411. “இதுவெ னக்குமுன் புள்ளதே வேண்டி
 
       யெம்பி ரான்செய்த பேறெனக்“ கென்னாக்
கதுமெ னச்சென்று தம்மனை வாழ்க்கைக்
     கற்பின் மேம்படு காதலி யாரை
“விதிம ணக்குல மடந்தை!யின் றுனையிம்
     மெய்த்த வர்க்குநான் கொடுத்தன“ னென்ன,
மதும லர்க்குழன் மனைவியார் கலங்கி,
     மனந்தெ ளிந்தபின் மற்றிது மொழிவார்.
8

     (இ-ள்.) இது...என்னா - “என்னிடம் முன்பே உள்ளதொரு
பொருளையே வேண்டிய வகையினாலே எம்பிரான் எனக்குத் தந்த
பேறு இது!“ என்று சொல்லி; கதுமென...என்ன - நாயனார்
விரைவிலே மனையினுட் சென்று, தமது மனைவாழ்க்கைக்
குரியராயும், கற்பிற் சிறந்தாராயும், தம் காதலுக்குரியராயும் உள்ள
தமது மனைவியாரை நோக்கி, “ விதியினாலே மணஞ்செய்யப் பெற்ற
எனது குல மடந்தையே! இன்று உன்னை இங்கே வந்துள்ள
இவ்வுண்மைத் தவசியாருக்கு நான் கொடுத்துவிட்டேன்“ என்று
சொல்ல; மதுமலர்...மொழிவார் - தேன் பொருந்திய புதிய
பூக்களைச் சூடிய கூந்தலையுடைய மனைவியார் அதனைக்
கேட்டலும் கலங்கிப் பின் தெளிந்துகொண்டு சொல்வாராகி,
  

     (வி-ரை.) முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் எனக்குத்
தந்த பேறு இது - என மாற்றி உரைத்துக் கொள்க.

     எம்பிரான - பிரானாகவே நான் கொள்ளும் வேதியராகிய நீர்.
எம்பிரான் - பெருனாகிய இறைவன் எனக் கொண்டு இவரை
இவ்வாறு என்பால் உள்ளதே வேண்டுமாறு இயக்கியது இறைவன்
தந்த பேறு என்றுரைப்பாரு முளர்.

     கதுமெனச் சென்று - இச்செயல் அடியார் வேண்டுவதனை
அளித்தலில் நாயனார்க்கிருந்த ஆர்வமும் விரைவும் குறித்தவாறு.
மொழியும் செயலும் ஒருங்கே நிகழ்ந்தன என்பதாம். ஒழுக்கத்தாலும்
அன்பினாலும் குறைவுடையாளாயின் கணவன் அவளை நீத்துக்
கொடுத்துவிடவும் கூடும். இவரோ கற்பின் மேம்பட்டவர்;காதலியார்;
எனவே, இவ்விரைவு அடியார்க்களித்தலில் உள்ள தீவிரம்பற்றி
எழுந்ததென்க.

     தம்...காதலியாரை - தம் - தமக்கே உரிய; மனைவாழ்க்கை
- இல்வாழ்க்கைக் குரிய. இல்லற இயலில் விதிக்கப் பெற்றபடி எல்லா
அறங்களும் இயல்வதற்கு நாயகனுக்குத் துணை நிற்பார் என்றது
குறிப்பு. “மனைக்கடனுடைய திருவெண்காட்டம்மை“ (சிறுத் - புரா -
38), “மனையறத்தின் வேராகி விளங்குதிரு வெண்காட்டு நங்கை“
(மேற்படி 17) என்பவை காண்க. கற்பின்மேம்படு -
கற்பிலக்கணத்திற் சிறந்த காதலியார் - காதலுக் கிருப்பிடமாவார்;
இவற்றாலெல்லாம் நாயனாரது கொடைப் பொருளின் அருமை
குறித்தவாறு. பின்னர் மனைவியார் இப்பணியை ஏற்று
மேற்கொண்டமைக்குக் காரணமாக வரும்பாட்டிற் கூறுவதற்குத்
தோற்றுவாய் செய்தவாறுமாம்.

