நினைக்கவும் தகாததை
வாயினாற்சொன்னார் என்பார் சொன்ன என்றும் கூறினார்.

     முன்னையின் மகிழ்ந்து - முன்னை மகிழ்ந்ததினும் மிக்க
பெருமகிழ்ச்சி கொண்டு முன்னை மகிழ்ந்ததென்றது “எந்தை
யெம்பிரானடியவ ரணைந்தார்“ (408) என்ற மகிழ்ச்சியை முன்னை -
இவ்வாறு கேட்பதற்கு முன் என்பர் மகாலிங்கையர். பெரு
மகிழ்ச்சிக்குக் காரணம் தம்பால் உள்ளபொருளையே வேண்டியதாம்.
இதனைவரும் பாட்டில் நாயனாரே விளங்கக் கூறுதல் காண்க.

     தொழுது - மீண்டும் தொழுதது தம்பால் இல்லாத பொருளைக்
கேட்டு, “இல்லை என்ற சொல்லைத் தம் வாக்கில் வரும் நிலையும்,
அடியவர் வேண்டியது கொடுத்து மகிழச் செய்யாத நிலையும், தம்பாற்
சாராத வகையிலே, உள்ளதொருபொருளையே வேண்டி
உபகரித்ததற்காக மீண்டும் தொழுதார். முன்னர்த் தொழுத வகை
408-ம் பாட்டிற் காண்க.

     மன்னு காதல் - இதனை முதனிலைத் தீவகமாக்கி, உன்
காதல் நிலைபெற்ற பொருளாகிய உனது மனைவி என நாயனார்க்குக்
கூட்டியும், மன்னு காதலின் வேண்டி என்று இயைத்து, உன்
மனைவியை எனது மன்னிய காதலின் வேண்டிஎன வேதியர்க்குக்
கூட்டியும் உரைத்தலுமாம். சரித நிகழ்ச்சியிற் போலக் காதல் என்ற
சொல்லும் ஈரிடத்தும் பொருந்த வைத்திருப்பதன் அழகு காண்க.

     தூய தொண்டனார் - தூய துறவிகட்கும் தூயரானவர்.

     யாதும - உயர்வு சிறப்பும்மை. ஒன்றும் - முற்றும்மை.

     முன்னையின - சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது.

     அந்தணர் - என்பதும் பாடம். 7