     விதிமணக் குலமடந்தை - மடந்தையே!; அண்மைவிளி
மணஞ்செய் காலத்தில், உமது சொற் கடவாது நடந்து வருவேன்'
என்று நாயகி வாக்குறுதி செய்யும் திருமண நூல் விதியை இங்குக்
குறித்து மனைவியார்க்கு நாயனார் சிறப்பாக நினைப்பூட்டியவாறு.
சொற்றிறம்பாமை கடன் என்பது குறிப்பாம். குலமடந்தை -
குடிப்பிறப்பாலும் திறம்பாமை அமையும் என்ற குறிப்புமாம்.

     மெய்த்தவர் - தூர்த்த வேடமாகிய மாறுபாடு கருதி, நீறு
பூசிய உண்மைத் திருவேடத்தை ஒதுக்காது பாதுகாத்தற் பொருட்டு
மெய்த்தவர் என்றார். “சீலமிலரே யெனினுந் திருநீறு சேர்ந்தாரை,
ஞாலமிகழ்ந் தருநரக நண்ணாம லெண்ணுவார்“ (நரசிங்கமுனையர்
புராணம் - 7) எனப் பின்னர் கூறுவதும் காண்க. மடந்தை - பருவங்
குறித்த தென்றுரைப்பாரு முண்டு.

     கலங்கி - கடைபோகக் கைக்கொண்டு காப்பேன் என்று
மணஞ்செய் காலத்து நாயகன் கூறிய நூல் விதிவழி நின்ற
சொல்லுக்குக் கெடுதி நேருமோ என்றும், கற்பிலக்கணத்துடன்
மாறுபடுமோ என்றும், ஐம்பெரும் பாவங்களில் ஒன்றாய் நூலகளால்
விலக்கப்பட்டதாகிய பிறன்மனை நயந்தமை எனும் தீமை
இவ்வடியவரைச் சாருமோ என்றும் கலங்கினார் என்க.

     மனந் தெளிந்த பின - கணவனார் ஆணை வழி நிற்றலே
கடன் என்றும், அவ்வாறு அதன்வழி நில்லாதிருப்பதே
தவறானதென்றும் தெளிந்த பின்னர்.இவ்வாறே “அன்னவரு மிரங்கிப்
பின் மகிழ்ந்து“ (கண் - புரா - 45.) என்றதும் காண்க.

     கலங்கினதற்கும் தெளிந்ததற்கும் வேறு வேறு வகைகளாகப்
பொருள் கூறுவாருமுண்டு. இதுவரை அடியார்க்குரிமையாக்கத்
தகுதியற்றதாகிய குற்றமுள்ள பொருளாய்த் தம்மை எண்ணினார்
என்று கலங்கினார் எனவும், தகாதமொழி கேட்டலிற் கலங்கினார்
எனவும,் இஃது உலகிலில்லாச் செயல் என்று எண்ணத் தோன்றியது
பற்றிக் கலங்கினார் எனவும் இன்ன பிறவுங் கூறுவர். குற்ற
நீங்கியவராகக் கொண்டு அடியார்க்குரிய பொருளாந் தகுதி கண்டார்
எனத் தெளிந்தார்.
என்றும், உலகவழி நின்று ஒன்றும் கருதலாகாது;
இது திருவருள் நிகழ்ச்சியேயாக இருத்தல் வேண்டும்; மேலே
விளைவதைப் பார்ப்போம் என்று தெளிந்தனர் என்றும் பிறவாறும்
உரைப்பர். இவை யீண்டைக்குப் பொருந்தா என்க.

     எம்பிரான் தந்த - கற்பு - மேம்பாடு - மொழிந்தார் -
என்பனவும் பாடங்கள். 8